சனி தேவன், சனி பகவான், சனீஸ்வரன் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் சனி பகவான், காகத்தை வாகனமாகக் கொண்டவர். சனிக்கிழமை, கருப்பு நிறம், தானியங்களில் கருப்பு எள் போன்றவை சனீஸ்வரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. பொதுவாக பலருக்கு சனி என்றால் பயம் ஆனால் சனி பகவானின் உண்மை தன்மையை அறிந்தால் பயம் இருக்காது. ஜோதிடத்தில், சனி ஒரு நீதியை விரும்பும் கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. அது ஒரு மனிதனுக்கு அவனது கர்மங்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் கெட்ட பலன்களைத் தருகிறது.

அதனால்தான் அவர் நீதியின் கடவுள் அல்லது கர்ம பலன்களைக் கொடுப்பவர் என்று அழைக்கப்படுகிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களைக் திருப்பிக் கொடுக்கக் கூடிய சனி பகவானின் கோபப் பார்வை நம்மை கஷ்டப்படுத்தும் என்றால், அதற்கு சில பரிகாரங்களும் உண்டு. அவற்றை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
சனி பகவான்
சனி பகவான் (சனீஸ்வரன்) ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். நவகிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுபவர் சனீஸ்வர பகவான். ஒருவரின் ஆயுள் நீடிக்கவும், கர்ம வினைகள் நீங்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான் தான். இவர் மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவர் சூரிய தேவன் – சாயா தேவி தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது.
சனி தோஷம் என்றால் என்ன?
நவகிரகங்களில் கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி பகவான். சனி பகவான் சிறப்பாக அமைந்த ஒருவர் தன்னுடைய தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் சிறப்பாகச் செயல்படுவார். செவ்வாய், சந்திரன், ராகு ஆகியோரது வீட்டில் சனி நுழைந்தாலும் அது சனி தோஷத்துக்கு காரணமாக அமைந்து விடும் என்று ஜோதிட முறையில் கூறப்பட்டுள்ளது. சிலரின் ஜாதகத்தில் அல்லது கோள்சார நிலையின் போது சனி சாதகமற்ற நிலையில் இருக்கும் போது அவருக்கு சனிபகவானால் பிரச்சினைகள் ஏற்படும்.
குறிப்பாக ஒரு ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து நின்றால் அது நல்ல நிலையில் இருந்தாலும் அதை சனி தோஷம் என்றுதான் சொல்வார்கள். சனி வீட்டில் சந்திரன் இருந்தாலோ அல்லது சந்தி ரன் வீட்டில் சனி இருந்தாலோ அதையும் தோஷம் என்று தான் குறிப்பிடுவார்கள். சனி பகவான் கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டுகளை ஏழரை சனி பிடித்துவிட்டது என்று சொல்வார்கள். சனி 8-வது இடத்தில் இருந்தால் அஷ்டமத்து சனி என்பார்கள். அதுபோலதான் மற்ற வகை சனிகளும் சொல்லப்படுகின்றன.
சனி பகவானின் தோஷம் நீங்க
ஜோதிட சாஸ்திரப்படி மிதுனம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் சனிக்கு தனி கவனம் உண்டு. இந்த ராசிக்காரர்கள் சனியின் கோபத்தை உண்டாக்கும், மோசமான பலன்களைத் தரும் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. முடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம். இந்த வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும்.
திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும். சனிபகவானின் தோஷம் நீங்க சிவராத்திரியில் சிவனை வழிபடுங்கள். சிவனை வழிபடுவதால் சனிக்கு தனி அந்தஸ்து கிடைக்கும். அதனால் தோஷங்க நீங்கும். மேலும் சிவ வழிபாடு சனி பகவானை சாந்தம் அடைய செய்யும் என்பது நம்பிக்கை.

சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிகையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.
வீட்டிலேயே சனியை சாந்தப்படுத்தும் பாடல்களை படிக்கலாம். சிவன் துதி, அனுமன் துதிகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம். “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ”, – 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும். சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரங்களை மனதில் உள்வாங்கிக் கொண்டு சொல்லுங்கள். சனி ஓடோடி வந்து உங்களுக்கு உதவுவார்.
சனிக்கிழமைகளில் பிரதோஷம் வந்தால் அது மகாபிரதோஷம் என்று அழைக்கப்படும். அன்றைய நாட்களில் நந்தியை வழிபடுவது விசேஷமானது. அன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி தோஷம் வீரியத்தை இழக்கும். சனி தசையின்போது ராமாயணத்தின் பாலகாண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்கலாம்.
இதனையும் படியுங்கள் : சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!





