இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி எப்போது? மற்றும் வழிபாட்டு முறை!!

காக்கும் தெய்வம் என்று அழைக்கப்படுபவர் மகாவிஷ்ணு. இந்த உலகத்தில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுபவர். அவரது அவதாரங்களில் முக்கியமானது, கிருஷ்ண அவதாரம். அவர் அவதரித்த நாளையே ‘கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம். இந்து மதத்த

By ·

காக்கும் தெய்வம் என்று அழைக்கப்படுபவர் மகாவிஷ்ணு. இந்த உலகத்தில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுபவர். அவரது அவதாரங்களில் முக்கியமானது, கிருஷ்ண அவதாரம். அவர் அவதரித்த நாளையே ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று கொண்டாடுகிறோம். இந்து மதத்தில் மிக முக்கியமான பண்டிகையாகும். இது வீட்டிலிருந்து கோயில் வரை மிகுந்த ஆடம்பரத்துடனும் நிகழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. இது ஆன்மீக பண்டிகையாக மட்டுமின்றி, சமூகத்தை ஒன்றுபடுத்தும் பண்டிகையாகவும், உற்சாகத்தையும், நட்புறவையும் வளர்த்து, பெருகச் செய்யும் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் நாம் எப்படி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் நீங்கி இன்பம் பயக்கும் என்று பார்ப்போம். 

கிருஷ்ண ஜெயந்தி 2025

கிருஷ்ண ஜெயந்தி (ஜென்மாஷ்டமி) என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாள். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் சேர்ந்த நாளில் கண்ணன் மதுராவில் பிறந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதிகாலை 01:41 மணிக்கு துவங்கி, இரவு 11:13 மணி வரை இருக்கும். ஆனால் அந்த நாளில் அஷ்டமி திதி இருந்தாலும், கார்த்திகை நட்சத்திரம் தான் என்பதால் முருகப் பெருமானுக்குரிய ஆடிக்கிருத்திகை நாளாக கொண்டாடப்பட உள்ளது. ஆனால் ரோஹிணி நட்சத்திரம் அடுத்த நாளான ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 6:49 மணிக்கு ஆரம்பமாக, 18ஆம் தேதி அதிகாலை 4:28 மணி வரை இருக்கும். இதன் காரணமாக, பெரும்பாலானோர் அஷ்டமி திதியை மையமாகக் கொண்டு ஆகஸ்ட் 16ம் தேதியை கிருஷ்ண ஜெயந்தி என கொண்டாடுவர். சிலர் ரோஹிணி நட்சத்திரம் வரும் ஆகஸ்ட் 17 கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவர். எனவே இரண்டு நாட்களிலும் கண்ணனை வரவேற்று கொண்டாடி மகிழலாம்.

கிருஷ்ண ஜெயந்தியின் முக்கியத்துவம் 

கிருஷ்ண ஜெயந்தி என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பிறந்த நாளாகும். இதன் வழிபாடு இந்து சமயத்தின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இது தமிழில் ஆவணி மாதம் அஷ்டமி தினமும், ரோகிணி நட்சத்திரத்துடன் சேர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஸ்ரீகிருஷ்ணனின் அவதாரத் திருநாளாகும். “ஜெயந்தி” என்ற சொல் சுப மங்கலகரமான நட்சத்திரங்களின் கூட்டம் எனும் பொருள்பெற்று, கிருஷ்ணர் பிறந்த நாளில் வானில் அனைத்து சுப நட்சத்திரங்களும் கூடியதால் சிறப்பாக அழைக்கப்படுகிறது‌. வட இந்தியாவில் ராச லீலா மற்றும் தகி அண்டி போன்ற சிறப்பு நிகழ்வுகள் இவ்விழாவோடு கொண்டாடப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவில் கோகுலாஷ்டமி என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா மனிதர்களுக்கு அவர்கள் வாழ்க்கையின் தர்மம், பக்தி, கடமைகள் ஆகியவற்றை நினைவூட்டுவது மட்டுமல்லாமல், கிருஷ்ணரின் வாழ்க்கைவரலாற்றையும் நினைவூட்டுகிறது. 

வழிபாட்டு நேரம்

கிருஷ்ணஜெயந்தி வழிபாடு பெரும்பாலும் மாலை 6 மணி முதல் 9:41 மணி வரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நேரத்தில் ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் இணைந்து இருக்கும். விரதம் இருப்போர் காலை எழுந்ததும் குளித்து விட்டு விரதத்தை தொடங்கி மாலை நேரத்தில் பூஜை செய்ய வேண்டும். பின் அதே நாளின் இரவு முழுவதும் கிருஷ்ண பாடல்களை பாடி கிருஷ்ணருக்கு வழிபாடு செய்யலாம். பின்னர் மறுநாள் காலை பூஜையை முடித்து விரதத்தை முடிக்கலாம்.

வழிபாட்டு முறை 

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவர்கள் வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையில்  கிருஷ்ணரின் படம் அல்லது சிலையை வைத்து வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். கிருஷ்ணரின் பாதங்களை அரிசி மாவினால் வீட்டு வாசல் முதல் பூஜை அறை வரை வரைந்து வரவேற்க வேண்டும். பின் விளக்கு ஏற்றி விட்டு, கிருஷ்ணருக்கு விருப்பமான நைவேத்தியமான பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், முறுக்கு , சீடை, லட்டு ஆகிய பொருட்களை படைத்து வழிபடலாம். மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் பூஜையை தொடங்கி, கிருஷ்ணருக்கான மந்திரங்களை ஜபம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். மறுநாள் காலை கற்பூர ஆரத்தி காட்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து வழிபட்டால் நம்முடைய கர்ம வினைகளால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபடலாம்.‌ குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் குழந்தை பேறு பெறலாம். 

இதனையும் படியுங்கள் : பொருளாதார சிக்கல் நீங்க கிருஷ்ணர் வழிபாடு

Recipes AMP · Quick view
View full