பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும். திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் மலையையே சிவனாக வழிபடுவதால் இந்த மலையைப் பெற்று பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். திருவண்ணாமலை கிரிவலம் செல்ல அனைத்து நாட்களும் உகந்த தினம் என்றாலும், ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி தினம் அன்று கிரிவலம் மேற்கொள்வது அனைத்தையும் விட சிறப்பானது. திருவண்ணாமலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரிவலம் செல்ல நாளான பெளர்ணமி எப்போது வருகிறது? இந்த நாளுக்கு இருக்கும் மற்றொரு தனிச்சிறப்பு என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன்?
ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் சிவலோக பதவியைத் தரும், திங்கட்கிழமை கிரிவலம் இந்திர பதவி தரும், செவ்வாய்க்கிழமை கிரிவலம் கடன் மற்றும் வறுமைகளைப் போக்கும், புதன்கிழமை கிரிவலம் கலைகளில் தேர்ச்சியையும், முக்தியையும் தரும், வியாழக்கிழமை கிரிவலம் ஞானத்தைத் தரும், வெள்ளிக்கிழமை கிரிவலம் வைகுண்ட பதவியைத் தரும், சனிக்கிழமை கிரிவலம் பிறவி பிணிகளைப் போக்கும், அஷ்டமி தினத்தன்று கிரிவலம் வந்தால் நம்மிடம் இருக்கும் தீய வினைகள் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
பௌர்ணமி கிரிவலம்
பெளர்ணமி என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் தலம் திருவண்ணாமலை தான். திருவண்ணாமலையில் அனைத்து மாதங்களிலும் வரும் பெளர்ணமி அன்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசப்பது சிறப்பானதாகும். தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளின் படி ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் பெளர்ணமியும் விழா எடுத்து கொண்டாடப்படுவது வழக்கம். தைப்பூசம், மாசி மகம், சித்ரா பெளர்ணமி, திருக்கார்த்திகை என ஒவ்வொரு மாதத்திலும் வரும் பெளர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் இங்கே பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வந்து வழிபட்டால் நம் பாவங்கள் தீர்ந்து புண்ணிய பலன்கள் ஏற்படும் என நம்பப்படுகிறது.
கிரிவலம் வருவதன் பலன்கள்
திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். அப்படி கிரிவலம் செல்வதால் பாவ வினைகள் குறைந்து, புண்ணியங்கள் கூடும். தெய்வ அருள் மட்டுமின்றி சித்த புருஷர்களின் அருளும் கிடைக்கும். இயற்கையின் நல்லருளையும் நம்மால் பெற முடியும். திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் தரும் நல்லதொரு நிகழ்வு. கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு அன்னமிடுவது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், நமது பாவப்பிணிகள் அகலும்.
ஆகஸ்ட் 2024 பெளர்ணமி சிறப்பு

இத்தகைய சிறப்பு மிக்க திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வருகிறது. அதுவும் சிவ பெருமானுக்கும், சந்திர வழிபாட்டிற்கும் ஏற்ற திங்கட்கிழமையில் இந்த பெளர்ணமி வருவதால் அதிக சிறப்புடையதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் பெளர்ணமியானது ஆவணி அவிட்டம் நாளுடன் சேர்ந்து வருவதால், இது மிகவும் புனிதமான நாள். இந்த நாளில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்வதால் பல மடங்கு புண்ணிய பலன்கள் கிடைக்குமாம். கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாள்களுமே உகந்த தினங்கள் தாம். அதிலும் பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதிகச் சிறப்பு உண்டு என்று ஞானிகளும், யோகிகளும் கூறியிருக்கிறார்கள். ஊழ்வினையை நீக்கும் திருவண்ணாமலையானை நினைத்தாலே பாவங்கள் தீரும்.
கிரிவலம் செல்ல ஏற்ற நேரம்
ஆகஸ்ட் 19ம் தேதி அதிகாலை 03.07 மணிக்கு துவங்கி, ஆகஸ்ட் 20ம் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை 01.09 மணி வரை பெளர்ணமி திதி உள்ளது. ஆகஸ்ட் 19ம் தேதி சர்வ பெளர்ணமி நாள் என்பதால் அன்று நாள் முழுவதுமே கிரிவலம் செல்வதற்கு ஏற்றதாக உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் ஈசனை வணங்கி விட்டு, தங்களின் கிரிவல பயணத்தை துவங்கலாம்.
இதனையும் படியுங்கள் : வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!




