வழக்கமாக நாம் தக்காளி வாங்கி ஒரே மாதிரியான தக்காளி குழம்பு அல்லது கிரேவியை தான் பெரும்பாலும் செய்து சாப்பிடுவோம். ஒரே மாதிரியான தக்காளி குழம்பு செய்வதால் வீட்டில் இருப்பவர்களுக்கு போர் அடிக்கும் அல்லவா? நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு தக்காளி கிரேவி சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கொங்கு நாட்டு ஸ்டைலும் ஒன்று. இந்த கொங்கு நாட்டு தக்காளி கிரேவியானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இந்த வாரம் வித்தியாசமான தக்காளி கிரேவி செய்ய நினைத்தால், கொங்கு நாட்டு தக்காளி கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி வழக்கத்திற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். இந்த சுவையான கொங்கு நாட்டு தக்காளி கிரேவி செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம்.
இந்த தக்காளி கிரேவியை செய்வதற்கு காய்கறிகள் கூட எதுவும் தேவை இல்லை கொஞ்சம் வெங்காயம், ஒரு கப் தக்காளி இருந்தால் போதும் இந்த கிரேவியை 10 நிமிடத்திற்குள்ளே தயார் செய்து விடலாம். கொங்கு நாட்டு தக்காளி கிரேவியுடன் சோறு உண்டு கை கழுவிய பிறகு வீசும் கை மணம் இன்னொரு முறை சோறு உண்ண தோணும். மேலும், இந்தக் கிரேவியை அடிக்கடி செய்து தரும்படி கேட்பார்கள். மண் வாசனையுடன் கூடிய கொங்கு நாடு தக்காளி கிரேவி செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி | kongunadu tomato gravy recipe in tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 4 தக்காளி
- 1 பெரிய வெங்காயம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
அரைக்க :
- 1 கப் தேங்காய்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 பச்சை மிளகாய்
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் கசகசா
- 4 முந்திரி பருப்பு
செய்முறை
- முதலில் தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு கழுவி நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- பின் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், முந்திரி பருப்பு, சோம்பு, பட்டை, கிராம்பு, சீரகம், ஏலக்காய், கசகசா, தக்காளி சேர்த்து லேசாக அரைத்து மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- அதன்பிறகு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
- பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி விடவும்.
- குக்கரை 2 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் சூப்பரான கொங்கு நாட்டு ஸ்பெஷல் தக்காளி கிரேவி தயார்.