கீரை வகைகளில் மிகவும் வித்தியாசமான கீரை புளிச்சக்கீரை. வாயில் வைத்தாலே அப்படி ஒரு புளிப்பு இதனிடத்தில் இருப்பது என்பது அதிசயம் தான். இயற்கை அன்னை கொடுத்த வரப்பிரசாதம் தான் இந்த புளிச்சக்கீரையும் ஒன்று. பாரம்பரிய முறையில் கிராமத்து வாடையில் புளிச்சக்கீரையை துவையல் ,இந்த முறையில் ஒரு முறை வைத்து பாருங்கள்! அதன் பிறகு இந்தக் கீரையை நீங்கள் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்!
இதை கோங்குரா துவையல் என்றும் சிலர் சொல்வார்கள். புளிச்சக்கீரையை பக்குவமாக துவையல் செய்துவிட்டால் போதும். சுடச்சுட சாதத்தில் இந்த துவையலை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அத்தனை அருமையாக இருக்கும். எவ்வளவு சாதம் உள்ளே இறங்குது அப்படின்னு தெரியவே தெரியாது. சரி சூப்பரான இந்த பாரம்பரிய ரெசிபியை பார்க்கலாம் வாங்க. புளிச்சக்கீரைத் துவையல் சமைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
புளிச்சக்கீரைத் துவையல் | Gongura Chutney Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 கைப்பிடி புளிச்சக்கீரை
- 1 மேசைக்கரண்டி தேங்காய் துருவல் (விரும்பினால் மட்டும்)
- 2 பச்சைமிளகாய் காரத்திற்கேற்ப)
- 1 வெங்காயம்
- 2 சிகப்பு மிளகாய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
- 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு
வறுத்து பொடிக்க:
- 1 தேக்கரண்டி வெந்தயம்
- 1 தேக்கரண்டி தனியா
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி வெள்ளை எள்
செய்முறை
- கீரையை சுத்தம் செய்து ஆய்ந்து அலசி எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சைமிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
- பின்னர் அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கீரையை போட்டு வதக்கவும். கடைசியில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்து விடவும். வாணலியில் வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்தவற்றை மிக்ஸில்யில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும், அதனுடன் வதக்கி வைத்துள்ள கீரை, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- அரைத்துவைத்திருக்கும் துவையலுடன் வதக்கியவற்றை போட்டு கலந்துக் கொள்ளவும். சுவையான கோங்குரா துவையல் ரெடி.