வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்று கூறுகின்றனர். பஞ்சாங்கத்திலும் சரி, காலண்டரிலும் சரி மக்கள் மூன்றாம் பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காக சந்திர தரிசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி சந்திர பகவான் என்பவர் மனதிற்கு என சொல்லப்படுகிறது. ஒருவர் தெளிவான மனநிலையில் இருந்தால் மட்டுமே சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
அதற்கு சந்திரனின் அருள் அவசியம் தேவை. அதனால் மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறை சந்திரனை பார்த்தால் நமக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மூன்றாம் பிறை சந்திர தரிசனம் என்றால் என்ன?
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவங்களை போக்கும் என்பார்கள். சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் சேர்வது அம்மாவாசை திதி . ஒவ்வொரு அம்மாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாளை மூன்றாம் பிறை என்கிறோம். மாதத்தில் வரும் முக்கிய வைபவங்களில் ஒன்று சந்திர தரிசனம். அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் நாள் மூன்றாம் பிறையாக சந்திரன் காட்சி தரும் தினம். இந்த நாளில் சந்திர பகவானை வழிபட்டால் நிம்மதியான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். சந்திர பகவான் சாப விமோசனம் பெற்ற நாளாக இந்த நாள் குறிப்பிடப்படுகிறது.
யார் இந்த சந்திரன்?
நவகிரகங்களில் ஒருவராக போற்றப்படும் சந்திரன், இந்துக்களின் வழிபாட்டில் முக்கிய தெய்வமாக வணங்கப்படுகிறார். அதிரி மகரிஷிக்கும் அவரது மனைவி அனுஷியாவிற்கும் பிறந்த மகன் தான் சந்திரன். மனிதனின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் சந்திரன். ஜோதிட சாஸ்திரப்படி சந்திரனை மனோகாரகன் என்பார்கள்.
தட்சன் அளித்த சாபம்
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்து தமது தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம் புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.
மூன்றாம் பிறையை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள்

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவன் தன் முடி மீது சூட்டியுள்ளார். மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வம் பெற்று வாழ்வார்கள். மூன்றாம் பிறையை பார்த்தல் மன நிறைவும், அமைதியும், பேரானந்தமும் கிடைக்கும். மன கஷ்டங்கள், பிரச்சினைகள் அனைத்தும் விலகும். மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மூன்றாம் பிறையை காண்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் சந்திர தரிசனம் செய்தால் சந்திரனின் பரிபூரண அருள் கிடைக்கும்.
மூன்றாம் பிறை மந்திரம்
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹீம் ரம் சம் சந்த்ராய நமஹ!
ஓம் பத்மத்வஜாய வித்மஹேஹேம ரூபாய தீமஹிதன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத் !
இந்த மந்திரத்தை மூன்றாம் பிறை நாளில் இடைவிடாமல் ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எந்த நிலையிலும் மன வியாதிகளே வராது. செல்வ வளம் பெருகும், தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
மூன்றாம் பிறை வழிபாட்டு முறை
ஒரு தட்டில் பச்சரிசி பரப்பி, அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு, மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த பிறை நிலவைத் தன் தலையில் சூடிக் கொண்டிருக்கும் சிவபெருமானை நம் மனதார நினைத்து கொள்ள வேண்டும். கஷ்டங்கள் அனைத்தும் நம்மை கடந்து போக வேண்டும் என்று நினைத்து, நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு எது தேவையோ அதை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இந்த நாளில் மற்ற உயிர்களுக்கு தானம் செய்வது மிகவும் சிறப்பானது. இந்த நாளில் வழிபாடு மேற்கொண்டால் பிறைநிலவு படிப்படியாக எப்படி வளர்ந்து கொண்டே செல்கின்றதோ அதேபோல நம் வாழ்க்கையும் படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்லும் என்பது ஐதீகம். இதற்காகத்தான் பிறை நிலவை தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்.
இனி வரும் மாதங்களின் மூன்றாம் பிறை தரிசன நேரம்
ஜூலை 7, 2024 ஞாயிற்றுக்கிழமை 09:26 PM to 10:52 PM
ஆகஸ்ட் 6, 2024 செவ்வாய்க்கிழமை 08:48 PM to 09:43 PM
செப்டம்பர் 4, 2024 புதன்கிழமை 07:48 PM to 08:12 PM
அக்டோபர் 4, 2024 வெள்ளிக்கிழமை 06:40 PM to 06:51 PM
நவம்பர் 3, 2024 ஞாயிற்றுக்கிழமை 04:38 PM to 04:52 PM
டிசம்பர் 2, 2024 திங்கட்கிழமை 04:04 PM to 04:10 PM
இதனையும் படியுங்கள் : தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை





