சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார் செய்யக்கூடிய சாம்பார் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என ஏகப்பட்ட பருப்பு வகைகளை பயன்படுத்தி, வித்தியாச சுவையை கொடுக்கலாம். நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வெள்ளி நாட்கள் என்றாலே சாம்பார் தான் மெனு. கல்யாண வீட்டு சாம்பார் என்றாலே அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதன் சுவையும், மணமும் அலாதியானதாக இருக்கும்.
சமைக்கத் தெரியாதவர்கள் கூட ரொம்ப சுலபமாக இந்த கோவக்காய் சாம்பார் இப்படி செஞ்சு பார்த்தால் வீட்டிலிருக்கும் எல்லோரும் பாராட்டி தள்ளிவிடுவார்கள். கல்யாண வீட்டு சாம்பார் போல சுவை தரும் இந்த கோவக்காய் சாம்பார் செய்யவும் ரொம்ப நேரம் எடுக்காது. கோவைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. கோவைக்காய் தொப்பை, சர்க்கரை நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, சிறுநீரகத்தில் கல் போன்ற பல நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
சர்க்கரை நோய்க்கான சிறந்த மருந்துதான் கோவக்காய். இதில் உள்ள வைட்டமின்கள் B1, B2, B3, C மற்றும் இரும்பு, சுண்ணாம்பு, பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். இதய துடிப்பினை சீராக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த கோவக்காயில் சாம்பார் வைக்கும் போது அது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ருசியான இந்த கோவைக்காய் சாம்பாரை எப்படி வைப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கோவைக்காய் சாம்பார் | kovakkai sambar recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 குக்கர்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 300 கி கோவைக்காய்
- 1 கப் சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 2 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் சர்க்கரை
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 கப் துவரம் பருப்பு
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- புளி எலுமிச்சை அளவு
- கொத்தமல்லி தழை சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கோவைக்காயை தண்ணீரில் நன்கு அலசி விட்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- புளியை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து துவரம் பருப்பை அலசி சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துஸ3 விசில் வரை விட்டு இறக்கவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் கோவைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதன்பிறகு வதக்கிய கலவையை பருப்பில் சேர்த்து சாம்பார் பொடி, உப்பு, பெருங்காய தூள், சர்க்கரை, புளி கரைசல் சேர்த்து கலந்து மூடி வைத்து 2 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- பின் தாளிப்பு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.
- அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் சாம்பார் தயார்.