யார் இந்த கருப்பசாமி? இவர் எப்படி அழகர்கோவில் காவல் தெய்வமாக மாறினார்?

கருப்பசாமி காவல்தெய்வமாக போற்றப்படுகிறார். இவரே கருப்பண்ணசாமியாகவும் அறியப்படுகிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் கருப்பசாமி வழிபாடு அதிகம். தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் கருப்பசாமி இல்லாத கோயில்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்ட

By ·

கருப்பசாமி காவல்தெய்வமாக போற்றப்படுகிறார். இவரே கருப்பண்ணசாமியாகவும் அறியப்படுகிறார். தமிழகம் மற்றும் கேரளாவில் கருப்பசாமி வழிபாடு அதிகம். தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமங்களில் கருப்பசாமி இல்லாத கோயில்களே இல்லை எனலாம். அந்தளவுக்கு மக்களின் மனதிலும், வாழ்விலும் கருப்பசாமி இரண்டறக் கலந்து காணப்படுகிறார். கருப்பசாமி அவர் அமர்ந்த இடங்களுக்கேற்றார் போல் பல நாமங்களில் அழைக்கப்படுகிறார்.

சங்கிலி கருப்பன், கருப்பனார் சாமி, குல கருப்பனார், பதினெட்டாம்படியான், வேட்டைக் கருப்பு, சின்ன கருப்புசாமி, பெரிய கருப்புசாமி, மீனமலை கருப்புசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என பலவிதமான பெயர்களில் தமிழக கிராமங்களில் மக்கள் கருப்பசாமியை வழிபடுகின்றனர். உண்மையில் யார் இந்த கருப்பசாமி, சபரிமலை முதல் தமிழக கிராமங்கள் வரை பயபக்தியுடன் பக்தர்கள் வணங்கும் இந்த காவல் தெய்வத்தின் வரலாறு என்ன? இதனை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

கருப்பசாமி, அழகர்கோவில் காவல் தெய்வமான கதை

அழகர் மலையில் இருக்கும் அழகர் உற்சவ சிலையை எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஏனென்றால் அந்த சிலையானது அபரஞ்சி தங்கத்தினால் உருவானது. அவ்வளவு அழகான அந்த சிலையை, அங்கு தரிசிக்க வந்த ஒரு மலையாள மன்னன், தன் தேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு முடிவெடுத்தான். நாடு திரும்பிய அந்த மன்னன், அழகரை கவர்ந்து வர 18 மந்திரவாதிகளிடம் அந்த வேலையை ஒப்படைத்தான். பதினெட்டு மந்திரவாதிகளும், தன் மன்னனுடைய கட்டளையை நிறைவேற்ற அழகர்மலை புறப்பட்டார்கள். அந்த 18 பேருக்கும் காவலாக மலையாள தேசத்தின் காவல் தெய்வமான கருப்பும், வெள்ளை குதிரை மீதேறி அவர்கள் முன்னே சென்றது. காவல் தெய்வத்தின் பின்னே இவர்கள் அழகர்மலைக்கு வந்தார்கள்.

அழகரின் அழகில் மயங்கிய கருப்பசாமி

அழகர் மலையை அடைந்த அந்த காவல் தெய்வம், அழகரின் அழகில் தன்னையே மறந்து மயங்கி நின்றது. அதே சமயத்தில் 18 மந்திரவாதிகளும் அழகரின் சக்தியை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி செய்தார்கள். அதற்காக யார் கண்ணுக்கும் தெரியாமல் இருக்க ஒரு வித மந்திர மையை பயன்படுத்தினார்கள். இவர்களுடைய திட்டத்தை முறியடிக்க அழகர், கோயிலில் வேளை பார்க்கும் ஒருவரின் கனவில் தோன்றி மந்திரவாதிகள் குறித்து எச்சரித்தார். அவரோ மறுநாள் காலை இறைவனுக்கு வைத்து படைக்கும் பொங்கலில் அளவுக்கு அதிகமாக மிளகு சேர்த்து ஆலயம் முழுவதும் வைத்தார். அதன் வாசனையால் ஈர்க்கப்பட்ட மந்திரவாதிகள், அதை எடுத்து சாப்பிட்டார்கள்.

இதனால் அவர்கள் அழுது விட, கண்களில் இருந்த மையும் அழிய, அங்கிருந்த காவலர்கள், அவர்களைப் பிடித்துக் கொன்று, களிமண்ணால் படிகள் செய்து அந்த பதினெட்டு பேரையும் புதைத்து விட்டார்கள். அவர்களோடு துணையாக வந்திருந்த கருப்பசாமி அழகரின் அழகில் மயங்கியதால் நான் இங்கேயே இருந்து கோவிலை காவல் காக்கிறேன் என்று கூறி கோவிலை காவல் காத்து வருகிறார்.

மக்களின் காவல் தெய்வம்

கோவில் கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். ராஜகோபுரத்தின் உள்ளே இருந்த பதினெட்டு படிகளிலும் பூக்கள், எலுமிச்சம் பழம், தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அப்போது 18 படிகளிலிலும் தீபம் ஏற்றப்பட்டது. சுமார் 5 நிமிடங்கள் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டு பின்னர் மூடப்பட்டன. அழகர் கோவிலில் காவல் தெய்வமாக நின்ற கருப்பசாமி நாளடைவில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும் மதுரை சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பசாமி வழிபாடு முறை

கண்கண்ட தெய்வமாம் கருப்பர் பூஜையை குளித்து முடித்து விட்டு சுத்தமாக தான் செய்ய வேண்டும். பூஜையறையில் விளக்கு ஏற்றி, கருப்பசாமி தெய்வத்தை புஷ்பங்களால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும். பின் சங்கல்பம்; நாள் நட்சத்திரம், திதி, யோகம், பெயர், கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்குவதுடன், எந்தக் காரியத்துக்காக பூஜை செய்கிறோமோ, அதைச் சிந்தித்துப் பூஜை செய்யலாம். பின் ஓம் நமோ பகவதே ஸ்ரீஏகமுக கருப்பசாமியே நமஹ என அவரின் மந்தரத்தை கூறி வழிபடலாம். விருப்பப்பட்டால் அவருக்கு பிடித்த உணவை நைவேத்தியமாக வைத்து வழிபடலாம்.

கருப்பசாமி வழிபாட்டின் பலன்கள்

கருப்பசாமிக்கு பொய் என்பது சுத்தமாக பிடிக்காது. அவர் தர்மத்திற்கு மட்டுமே துணை நிற்பவர். தனது பக்தர்களுக்கு ஒரு சோதனை என்றால் காற்றை விட வேகமாக வந்து தீர்த்து வைப்பவர் கருப்பசாமி. கருப்பசாமியை வழிபடுவோர் தீமைகள், சாபங்கள், சூனியங்கள், போட்டி, பொறாமைகளிலிருந்து தப்பித்து விடலாம். இவரை வணங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் பெறலாம். தர்மத்தின் நியாயத்தை கருப்பசாமியிடம் நிச்சயமாகப் பெறலாம்.

இதனையும் படியுங்கள் : கோவிலில் சாமி முன் இந்த முறை படி பிராத்தனை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்!

Recipes AMP · Quick view
View full