தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்கள் மட்டுமல்ல எந்த நாளில் எல்லாம் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் அம்மனின் அருள் கிடைக்கும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட, அம்பிகையின் சக்தி அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் சிவ பெருமானே அம்பிகைக்குள் அடக்கம் என சொல்வார்கள். இருந்தாலும் ஆடி மாதம் உண்மையாகவே அற்புதம் மாதம் நிறைந்த மாதம் தானா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருப்பதுடன் அதை நிரூபிக்க சாட்சி உள்ளதா என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது. அந்த கேள்வி மற்றும் சந்தஙகத்தை தீர்க்கும் விதமாக கொண்டாடப்படும் ஆடித்தபசு திருவிழா மற்றும் அது உருவான காரணத்தை இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடித்தபசு என்றால் என்ன?
ஆடி மாதத்தின் அனைத்து நாட்களும் அம்மன் வழிபாட்டிற்குரிய நாட்களாகும். அம்மனே அனைத்துமாக இருப்பதால் ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் மிகச் சிறப்பான, மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடித்தபசு. இது அம்பிகையை மட்டுமே முதன்மைப்படுத்தி கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக தேரோட்டத்துடன் கொண்டாடப்படும். சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம். இக்கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
ஆடித்தபசு வரலாறு
தபசு என்றால் ‘தவம்’ என்று பெயர். தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர், சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள். இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர். இதைக் கேட்ட அன்னை, இருவரும் ஒன்று தான் என்றார். இதை எப்படி தாங்கள் ஏற்றுக் கொள்வது என அவர்கள் பார்வதியிடமே கேட்டனர். அதற்கு உரிய காலம் வரும் என பதிலளித்து அவர்களை அனுப்பி வைத்தாள் அம்பிகை. பின் அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார்.
ஊசி முனையில் தவம் செய்த பார்வதி தாய்
சிவனின் கூற்றுப்படி அம்பாளும் தற்போது உள்ள சங்கரன் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து ஊசி முனையில் ஒற்றைக்காலில் நின்றபடி கடும் தவம் இருந்தாள். அப்போது அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்தனர். சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் காட்சியளித்தார். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் தவம் செய்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் ஆடித்தபசு என்றும் கொண்டாடுகிறோம்.
ஆடித்தபசு உணர்த்தும் உண்மை
வைராக்கியம், திடமான பக்தியுடன் ஆடியில் விரதம் இருந்தால், வேண்டிய வரம் நிச்சயம் கிடைக்கும் என்பதை அனைவருக்கும் உணர்த்துவதற்காகவே ஊசி முனையின் மீது ஒற்றைக்காலில் நின்று அன்னை தவம் செய்து, தான் வேண்டிய வரத்தை பெற்றுள்ளாள். மேலும் ஆடித்தபசு நாளில், அம்பிகையை அபிஷேகிப்பதற்காகவும், அலங்கரிப்பதற்காகவும் நம்மாலான பொருட்களை வழங்கி, தரிசித்தால், தாலி பாக்கியம் நிலைக்கும். நினைத்தபடி வாழ்க்கைத் துணை அமையும் என நம்பப்படுகிறது. மேலும் ஆடிப் பௌர்ணமி அன்று விரதம் இருந்து அம்பிகை வழிபாடு செய்தால் அற்புதமான பலனகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே இந்த நாளில் அனைவரும் அம்பிகையை வழிபட்டு அருள் பெறலாம்.
இதனையும் படியுங்கள் : அருள் தரும் ஆடி மாதத்தில் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்