சாளக்கிராமம் வழிபடும் முறை மற்றும் அதன் பலன்கள்

சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள்

By Prem Kumar · 18/6/2024

சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவர்கள் பாவங்களில் இருந்து விடுபடுவார்கள் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உயிரை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சாளக்கிராம கல்லை வீட்டில் வைத்து வழிபடுவதால் என்ன பலன் கிடைக்கும் என இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புராணக்கதை

ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவை கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். ஒரு நாள் மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை விளையாட்டாக ஏமாற்றினார். என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்ததாலும் கல்லாகப் போக என்று சாபமிட்டாள் துளசி. அந்த கல் தான் சாளக்கிராம கல். பின் மஹாவிஷ்ணு அவர்களுக்கு காட்சி கொடுத்து என்னை கல்லாக மாற நீ சபித்தது என் திருவிளையாடல் தான், என் தரிசனம் கிடைத்ததால் உனது இந்த பிறவியிலிருந்து உனக்கு முக்தி கிடைக்கிறது என்றார். இனி நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறுவாய், நான் சாளக்கிராமக் கற்களாக மாறபோகிறேன், அதனால் நீ கண்டகி நதியாக ஓட நான் உன்னில் கிடப்பேன். அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாக்கும். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன் என்று கூறி மறைந்தார்.

சாளக்கிராமத்தை பூஜை செய்யும் முறை

சாளக்கிராம பூஜை செய்வது மிகவும் எளிதானது. தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு, தூய ஆடை அணிந்து சாளக்கிராமத்தை பூஜையறையில் வைத்து பால், தண்ணீர், துளசி தண்ணீர் அல்லது நெய் கொண்டு அபிஷேகம் செய்து, பூ வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி வழிபட வேண்டும். மேலும் விருப்பப்பட்டால் ஏதாவது ஒரு இனிப்பை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். துளசி இலை சமர்ப்பித்து வழிபாடு செய்வது சிறப்பை தரும். சாளக்கிராமத்தை யார் வேண்டுமானாலும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். ஆனால் சாளக்கிராமம் இருக்கும் வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல சௌபாக்கியமும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

சாளக்கிராம மந்திரம்

“ஓம் விஷமந் நாஷாய வித்மஹேவிஷ்ணு வாஸாய தீமஹிதந்நோ சிலா ப்ரசோதயாத்”

“ஓம் நமோ பகவதே விஷ்ணுவேஸ்ரீ சாளக்கிராம நிவாஸினேசர்வா பீஷ்ட பலப்ப்ரதாயசகல துரித நிவாரினேசாளக்கிராமய ஸ்வாஹா”

“ஓம் விஷ்ணு தேவாய வித்மஹே வாசு தேவாய தீமஹிதந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து விட்டு, தூய ஆடைகளை அணிந்த பின் பூஜையறையில் துளசியை வைத்து சாளக்கிராமத்திற்கு அர்ச்சனை செய்து கொண்டே 27 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி பூஜிப்பதால் அந்த இடத்தில் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்யும் என்றும், அங்கே சகல செல்வங்களும் விருத்தியாகும் என்பது ஐதீகம்.

சாளக்கிராமத்தை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்

சாளக்கிராமத்திற்கு பூஜை செய்தால் யாகமும், தானமும் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் ராஜசூய யாகம் செய்தாலும் ஒருநாள் சாளக்கிராம பூஜை செய்த பலனுக்கு இணையாகாது. சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வதாக ஐதீகம். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும்.‌ சாளக்கிராமத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தால், வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகள் தீருவதாக நம்பிக்கை. இது மகிழ்ச்சியையும், செல்வ வளத்தையும் வீட்டில் ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் சாளக்கிராமம் வைத்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் வாஸ்து குறைபாடுகள், தடைகள், பிரச்சனைகள் அனைத்தும் விலகி விடும் என சொல்லப்படுகிறது. சாளக்கிராத்திற்கு தினமும் தண்ணீரால் அபிஷேகம் செய்பவரின் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். சாளக்கிராம பூஜை செய்பவன் உள்ளம் தூய்மையாகும். மஹா லஷ்மி கடாஷம் வீட்டில் குடிகொள்ளும். சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவது போல பூஜை செய்பவர்களின் பாவங்கள் கழன்று ஓடும்.

இதனையும் படியுங்கள் : மூன்றாம் பிறை சந்திர வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம்!!!

Recipes AMP · Quick view
View full