எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது உண்டு. இந்து மத மக்கள் பிள்ளையாரை முதன்மை தெய்வமாக கொண்டாடுகிறார்கள். முழு முதல் கடவுளாக விளங்குபவர் விநாயகர். இவர் அவதர தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி கடைப்பிடிக்கப்படுகிறது.
மிக எளிமையாக எல்லா இடத்திலும் அமர்ந்திருக்கும் தெய்வமாகவும், எளியோருக்கு இனியவராகத் திகழ்பவர் நம் விநாயகர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. வீடுகளில் மட்டுமல்லாமல், பொது இடங்களில் பலரும் கூடி பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு அதை நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. நாம் பிள்ளையார் வாங்கும் போதும், வாங்கி வீட்டிற்கு வந்தவுடன் என்ன செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று எப்படி கணபதியை வழிபட வேண்டும் என்பதைப் பற்றி இந்த ஆன்மீக பதிவில் பார்க்கலாம்.

விநாயகர் சிலையை வாங்கி வருவதற்கான நல்ல நேரம்
விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்கி வருவதற்கு முன் வீட்டை சுத்தம் செய்து, நாமும் குளித்து முடித்து சுத்தமாக சென்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் விநாயகர் சிலையை நாம் வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். அதிலும் களிமண்ணால் ஆன விநாயகரை நாம் வீட்டிற்கு வாங்கி வரும் பொழுது எல்லாவிதமான நன்மைகளும் நமக்கு கிடைக்கும்.
விநாயகர் வழிபாடு செய்வதற்கான பொருட்கள்
இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இலைகளுக்கும் புற்களுக்கும் உண்டு. விநாயகருக்கு மிகவும் உகந்த மலர் எருக்கம்பூ மற்றும் தும்பைப் பூ. இவை எளிமையாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வளர்வன. அதுமட்டுமல்லாமல் அரிசி மாவு, மஞ்சள், குங்குமம், அருகம்புல், பன்னீர், பால் ஆகியவையும் விநாயகருக்கு உகந்த பொருட்கள் தான்.
விநாயகரை வழிபடும் முறை
விநாயகரை வீட்டிற்கு கொண்டு வந்த உடன் பன்னீர் தெளித்து, தீபம் ஏற்றி, நெற்றியில் குங்குமத் திலகம் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் இட்டு, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண்களால் அலங்கரிக்கவும் நம்முடைய நகையை பயன்படுத்தும் பொழுது அதனை சுத்தம் செய்த பின் விநாயகருக்கு அணிவிக்கவும். சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை வெவ்வேறு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கவும்.

அவருக்கு பிடித்த 5 வகையான பழங்கள், சுண்டல், பாயாசம், விநாயகருக்கு பிடித்த மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றை நாம் படைக்க வேண்டும். இந்த நிவேதனப்பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக் கிடக்கிறது. மேலும் காய்ச்சிய பால், அப்பம் மற்றும் சர்க்கரை பொங்கல் என இவை அனைத்தினையும் செய்து வழிபடலாம்.
விநாயகரை வழிபடுவதற்கான உகந்த நேரம்
ஒருவேளை உங்களால் களி மண்ணால் விநாயகரை செய்ய முடியவில்லை என்றால் மஞ்சளால் கூட விநாயகரை செய்து கொள்ளலாம். திங்கட்கிழமை காலை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவதாக இருந்தால், காலை 4:00 மணி முதல் 6 மணி வரை வழிபாடு செய்யலாம். அல்லது மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் வழிபாடு செய்யலாம். மாலை 5 மணிக்கு மேல் வழிபாடு செய்யலாம். செவ்வாய்க்கிழமை வழிபடுபவராக இருந்தால் காலை நேரம் 11 மணிக்குள் விநாயகர் வழிபாட்டை முடித்துக் கொள்வது நல்லது.
மாலையில் விநாயகரை வழிபட்ட பிறகு சந்திர தரிசனம் செய்து, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். விநாயகர் சிலையை வைத்து வழிபட்ட மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை நீர் நிலைகள், ஆறு, கடலில் கறைக்கவேண்டும். இந்த நாட்கள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது, எனவே விநாயகப் பெருமானை வீட்டில் கொண்டு வர முடியாதவர்கள், கோவில்களுக்குச் சென்று, கணபதிக்கு லட்டு சமர்ப்பித்து பிரார்த்தனை செய்யலாம்.