Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் கருங்காலி மாலை அணிவதன் பலன்கள்

கருங்காலி மாலை அணிவதன் பலன்கள்

கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது. சக்தி வாய்ந்த இந்த மாலையை பலர் அணிந்திருந்தாலும், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், தனுசு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் அணிந்த பின்னர் இதை அணிவது மற்றும் தெரிந்து கொள்வது அதிகரித்து வருகிறது. கருங்காலி இருக்கும் இடத்தில், தெய்வீக சக்தி சற்று அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே பணம் மற்றும் செல்வம் பெருக கருங்காலி மாலையை அணியலாம் அல்லது அதன் குச்சிகளை பூஜை அறையில் வைக்கலாம். குல தெய்வத்தின் அருளை முழுமையாகப் பெற்ற பெருமை கருங்காலி மாலைக்கு உண்டு. கிரகண நேரத்தில் கருங்காலி மரத்தால் செய்த உலக்கை மட்டுமே எவ்வித பிடியும் இல்லாமல் அப்படியே நிற்கும் ஆற்றல் பெற்றது. மற்ற எந்த மரத்திற்கும் இந்த சக்தி கிடையாது. தீய சக்திகளை நெருங்க விடாமல் செய்யும் ஆற்றல் கருங்காலி மரத்திற்கு உண்டு. இந்த மாலையை யார் யார் அணியலாம்? இதன் பலன்கள் என்ன என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

எப்போதெல்லாம் இந்த மாலையை அணிந்து கொள்ளலாம்?

கருங்காலி மாலை மருத்துவ மற்றும் தெய்வீக குணம் கொண்டது. நேர்மறை ஆற்றலை ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய அற்புத பொருள் என்பதால் இதனை அசைவம் சாப்பிடும் நாளில் கழற்றி வைத்துவிடுவது நல்லது.அதே போல பெண்களும் கருங்காலி மாலை அணிந்து கொள்ளலாம். இவர்கள் மாத விலக்கு நாட்களின் போது கழற்றி வைத்து விட்டு, அதன் பின்னர் அணிந்து கொள்ளலாம். இரவில் தூங்குவதற்கு முன் கருங்காலி மாலையை கழற்றி, சுவாமி படத்தின் முன் வைத்து விட்டு, மறுநாள் காலையில் அணிந்து கொள்ளலாம். இறந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் போது இந்த மாலையை கழற்றி வைத்துச் செல்வது நல்லது. ஒரு வேளை மறதியால் கழட்டாமல் சென்றவர்கள் சுத்தமாக தலைக்கு குளித்து விட்டு, கருங்காலி மாலையை கழற்றி சுத்தமான மஞ்சள் நீர், பால் ஆகியவற்றைக் கொண்டு சுத்தம் செய்து விட்டு, அதற்கு பிறகு அணிவிக்கலாம்.

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

கருங்காலி மாலை கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. ஆகையால் நம்முடைய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் போக்கி நேர்மறை எண்ணங்களை நம்முள் செலுத்தக்கூடிய தன்மை நிறைந்தது. கருங்காலியில் அனைத்து தெய்வங்களும் குடியிருப்பதாக சொல்லப்படுவதால் இதை அணிந்தாலும், வீட்டில் வைத்து வழிபட்டாலும் குலதெய்வம் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு உள்ளவர்களும் கருங்காலியை அணியலாம். இதனால் செவ்வாயால் ஏற்படும் கெடு பலன்கள், பாதிப்புகள் குறையும். கருங்காலி நவகிரகங்களின் பாதிப்புக்கள் தோஷங்களை கட்டுப்படுத்தும். இது எதிர்மறை ஆற்றல்களை அழிக்கக் கூடியதாகும். குறிப்பாக ஆண்,பெண் என இருபாலரதும் மலட்டுத்தன்மையை நீக்குவதோடு குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும்.

கருங்காலி மாலையை யாரெல்லாம் அணியலாம்?

இந்த கருங்காலி மரத்திற்கு செவ்வாயின் சக்தி அதிகம், அதனால் செவ்வாய்க்கு சாதகமான ராசி, நட்சத்திரங்கள் மட்டும் அணிய வேண்டும் என கூறப்படுவது தவறு. இந்த கருங்காலி மாலையை யார் வேண்டுமானாலும் அணியலாம். குறிப்பாக உடல் நல பிரச்னைகள் உள்ளவர்கள் அணிந்து வர ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமல்லாமல் கருங்காலி மர கட்டையால் செய்யப்பட்ட இந்த மாலையை மேஷம், விருச்சிகம், மிதுன ராசிகளில் உள்ள சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணியலாம். மிருகசீரிஷம், திருவாதிரை, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் இந்த கருங்காலி மாலையை அணிவது நன்மை தரும் என கூறப்படுகிறது.

எந்த நாளில் கருங்காலி மாலை அணியலாம்?

வாஸ்து சாஸ்திர முறைப்படியும் கருங்காலி மிகவும் சிறப்புடைய பொருளாகும். கருங்காலி மாலை இருக்கும் இடத்தில் வாஸ்து பிரச்சனைகள், தோஷங்கள் இருந்தாலும் அது நீங்கி விடும் என்பது ஐதீகம். இந்த கருங்காலி மாலையை ஆண், பெண், குழந்தைகள், பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் அணியலாம். இதை அணிபவர்கள் நல்ல நேரம் பார்த்து முறையாக அணிய வேண்டும். கருங்காலி மாலை செவ்வாய் பகவானுக்கு உரியது என்பதால் அவருக்குரிய செவ்வாய் கிழமையில் இதை அணிவது மிகவும் சிறப்பானதாகும். கருங்காலி மாலையை அணிய நினைப்பவர்கள் முருகப்பொருமானை நினைத்து அணிந்தால் மேலும் சௌபாக்கிய சிந்தனைக்கு வழிவகுக்கும். நல்ல எண்ணங்களையும் உறுதியான மன வலிமையையும் உருவாக்க இவ் கருங்காலி மாலை உதவுகின்றது.

-விளம்பரம்-

செங்காலி மாலை அணியலாமா?

கருங்காலி செங்காலி ஆகிய இரண்டு மரங்களும் ஒரே தன்மை உடையவைதான். ஆன்மிக அடிப்படையில் கருங்காலி மிருக சீரிட நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்றால் செங்காலி திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்கிறார்கள். செங்காலி மாலைகளும் கருங்காலி மாலைகளுக்கு இணையான பலன் தரும் என்றும் சொல்லப்படுகிறது. கருங்காலி, செங்காலி ஆகிய இரு மரங்களும் வசியத் தன்மை கொண்டவை அதனால் கருங்காலி மாலைகளைப் போல் செங்காலி மாலைகள் அணிந்து கொள்வதும் அதிர்ஷ்டம் தரும் என சொல்லப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : கருங்காலி மாலை அணிய வேண்டிய ராசிக்காரர்கள்