வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்க இனி வழிபட வேண்டிய நாள் இது தான்!!
தெய்வ வழிபாட்டிற்கே உரிய நாட்களாக சில குறிப்பிட்ட நாட்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியதாக கணக்கிடப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில், அந்த நாளுக்குரிய தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபித்தும், பூஜைகள் செய்தும், விரதம் இருந்தும் வழிபட்டால் அதற்கா
தெய்வ வழிபாட்டிற்கே உரிய நாட்களாக சில குறிப்பிட்ட நாட்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியதாக கணக்கிடப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில், அந்த நாளுக்குரிய தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபித்தும், பூஜைகள் செய்தும், விரதம் இருந்தும் வழிபட்டால் அதற்கான முழு பலனையும் நாம் பெற முடியும். இந்த நாட்களில் தெய்வீக சக்தி அதிகரித்த காணப்படும். அந்த குறிப்பிட்ட நாளில், நாம் பூஜைகள் செய்தும், விரதம் இருந்தும், கோவிலுக்கு சென்றும் வழிபட்டால் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வெற்றிகளும், மகிழ்ச்சியும் கிடைக்கும். அப்படி வெற்றிகளை பெறுவதற்கு தவறாமல் வழிபட வேண்டிய நாள் குறித்தும், அந்த நாளின் சிறப்பு குறித்தும் இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அஷ்டமி நவமி ஏன் மக்களால் தவிர்க்கப்படுகிறது?
சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு. ஆனால் கோபியர் கொஞ்சும் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படும் அஷ்டமி தினத்தை கோகுலாஷ்டமி என அழைக்கிறோம். ராமர் பிறந்த நவமி தினத்தை ராமநவமி என அழைக்கிறோம். இப்படி பார்த்தால் அஷ்டமி, நவமியை கொண்டாடதானே வேண்டும், அன்றைய தினத்தை கொண்டாடாமல் ஏன் சுபகாரியங்களை தள்ளி வைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார்; ஆனால் நாமோ சாதாரண மனிதர்கள் தான்.
இதேபோல் நவமியில் பிறந்த ராமர், அரியணை ஏற்கும் நேரத்தில் மற உடை தரித்து காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சீதையை பிரிந்து அவர் பட்ட துயரங்கள் எல்லாம் நவமி திதியில் அவர் பிறந்த காரணத்தால் தான். அதுமட்டுமல்லாமல் அஷ்டமி தினத்தில் அஷ்டலட்சுமிகள் எல்லோரும் பைரவர் வழிபாட்டில் ஈடுபடுவதால், அஷ்டமி அன்று செய்யப்படும் யாகம், பூஜை, ஹோமம், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு 8 லட்சுமிகளும் அருள் கொடுக்க முடியாதாம். அஷ்டலட்சுமிகள் அருள் கிடைக்காமல் போனால் அந்த காரியம் எப்படி விருத்தியாகும். ஆகவே தான் அஷ்டமி திதி அன்று சுப காரியங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
சாபம் அளித்த சிவபெருமான்
சிவபெருமான் உலகை காக்க சூரியன், சந்திரன் இருவருக்கும் பணியை சமமாக பிரித்து வழங்கினார். அதன்படி சூரியனும், சந்திரனும் தங்கள் பணியை செய்து வந்தனர். ஆனால் சந்திரன் சிவபெருமானிடம் அவ்வப்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது என கூறினார். இறைவனும் அதற்கு ஒப்புக்கொண்டார். அதன்படி சந்திரனுக்கு ஒரு நாள் (அமாவாசை) விடுப்பு கொடுத்து மற்ற நாட்களில் அவர் பணியை சிறப்பாக பார்க்கிறாரா என்பதை கவனிக்க பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி ஆகிய 14 நபர்களை சந்திரனின் பணியை பார்வையிடுவதற்காக நியமித்தார். ஆனால் அவர்களோ தங்களுக்குப் பணிநேரம் சமமாக இருந்தாலும், அமாவாசை, பவுர்ணமிக்கு மட்டும் ஒருநாள் முழுப்பணியாகவும், தங்களுக்குப் பகுதிப்பணிகளாக இரு நாட்கள் பணியும் கொடுத்து விட்டதை நினைத்துக் கவலை அடைந்தனர். இது குறித்து சிவபெருமான் பேசிக்கொண்டிருந்தபோது, அஷ்டமி, நவமி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் கோபமடைந்த சிவபெருமான் மக்கள் உங்கள் இருவரையும் விலக்கி வைப்பார்கள். அந்த நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் தொடங்கமாட்டார்கள் என்று சாபமிட்டார்.
சாபம் தீர்த்த மகாவிஷ்ணு
சாபம் பெற்ற அஷ்டமி நவமி இருவரும் தங்கள் தவறை உணர்ந்து சிவபெருமானை நோக்கி வழிபாடு மேற்கொண்டார்கள். இதனால் மனமகிழ்ந்த சிவபெருமான் உங்களுக்கு கொடுத்த சாபத்தில் இருந்து விடுவிக்க என்னால் முடியாது. நீங்கள் இருவரும் விஷ்ணுவை சந்தித்து உங்கள் குறைகளைக் கூறுங்கள் என்றார். அதன்படி அஷ்டமி, நவமி திதிகள் விஷ்ணுவை வழிபட்டு வரத் தொடங்கினர். அவர்களின் வழிபாட்டால் மனமகிழ்ந்த விஷ்ணு பகவான், உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும் என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கௌசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராமநவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
வெற்றி தரும் நவமி
இந்த நவமி திதியில் மகா சண்டி ஹோமம் நடத்துவதன் மூலம் சாபங்கள், தடைகள் விலகி, லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள், நண்பர்களாக மாறி வருவார்கள். நவமியில், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம். எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். ராமநவமி விரதம் இருந்து ராமனை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் ஆசி கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். அஷ்டமி என்பது பைரவருக்குரிய வழிபாட்டு நாளாகும். வளர்பிறை அஷ்டமி நாளில் கால பைரவர் அல்லது சொர்ண பைரவரை வழிபடலாம். கால பைரவர் போற்றியை 108 போற்றி அல்லது 1008 போற்றி பாராயணம் செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : துன்பம் நீக்கும் அஷ்டமி நவமி திதிகளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் வாழ்வில் என்ன பலன் கிடைக்கும்!