ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல்கள் சாற்றி வளைகாப்பு செய்வது ஏன்?ஆடிப்பூரம் 2024 எப்போது?

ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழா ஆகும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளை போலவே பூரம் நட்சத்திரமும் அம்பிகைக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் அம்பாள் உருவெடுத்தாள். இந்த நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து, வழிபடுவது

By ·

ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழா ஆகும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளை போலவே பூரம் நட்சத்திரமும் அம்பிகைக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் அம்பாள் உருவெடுத்தாள். இந்த நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து, வழிபடுவது மிக முக்கியமானதாகும். அதுமட்டுமில்லாமல், சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை தொடங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.

இப்படி சிறப்பு வாய்ந்த நாள் இந்த ஆண்டு 2024 எப்போது வருகிறது என்றும், மற்ற நாட்களில் இல்லாமல் ஆடிப்பூரத்தன்று மட்டும் எதற்காக அம்மனுக்கு வளையல் வாங்கி சாற்றுகிறார்கள்? எதற்காக அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

ஆடிப்பூரம் 2024

ஆடிப் பூரம் அம்பாளுக்குரிய விஷேச நாளாகும். 27 நட்சத்திரங்களில் 11வதாக வரும் நட்சத்திரம் பூரம். அனைத்து மாதங்களிலும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. ஆடித் திங்களில் வரும் பூர நாளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் என்று கூறப்படுகிறது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப் பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

இந்த ஆண்டு ஆடிப்பூரம் 2024 ஆகஸ்ட் 07 ஆம் தேதியும், தமிழ் தேதிக்கு ஆடி 22 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. ஆடி மாதம் பூரம் நட்சத்திரம் ஆகஸ்ட் 06 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 06:41 மணிக்கு தொடங்கி மறுநாள், ஆகஸ்ட் 07 ஆம் தேதி புதன்கிழமை இரவு 09:03 அன்று முடிவடைகிறது. திருமணம், குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்கள் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல், குங்குமம் வாங்கிக் கொடுத்து, வேண்டிக் கொள்ளலாம்.

ஆண்டாள் திருமணம்

மகாலட்சுமியின் அம்சமான ஆண்டாள் ஆடிப்பூரத்தில் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டாள் நாச்சியார், மனிதர்களைப் போல பிறப்பெடுத்தவர் இல்லை. அவர் பெருமாளுக்கு சேவைசெய்து கொண்டிருந்த பெரியாழ்வார் வளர்த்த நந்தவனத்தில் துளசிச் செடியின் கீழ் தோன்றியவர். சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாள் என போற்றப்படும் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நாள், வைணவத் தலங்கள் அனைத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறும். 10வது நாளில் ஆண்டாள்- ஸ்ரீரங்க பெருமான் திருக்கல்யாணம் நடைபெறும். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்றைய தினம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும். திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நடத்த காரணம்

ஆடிப்பூரம் என்பது ஆண்டாளின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. மேலும் கர்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போலவே, எல்லா மங்கையர்களுக்கும் அரசியான அம்மனுக்கும் வளைகாப்பு நடத்தப்படும் நாளே ஆடிப்பூரம் ஆகும். ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வந்துள்ளார். ஒருநாள் வளையல்கள் விற்க‌ பெரியபாளையம் வந்த அவர் பாதி வளையல்களை விற்றுவிட்டு அசதியில்அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு தூங்கிவிட்டார். பின் கண் விழித்து பார்த்தபோது, தான் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போனதை கண்டு பதறினார்.

அன்றிரவு வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றி நீ கொண்டு வந்த வளையல்களை நான் அணிந்து கொண்டேன். இந்த வளையல்கள் என் மனதை மகிழ்வித்து விட்டன, நான் பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும் என்று கூறி மறைந்தாள். இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். இந்த நாளில் அம்பிகைக்கு வளைகாப்பு நடத்தி வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும், அன்னையின் அருள் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

ஆடிப்பூர வழிபாட்டு முறை

ஆடி மாதத்திலேயே அம்பாளுக்கு மிக விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பூரம். இந்த நாளில், அம்மனுக்கு வளைகாப்பு விழா நடைபெறும். கோவிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல் மாலைகளில் இருந்து பெறப்பட்ட வளையல்களை பெண்கள் அணிந்தால் அவர்களுக்கு திருமணம் உடனே ஆகும் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். தொழிலில் முன்னேற்றமே இல்லை, குழந்தை பாக்கியம் இல்லை என நினைத்து வருந்துபவர்கள் ஆடிப்பூரத்தன்று கோவிலுக்குச் சென்று மிக எளிமையான முறையில் வழிபடலாம். அல்லது வீட்டிலேயே பூஜை அறையில் உமா தேவிக்கு மலர்களால் அல்லது வளையல்களால் அலங்காரம் செய்து, தீபமேற்றி, தூப தீப ஆராதனை காட்ட வேண்டும். நைவேத்தியமாக ஏதாவது இனிப்பு அல்லது குங்குமம் படைத்து வழிபடலாம். இந்த எளிமையான வழிபாட்டினை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்களின் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் நிறைவேறும்.

இதனையும் படியுங்கள் : ஆடி மாதத்தில் விரதம் இருந்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுமா?

Recipes AMP · Quick view
View full