Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் துன்பம் நீக்கும் அஷ்டமி நவமி திதிகளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் வாழ்வில் என்ன பலன் கிடைக்கும்!

துன்பம் நீக்கும் அஷ்டமி நவமி திதிகளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் வாழ்வில் என்ன பலன் கிடைக்கும்!

நாம் எதைச் செய்தாலும் அதை நல்ல நேரத்தில், நல்ல நாளில் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதனால், நல்ல காரியங்கள் செய்யும்பொழுது அந்த நாள் நல்ல நாளா என்று பார்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இதில் அஷ்டமி, நவமி, பிரதமை, அமாவாசை போன்ற சில நாட்களை சுபகாரியங்கள் செய்யக்கூடாத நாட்கள் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் இந்த திதிகளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் வாழ்வில் என்ன பலன் கிடைக்கும் என்றும், மேலும் இந்த நாளில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்றும் இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

அஷ்டமியில் ஏன் சுபகாரியங்கள் கூடாது?

கோபியர் கொஞ்சும் கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படும் அஷ்டமி தினத்தை கோகுலாஷ்டமி என அழைக்கிறோம். ராமர் பிறந்த நவமி தினத்தை ராமநவமி என அழைக்கிறோம். இப்படி பார்த்தால் அஷ்டமி, நவமியை கொண்டாடதானே வேண்டும், அன்றைய தினத்தை கொண்டாடாமல் ஏன் சுபகாரியங்களை தள்ளி வைக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் அஷ்டமி தினத்தில் அஷ்டலட்சுமிகள் எல்லோரும் பைரவர் வழிபாட்டில் ஈடுபடுவதால், அஷ்டமி அன்று செய்யப்படும் யாகம், பூஜை, ஹோமம், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு 8 லட்சுமிகளும் அருள் கொடுக்க முடியாதாம். அஷ்டலட்சுமிகள் அருள் கிடைக்காமல் போனால் அந்த காரியம் எப்படி விருத்தியாகும். ஆகவே தான் அஷ்டமி திதி அன்று சுப காரியங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

அஷ்டமி, நவமி திதி

பொதுவாக, அஷ்டமி, நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக முடியும். அஷ்டமி, நவமி திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும். நவமியில் தெய்வங்களுக்கு உயிர் பலிகொடுத்தல், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம். உண்மையில், அஷ்டமி திதி ரொம்ப சக்தி வாய்ந்தது. மேலும் இந்நாளில் அதுவும் ராகு காலம் போன்ற நேரத்தில் விளக்கேற்றி பைரவரை வழிபட்டால், எப்பேர்பட்ட துன்பமும் சிட்டாக பறந்து போய் விடும். மேலும், இந்தத் திதியில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி வேலையில் ஈடுபட்டால், அனைத்துக் காரியமும் சுபமாக நடைபெறும் என்பது உறுதி.

அஷ்டமி பைரவர் வழிபாடு

அஷ்டமி என்பது பைரவருக்குரிய வழிபாட்டு நாளாகும். வளர்பிறை அஷ்டமி நாளில் கால பைரவர் அல்லது சொர்ண பைரவரை வழிபடலாம். கால பைரவர் போற்றியை 108 போற்றி அல்லது 1008 போற்றி பாராயணம் செய்யலாம். கர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது சொர்ணா கர்ஷண பைரவர் 108 போற்றி ஆகியவற்றையும் பாராயணம் செய்தால் சுப மங்களங்கள் சேரும். தலைகுனியா வாழ்க்கை வாழ முடியும். வளர்பிறை அஷ்டமியில் கால பைரவர் அல்லது சொர்ண பைரவரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு

எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். அஷ்டமி தினத்தில் அதிகாலையில் நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. தேய்பிறை அஷ்டமியில் விரதமிருந்து பஞ்சதீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

-விளம்பரம்-

நவமி திதியில் என்ன செய்யலாம்?

நவமி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக்காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது. இந்த நவமி திதியில் மகா சண்டி ஹோமம் நடத்துவதன் மூலம் சாபங்கள், தடைகள் விலகி, லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள், நண்பர்களாக மாறி வருவார்கள். நவமியில், காவல் தெய்வ வழிபாடு, எல்லை தெய்வ வழிபாடு போன்றவற்றை செய்யலாம். எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். ராமநவமி விரதம் இருந்து ராமனை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் ஆசி கிடைக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

நவமி திதியில் என்ன செய்யக்கூடாது?

நவமி திதியில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். உதாரணமாக அடுத்தவரை தாக்குவது, பழி வாங்குவது, பதிலடி கொடுப்பது போன்ற எண்ணங்கள் எழும். எனவே அன்றைய தினங்களில் இறை வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை வரும் நவமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். எனவே நவமி திதி நாளில் சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வேளையில் ஈடுபட்டால் அனைத்து காரியங்களும் சுமுகமாக நடைபெறும்.

இதனையும் படியுங்கள் : வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

-விளம்பரம்-