ஆடி மாதத்தில் என்ன செய்தால் அம்மன் நம் வீடு தேடி வருவாள்!
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். ஆடி மாதத்தில் சிவனின
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட, அம்பிகையின் சக்தி அதிகரித்து காணப்படும். இந்த மாதத்தில் சிவ பெருமானே அம்பிகைக்குள் அடக்கம் என சொல்வார்கள். இந்த மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்ற முக்கிய நாட்கள் மட்டுமல்ல எந்த நாளில் எல்லாம் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் அம்மனின் அருள் கிடைக்கும். ஆனால் அம்மனை வீட்டிற்கு அழைக்கிறோமா என்றால், பலரும் அதை செய்வது கிடையாது. எப்படி கூப்பிட்டால், என்ன செய்தால் அம்பாள் நம்முடைய வீட்டிற்கு வருவாள் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ஆடி மாதம் 2024
2024ம் ஆண்டிற்கான ஆடி மாதம் ஜூலை 17ம் தேதி பிறந்துவிட்டது. ஆகஸ்ட் 16ம் தேதி வரை ஆடி மாதம் உள்ளது. அம்மனுக்குரிய ஆடி மாதம் துவங்கு நாளில் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியும், லட்சுமி நாராயணர் அதிதேவதையாக விளங்கும் அனுஷம் நட்சத்திரமும் இணைந்து வருவது தனிச்சிறப்பாகும். அதே போல் மங்களகரமான நாளாக கருதப்படும் புதன் கிழமையில் ஆடி மாதம் பிறப்பது மற்றொரு தனிச்சிறப்பாகும். ஆடி மாதத்தில் எளிமையான முறையில், அம்மனை வீட்டிற்கே அழைத்து வழிபடுவதால் அம்மனின் அருளையும், குலதெய்வத்தின் அருளையும் பரி பூரணமாக பெற முடியும். அம்மனை இப்படி வீட்டிற்கே அழைத்து பூஜை செய்து வழிபடுவதால், அம்மனும், நம்முடைய குல தெய்வமும் நிரந்தமாக நம்முடன் வீட்டிலேயே தங்க இருந்து நமக்கு தீமைகள் ஏதும் நெருங்காமல் காத்தருள்வார்கள். அதுமட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அம்சம் எந்த ஒரு வீட்டில் உள்ளதோ அந்த வீட்டில் நோய், பிரச்சனை என்று எதுவும் நெருங்காது. அதோடு வீடே தெய்வீகமயமாக மாறி விடும்.
அம்மனை வீட்டிற்கு அழைக்கும் முறை
உங்களுக்கு பிடித்த தெய்வமோ அல்லது குலதெய்வமோ வீட்டிற்கு வர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் மனதார அந்த தெய்வத்தை நினைத்து வணங்க வேண்டும். பின் தினமும் வீட்டை சுத்தம் செய்து விட்டு, வீட்டில் விளக்கேற்றி, அம்பாளுக்குரிய மந்திரங்களை, வாய் விட்டு சத்தமாக சொல்ல வேண்டும். மந்திரங்கள் ஏதும் சொல்ல வராது என்பவர்கள் எளிமையாக, “ஓம் ஸ்ரீயே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லலாம். அதுவும் முடியாதவர்கள் மகாலட்சுமிக்குரிய 108 போற்றி அஷ்டோத்திரங்களை செல்லலாம். அல்லது மகாலட்சுமி தாயாரின் பெயர்களை ஒவ்வொன்றாக சொல்லி, போற்றி என சத்தமாக சொல்ல வேண்டும்.
இந்த வழிபாட்டை அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, வாசலில் கோலமிட்டு, அதன் நடுவில் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். முடிந்தால் மஞ்சள் கலந்த தண்ணீர் தெளிப்பது விசேஷம். பிறகு வீட்டின் நிலை வாசலில் சிறிது வேப்பிலையை சொருகி வைக்க வேண்டும். பின் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு அம்மன் மந்திரங்களை சொல்வது மிகவும் சிறப்பு. இவ்வாறு எவர் ஒருவர் தன்னுடைய நாமங்களை சொல்லி, அழைக்கிறார்களோ அவர்களின் வீட்டிற்கு நிச்சயம் அம்பாள் வருவாள். இதனால் ஆடி முதல் நாளில் அம்மனை நம்முடைய வீட்டிற்கே அழைத்து, பூஜை செய்வது அதீத சிறப்பான பலனையும். நம்முடைய வீட்டில் உள்ள துன்பங்கள், கஷ்டங்கள் அனைத்தையும் அம்மன் போக்கி விடுவாள். இப்படி வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஆடி முதல் நாளில் அம்மனை வீட்டிற்கு அழைக்க ஒரே ஒரு விளக்கை ஏற்றி வைத்தாலே போதும் அம்மன் உங்கள் வீடு தேடி வந்து விடுவாள். முடிந்தால் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல், கூழ் போன்ற ஏதாவது ஒரு உணவை நைவேத்தியமாக படைக்கலாம்.
அம்மன் மந்திரங்களை யார் சொல்லலாம்?
பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு பூக்கள் அணிவித்து, அம்மனின் பாதத்தில் இரண்டு வெற்றிலை, பாக்கு வைத்து, வழக்கமாக நாம் ஏற்றுவது போல் தீபம் ஏற்றி அம்மனை அழைத்தால் வீட்டிற்கு வருவதுடன் உங்களின் வீட்டில் நிரந்தரமாக இருந்து, அருளை வழங்கிக் கொண்டே இருப்பாள். அம்பாள் மட்டுமின்றி எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் அந்த தெய்வத்தின் நாமத்தை சொல்லி அழைக்கலாம். அம்மன் நம் வீடு தேடி வந்துவிட்டால் என்பதை சில அறிகுறிகள், சில வாசத்தை வைத்து நம்மால் நிச்சயம் உணர முடியும். அம்மன் வந்த பிறகு உங்கள் வீட்டில் நன்மைகள் பல நடப்பதையும் உங்களால் உணர முடியும். வீட்டில் உள்ள பெண்கள் இந்த நாமங்களை சொல்லுவது மிகவும் சிறப்பு இதன் மூலம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சுபிட்சம் அடைய வைக்கும்.
இதனையும் படியுங்கள் : ஆடி மாதத்தில் விரதம் இருந்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுமா?