ப்ரோக்கோலி உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் நிறைந்தது. கண் பார்வை நன்றாக தெரிய, எலும்புகள் வலுப்பெற, இதய நோய் பாதிப்புகள் வராமல் தடுக்க, செரிமான கோளாறுகளை சீர் செய்ய, கொலஸ்ட்ராலை குறைக்க, கேன்சரை அழிக்க, இளமையை தக்க வைக்க, இப்படி நன்மைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதோடு மட்டுமல்லாமல் விட்டமின் ஏ, சி சத்துக்களும் இதில் அதிகமாக நிறைந்துள்ளது. காலிஃப்ளவர் போலவே பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய இந்த ப்ரோக்கோலியை பார்த்தால் யாரும் வாங்க மாட்டாங்க. இதை எப்படி சமைப்பது என்று தெரியாமலே இதை நிறைய பேர் வாங்கவே மாட்டாங்க.இனி கடையில் இந்த ப்ரோக்கோலியை பார்த்தால் விடாதீங்க. உடனே வாங்கிட்டு வந்துடுங்க.
ரொம்ப ரொம்ப சுலபமான ப்ரோக்கோலி தண்டு சாம்பார் இதோ உங்களுக்காக. இந்த பிரக்கோலியை எப்படி சமைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு சில விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரக்கோலியை வாங்கி வீட்டில் வைத்து சமைக்காமல் விட்டு விட்டால் அது மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். அப்படி நிறம் மாறிவிட்டால் அதை சமைத்து சாப்பிட வேண்டாம். வாங்கியவுடன் கூடுமானவரை ஃப்ரிட்ஜில் கூட வைக்காமல் அப்போதே சமைப்பது நல்லது.
ஒவ்வொரு வீட்டிலும் சாம்பார், கூட்டு ஒவ்வொரு விதமாக செய்வார்கள். இன்று நாம் செய்யப்போகும் இந்த ப்ரோக்கோலி சாம்பார் ரொம்ப ரொம்ப ருசியாகவும் இருக்கும். அதே சமயம் செய்வதற்கு எந்த கஷ்டமும் இருக்காது. பத்தே நிமிடம் போதும் ப்ரோக்கோலி சாம்பார் தயாராகிவிடும். சரி வாங்க ஆரோக்கியமான அசத்தலான ப்ரோக்கோலி சாம்பார் செய்முறையை பார்த்துவிடலாம்.
ப்ரோக்கோலி சாம்பார் | Broccoli Sambar Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கப் துவரம் பருப்பு
- 1 ப்ரோக்கோலி
- 1 கப் சின்ன வெங்காயம்
- 1 பல் பூண்டு
- 2 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 2 தேக்கரண்டி சாம்பார் தூள்
- 1/2 தேக்கரண்டி புளி பேஸ்ட்
- வெல்லம் சிறிதளவு
- கொத்தமல்லி இலை சிறிதளவு
- உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க
- எண்ணெய் சிறிதளவு
- கடுகு சிறிதளவு
- உளுத்தம் பருப்பு சிறிதளவு
- சீரகம் சிறிதளவு
- வெந்தயம் சிறிதளவு
- காய்ந்த மிளகாய் சிறிதளவு
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
- பாத்திரத்தில் துவரம் பருப்புடன் பூண்டு. மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பாதி தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம்அரை பதம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய ப்ரோக்கோலித் தண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
- பிறகு சாம்பார் தூள், உப்பு மற்றும் புளிக் கரைசல் சேர்த்து, தேவையெனில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் அத்துடன் வேக வைத்த துவரம் பருப்பைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்கு கொதி வந்ததும் ப்ரோக்கோலித் தண்டு வெந்ததைச் சரி பார்த்து, வெல்லம் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.