வடை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. வடைகளில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக மெது வடை, மசால் வடை, சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, மற்றும் கீரை வடை மிகவும் பிரபலமானவை. பொதுவாக பலரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வடைகளை வழக்கமாக சுவைப்பார்கள். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான முருங்கைக்கீரை பருப்பு வடை. முருங்கைக்கீரை வடையின் ஸ்பெஷல் என்னவென்றால் இதில் நாம் பயன்படுத்தும் முருங்கைக்கீரையில் உடம்புக்கு மிகவும் அவசியமான விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் இருக்கின்றது.
மேலும் இதை மற்ற வடைகளை போன்றே எந்த ஒரு சிரமமுமின்றி மிக எளிதாக நாம் செய்து விடலாம். அது மட்டுமின்றி நாம் வழக்கமாக உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான சத்தான மாற்றும் கூட. பொதுவாக குழந்தைகளுக்கு முருங்கை கீரையை பொரியல் செய்து கொடுத்தால் அதை அவர்கள் உண்ண அடம் பிடிப்பார்கள். ஆனால் இவ்வாறு முருங்கைக்கீரை பருப்பு வடையை செய்து கொடுத்தால் அவர்களை கேட்கக்கூட வேண்டாம் அவர்களாக தன்னால் இதை விரும்பி உண்பார்கள். இன்னும் வேண்டும் என்று கேட்டு உண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்பொழுது முருங்கைக்கீரை பருப்பு வடை செய்வதற்கு எளிமையான செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.
முருங்கைக்கீரை பருப்பு வடை | Drumstick Leaves Vada Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 கப் கடலை பருப்பு
- 2 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- 10 பல் பூண்டு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 1/2 கப் முருங்கை கீரை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் முருங்கை கீரையை நன்கு சுத்தம் செய்து விட்டு தண்ணீரில் அலசி, தண்ணீர் வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு சேர்த்து அரைக்கவும். பிறகு அதில் ஊற வைத்த கடலைப்பருப்பை சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் அரைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அதில் தேவையான அளவு உப்பு, சிறிதளவு ஊற வைத்த கடலை பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
- பின் அதில் முருங்கைக் கீரையை சேர்த்து எல்லாத்தையும் ஒன்று சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தடவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்துள்ள வடையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை பருப்பு வடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான நெத்திலி மீன் வடை இதுவரை செய்ததில்லை என்றால் உடனே இப்படி செய்து பாருங்கள் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்