சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டிய எளிய விஷயங்கள்!!
நவக்கிரகங்களில் சனி கிரகம் என்றதும் பலருக்கும் பயம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு சனி தோஷம் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் எல்லோரும் நினைப்பது போல சனி பகவான் ரொம்பவும் மோசமானவர் அல்ல. ஒரு ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவும
நவக்கிரகங்களில் சனி கிரகம் என்றதும் பலருக்கும் பயம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு சனி தோஷம் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் எல்லோரும் நினைப்பது போல சனி பகவான் ரொம்பவும் மோசமானவர் அல்ல. ஒரு ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும். ஒரு ஜாதகர் இந்த ஜென்மத்தில் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான். எனவே, ஜாதகத்தில் சனி பகவானின் எதிர்மறை தாக்கம் இருந்தால் அதற்குரிய பரிகாரங்களையும் வழிபாடுகளையும் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தனி ஒரு நபரின் சவால்கள் நிறைந்த காலத்தை கொண்டு வரும் இந்த சனி பகவானின் தாக்கத்தை சமாளிக்க, சனிக்கிழமை தோறும் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
சனியின் தாக்கம் குறைய செய்ய வேண்டியவை
சனி பகவானின் மந்திரம்
சனி தோஷம், ஏழரைச் சனி, அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, “ஓம் சம் சனைச்சராய நமஹ” எனும் மூல மந்திரம் அல்லது “ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ சனைச்சர ப்ரசோதயாத்” இந்த மந்திரத்தை சனிக்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று நவகிரக சந்நிதியில் இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், இந்த காலகட்டத்தில் அடிக்கடி எழும் சவால்கள் மற்றும் சிரமங்களைக் குறைக்க முடியும்.
எண்ணெய் தானம்
சனி தோஷம், ஏழரை சனி, அல்லது சனி திசையினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க, ஒரு செம்பு கிண்ணத்தில் ஒரு ரூபாய் நாணயம் மற்றும் பாதி அளவிற்கு கடுகு எண்ணெய் நிரப்பி அதன் பின், அந்த எண்ணெயில் உங்கள் முகத்தை பாருங்கள், இந்த பரிகாரத்தை காலை எழுந்து குளித்து முடித்த பின்னர் செய்வது நல்லது. அல்லது சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து, எண்ணெய் தானம் செய்வது மிகச்சிறந்த பரிகாரமாகும். இது கர்ம வினைகளைக் குறைத்து, தடைகளை நீக்கி, மன அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் கொடுக்கும்.
பசுவுக்கு தானம்
கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாக சமம். மேலும், பசுவிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதாலும், பசுக்களின் பசியை போக்குவதாலும் சனி பகவானின் எதிர்மறை பலன்கள் குறைந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனுக்கு தானம்
பொதுவாக தானங்களில் எல்லாம் மிகச்சிறந்ததாக அன்னதானம் கூறப்படுகிறது. அதிலும் விலங்குகளுக்கு உணவளிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களும், பிரச்சினைகளும் நீங்கி நிம்மதி ஏற்படும். அந்த வகையில் சனி பகவானின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை மாலை வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் அல்லது அருகில் இருக்கும் நீர் நிலைகளில் வசிக்கும் மீன்களுக்கு உளுத்தம் பருப்பு பொடியில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து உருட்டி உணவு அளித்து வர வேண்டும்.
அரசமர பரிகாரம்
அரச மரத்தை வழிபடுவது பல விதமான தோஷங்கள், பிரச்சனைகள் தீருவதற்கு சிறந்த பரிகாரமாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் சனி சதே காலத்தின் சவால்களை சமாளிக்க, சனிக்கிழமைகளில் ஒரு சொம்பில் நீர் நிரப்பி அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து அரசமரத்தை சுற்றி தெளித்து விட்டு, கடுகு எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் வேண்டும் போது அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.
இதனையும் படியுங்கள் : ஏழரை சனியின் பாதிப்பு விலக வழிபாடு