கோடீஸ்வர யோகம் தரும் குபேர கிரிவலம் செய்வது எப்படி?
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருவது சிறப்பு. பவுர்ணமி கிரிவலம் தெரியும் அதென்ன குபேர கிரிவலம் என்று யோசிக்கிறீர்களா? ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களை நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் வருவது சிறப்பு. பவுர்ணமி கிரிவலம் தெரியும் அதென்ன குபேர கிரிவலம் என்று யோசிக்கிறீர்களா? ஒவ்வொரு கிரிவலமும் பல அற்புதங்களையும், அதிசயங்களை நம்முடைய வாழ்வில் நிகழ்த்தக் கூடியவை. அப்படி ஒரு கிரிவலம் தான் குபேர கிரிவலம். சிலருக்கு இது பற்றி தெரிந்திருக்கும். பலருக்கும் இந்த குபேர கிரிவலம் பற்றி தெரிந்திருக்காது. அப்படி தெரியாதவர்களுக்காகத்தான் இந்த பதிவு. இந்த ஆன்மீகப் பதிவில் குபேர கிரிவலத்தை பற்றியும், அதன் மகிமையை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
கிரிவலம் செல்வது ஏன்?
எப்போதாவது நாம் ஏன் கிரிவலம் செல்கிறோம் என்று ஒரு நாளாவது யோசித்து உண்டா? நாம் கிரிவலம் செல்லும் போது முழு நிலவின் கதிர்கள் நம் மீது படும்போது நம் உடல் குளிர்ச்சி பெற்று மனம் அமைதி பெறும். அப்போது நம் சிந்தனைகள் நல்லதாகவே வெளிப்படும். அப்போது அந்த நாளில் கடவுள் ஒருவரை நம் மனதில் நிறுத்திக் கொண்டு நாம் கிரிவலம் செல்வதால், நம் பாவங்கள் குறைந்து, புண்ணியங்கள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் நாம் நடந்து செல்லும் போது நம் நுரையீரலின் சுவாசம் சீராக இருக்கும். இந்த காரணங்களால் சித்தர்கள் பல கிரிவலம் செல்வது நல்லது என்று கூறி வந்தனர்.
கிரிவலத்தின் மகிமை
கிரிவலம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது உலகப் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்தான். சக்தி அதிகம் கொண்ட பௌர்ணமி நாளில் இறைவன் குடியிருக்கும் மலையை பக்தியுடன் சுற்றி வரும் கிரிவலம் நன்மைகளைத் தரும் என்பது பக்தர்களிடையே நம்பிக்கையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையை மக்கள் முக்கண் முதல்வனாக சிவனின் அம்சமாக எண்ணி வழிபடுகின்றனர். காரணம், லிங்கமே இங்கு மலையாக அமைந்திருப்பதாக ஐதீகம். இதனால்தான் நம் முன்னோரும் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கோடீஸ்வர யோகம் தரும் குபேர கிரிவலம்
திருவண்ணாமலையில் கடந்த சில ஆண்டுகளாக, குபேர கிரிவலம், பிரபலமாகி வருகிறது. காரணம் கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம். காசிக்கு போய் கங்கையில் குளித்தால் தான் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருத்தலம். நம்முடைய கர்மவினையின் பயனாக வரும் துன்பங்களில் ஒன்ற தான் பணக்கஷ்டம். இதற்கு பல நிரந்தரத் தீர்வுகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் குபேர கிரிவலம். பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை உருவாக்கி தருவது தான் குபேர கிரிவலம்.
குபேர கிரிவலம் என்றால் என்ன ?
கிரிவலப்பாதையில் ஏழாவதாக அமைந்துள்ளது தான் குபேர லிங்கம். குபேர லிங்கத்தை மற்ற நாட்களை விட சிவராத்திரி நாட்களில் கிரிவலம் வருவது மிக்க நன்மை தரும். அதிலும் கார்த்திகை மாத சிவராத்திரி தினத்தில் வலம் வருவது சிறப்பான பலனை கொடுக்கும். குபேரன் இரவு 7 மணியளவில் தன்னுடைய கிரிவல பயணத்தை தொடங்குவார். அந்த நேரத்தில் நாமும் அவருடன் இணைந்து பயபக்தியுடன் குபேர லிங்கத்தை தரிசித்து வணங்கிவிட்டு, அண்ணாமலையாரை கிரிவலம் வந்தால், அருணாச்சலேஸ்வரரின் அருளும், அங்குள்ள சித்தர்கள், யோகிகள், தேவர்கள் மற்றும் குபேரனின் அருளாசியும் கிடைக்கும். குபேரனைப் போல் செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது ஐதீகம்.
குபேர கிரிவலம் செல்லும் முறை
கிரிவலத்தைத் தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை கோயிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணரைத் தரிசித்து அனுமதி பெற வேண்டும். பூத நாராயணர்தான் திருவண்ணாமலையின் காவல் தெய்வம். அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டால் எந்தவித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை. பின் மனமாற குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டு, இரவு 7 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் குபேர லிங்கத்தில் வந்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். அப்படி கிரிவலம் செய்யும் போது, முடிந்த அளவிற்கு “ஓம் ரீம் தன தான்யம் அனுகிரஹ ஆகர்ஷய ஆகர்ஷய” என்று கூறுவது மிகவும் சிறப்பு. கிரிவலம் செல்லும்போது ஓடவோ, பேசவோ அல்லது சாப்பிடவோ கூடாது. எண்ணம் முழுவதும் அருணாசலேசுவரர் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். கிரிவலம் செல்லும்போது எறும்புப் புற்றுகளுக்கு அன்னமிட்டாலோ அல்லது இனிப்பு வாங்கி வைத்தாலோ பெரும் புண்ணியம் வந்து சேரும். இந்த கிரிவலம் வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. ஆனால் செல்வம் வந்த பிறகு அந்த செல்வத்தைக் கொண்டு மற்றவருக்கு துன்பம் ஏற்படுத்தினால் வந்த செல்வம், வந்த வழியே போய் விடும்.
இதனையும் படியுங்கள் : ஆகஸ்ட் 2024 பெளர்ணமி எப்போது ? எந்த நேரத்தில் பௌர்ணமி கிரிவலம் மேற்கொள்ளலாம்?