தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்கள் மட்டுமல்ல எந்த நாளில் எல்லாம் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் அம்மனின் அருள் கிடைக்கும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட, அம்பிகையின் சக்தி அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் சிவ பெருமானே அம்பிகைக்குள் அடக்கம் என சொல்வார்கள். ஆடி மாதம், மழைக்காலத்தின் துவக்க மாதமாகும். அம்பிகை கருணையே வடிவானவள் என்பதால் தடையின்றி மழை பெறவும், நிலம், விவசாயம் செழிக்கவும் அம்பிகையிடம் வேண்டும் மாதம் என்பதால் இது அம்பிகை வழிபாட்டிற்கு உரிய மாதம் என்று சொல்லப்படுகிறது. சிவனுக்கும், சக்திக்கும் உரிய ஆடி மாதத்தில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ஆடி மாத விழா
ஆடி மாதம் வந்தாலே வரிசையாக விழாக்கள் வருவதை காணலாம். ஆடி பூரம், ஆடி பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வரலட்சுமி விரதம். நவராத்திரி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆடி வெள்ளியில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி வழிபாடு செய்து மக்களுக்கு கொடுக்கிறார்கள். நல்ல மழை வேண்டி, உடல் நலம் வேண்டி நம் முன்னோர்கள் அம்மனுக்கு வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கு பிடித்தமானவை வேம்பு, எலுமிச்சை, கூழ். இவை உடல் நலத்திற்கும், வியாதியை தடுப்பதற்கும் உதவுகின்றன. ஆடி மாதத்தில் கிராமங்களில் மட்டுமல்லாமல், நகரத்தில் உள்ள கோவில்கள் அனைத்திலுமே ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடி மாதம் கோவிலுக்குச் சென்று வழிபடுவதும், அம்மனுக்கு அர்ச்சனைக்கு குங்குமம் வாங்கிக் கொடுப்பதும், கோவிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பதும் தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.
ஆடி மாதத்தில் செய்யக்கூடியவை
1. இந்த மாதத்தில் இறை வழிபாடு, மந்திர ஜபம் போன்றவை செய்வது மிகச் சிறப்பானதாகும். இந்த மாதத்தில் எந்த முறை வேண்டுமானாலும் இறை வழிபாட்டினை செய்யலாம். எப்படி செய்தாலும் அது பல மடங்கு அதிக பலனை தரும்.
2. ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபாடு செய்வது செல்வ செழிப்பை தரும்.
3. ஆடி மாதம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்ய உகந்த மாதம். அதனால் ஆடி மாதத்தில் நம் முன்னோர்களை நினைத்து விரதம் கடைப்பிடிக்கலாம். இதனால் அவர்களின் அருளை பெற முடியும்.
4. ஆடி மாதத்தில் குடும்பத்தினருடன் குலதெய்வத் கோயிலுக்குச் சென்று பொங்கலிட்டு ,நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்யலாம்.
5. ஆடி மாதத்தில் அம்மன் அர்ச்சனைக்கு குங்குமம், பால், பன்னீர், தேன் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
6. கோவிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு ஆடி மாதத்தில் தாம்பூலம் கொடுப்பது தீர்க்க சுமங்கலி பாக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.
7. ஆடி மாதத்தில் தாலி பெருக்கிக் போடலாம். திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம்.
8. ஆடி மாதத்தில் பகவத் தியானம் மிகவும் முக்கியமானது. ஆடி மாதம் முழுவதும் ஒரு பொழுது விரதம் இருந்து பகவானை பூஜித்து தியானித்து வந்தால் சகல சம்பத்துகளும் சேரும்.
9. ஆடி மாதத்தில் கூழ் காய்ச்சி அனைவருக்கும் கொடுப்பது, உணவு தானம், வஸ்திர தானம் வழங்குவது மிகச் சிறப்பானதாகும்.
ஆடி மாதத்தில் செய்யக்கூடாதவை
1. ஆடி மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணம், பெண் பார்க்க செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் அதற்கு பதிலாக ஆவணி மாதத்தில் வைக்கலாம்.
2. ஆடி மாதத்தின் தொடக்கத்தில் மொட்டை அடிக்க கூடாது. ஆடி மாதத்தில் அதிக காற்று வீசும், பலத்த மழை பெய்யும் அதனால் கிரக பிரவேசம் செய்ய கூடாது.
3. ஆடி மாதத்தில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. திருமணம் முடிந்த கையோடு மணமக்களைத் தனித்தனியே பிரிக்க வேண்டி இருக்குமோ என்ற காரணத்தால் தன ஆடி மாதம் திருமண வைக்க மாட்டார்கள்.
4. ஆடி மாதத்தில் வீடு வாங்கவும் கூடாது. வீடு குடியேறவும் கூடாது.
இதனையும் படியுங்கள் : 2024 ஆடி மாதம் எப்போது? ஆடியில் தவற விடக் கூடாத நாட்கள் எவை தெரியுமா?