நலம் மற்றும் வளம் தரும் அரசமர வழிபாடு!!

முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று. வேம்பை பெண் தெய்வமாகவும் அரசமரத்தை ஆண் தெய்வமாக வணங்குவார்கள். அரசமரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும். புத்தர் அரசமரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக அறிகிறோம். போதிமரம் என்பது அரசமரம் தான். அரசமரத்தை வழிபடுபவர்கள், அவர்களி

By Prem Kumar · 13/10/2025

முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று. வேம்பை பெண் தெய்வமாகவும் அரசமரத்தை ஆண் தெய்வமாக வணங்குவார்கள். அரசமரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும். புத்தர் அரசமரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக அறிகிறோம். போதிமரம் என்பது அரசமரம் தான். அரசமரத்தை வழிபடுபவர்கள், அவர்களின் பாவத்தை அடுத்த நாளே போக்கக்கூடிய வலிமை உள்ளது என்கிறார்கள் நம் மகான்களும், ரிஷிகளும். அரசமரத்தை சுற்றி வருவதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அரச மரத்தடி பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட இந்த அரச மரத்தை எந்த நாட்களில் சுற்றி வர வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

அரச மரம்

பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபமே அரச மரம். மரங்களின் அரசனான அரசுக்கு பிப்பலம் என்னும் பெயரும் உண்டு. அக்னி பகவான் குதிரை ரூபம் எடுத்து ஓடி அரசமரத்தில் புகுந்து கொண்டதால், இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு பயன்படுத்துகிறோம். அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும் பொழுது அதனிடமிருந்து வெளிவரும் புகை பல நோய்களை நீக்கவல்லது. இது ஹோமம் செய்யும் இடத்தை சுத்தம் செய்வதுடன், அங்குள்ளவர்களின் உடல்நலத்தையும் சீர்படுத்துகிறது. இம்மரத்தை அச்வத்தம் என்றும் கூறுவர். அச்வத்தம் என்ற சொல்லிற்கு இப்புனித மரத்தை வணங்கியவர்களின் பாவங்கள் மறுநாள் இருப்பதில்லை என்று பொருளாகும்.

அரச மரத்தை சுற்றி வர உகந்த நாள்

வழிபாட்டில் ஒரு அங்கமாகவே திகழ்கிறது அரச மரத்தை வலம் வருவது. குறிப்பாக, திங்கட்கிழமையன்று அமாவாசை வந்தால் அதிகாலையில் அரச மரத்தை சுற்றி வழிபடுவது பல நன்மைகளைத் தரும். இதை அமா- சோமவார பிரதட்சணம் என்பார்கள். திங்கட்கிழமை அமாவாசை நாளில் மட்டுமல்லாமல் அனைத்து திங்கட்கிழமைகளிலும் சுற்றி வந்து வழிபடலாம். இந்த மரத்தை சுற்றி வழிபடும் போது இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

‘மூலதோ பிரம்ஹரூபாய, மத்யதோ விஷ்ணு ரூபிணேஅக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜய தே நமோ நம’

அரசமரத்தை திங்களன்று இந்தமந்திரத்தை கூறி வலம் வந்தால் மங்கலம் உண்டாகும், செவ்வாய் தோஷங்கள் விலகும், வியாபாரம் பெருகும், கல்வி வளரும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும். சனிக்கிழமையன்று வலம் வந்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சனி தோஷங்கள் நீங்கும், தீராத துயரங்களில் இருந்து விடுபடுவீர்கள், சர்வ கஷ்டங்களும் விலகி லட்சுமியின் அருள் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று அரசமரத்தை வலம் வருவதை தவிர்த்துவிட வேண்டும். குழந்தைப்பேறு தடைபடபவர்கள் அரச மரத்தின் அடியில் இருக்கும் நாகம் மற்றும் விநாயகரை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அறிவியலின் படி அரசமரத்தைச் சுற்றி வரும் போது நாம் சுத்தமான ஆக்சிஜன் கலந்த காற்றை சுவாசிக்கிறோம். இந்த காற்று பெண்களின் மாதவிலக்கு சுழற்சியையும், அதனுடன் தொடர்புடைய சுரப்பிகளையும் சீராக்கும் தன்மை கொண்டது. இப்படி ஆன்மீகம் அறிவியல் என இரண்டு நன்மைகளையும் கொண்டுள்ள அரச மரத்தை வணங்கி நலம் பெறுவோம்.

இதனையும் படியுங்கள் : கர்ப்பபை கோளாறை போக்கி குழந்தை பாக்கியம் தரும் அரச மரம்!

Recipes AMP · Quick view
View full