பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நன்மையை அளிக்கிறது.
இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.அதிலும் ஆட்டின் ஈரலை சமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள பிரச்சனைகளையும் சரி செய்கின்றது.அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஈரல் மிளகு வறுவல், இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சைடு டிஷாக சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
அதுமட்டும் அல்லாமல் ஈரல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, இதை சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப கலைகளில் ரத்த அணுக்களை அதிகரிக்கும். இவ்வாறு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஈரல் மிளகு வறுவல் எப்படி சுவையாக சமைப்பது என்பதனை பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
ஈரல் மிளகு வறுவல் | Mutton Liver Pepper Fry
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ ஆட்டீரல்
- 3 வெங்காயம்
- 1/4 அங்குலத் துண்டு இஞ்சி
- 2 பற்கள் பூண்டு
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 தேக்கரண்டி மல்லித் தூள்
- 1 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
- 1 தேக்கரண்டி சீரகம்
- உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க
- எண்ணெய் சிறிது
- கடுகு சிறிது
- கறிவேப்பிலை சிறிது
செய்முறை
- ஆட்டீரலுடன் மல்லித் தூள், சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- இஞ்சி ,பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும்.
- அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- அத்துடன் மீதமுள்ள மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு ஊற வைத்துள்ள ஈரல் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, வேக வைத்து இறக்கவும்.
- சுவையான ஈரல் மிளகு வறுவல் தயார்