ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் தான். அதிலும் குறிப்பாக மட்டன், சிக்கன் தான் செய்ய வேண்டுமா என்ன? ஒரு மாற்றத்திற்கு கருவாட்டு குழம்பு செய்யலாம். பிறகு ஒவ்வொரு வாரமும் இதையே செய்ய சொல்லும் அளவிற்கு இதன் மனமும் சுவையும் இருக்கும்.கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேற கருவாட்டை சாப்பிடுவார்கள். கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
கருவாட்டின் வாசனை பலருக்கும் அலர்ஜி என்றாலும், அதனை குழம்பாக வைத்த பின் யாராக இருந்தாலும் ஒரு பிடிபிடித்து விடுவார்கள். இன்றும் தென் தமிழகத்தில் அதிகமானோர் கருவாட்டு குழம்பை விரும்பி சமைக்கிறார்கள். அது உடலுக்கு நல்லதும் கூட. இதன் மணமானது அந்த தெரு முழுவதும் சுண்டி இழுக்கும் அளவிற்கு இருக்கும். அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு மீன் மற்றும் கருவாடு தான். சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், ரசம், காரக்குழம்பு இவ்வாறான குழம்பு வகைகளை செய்து வைத்தாலும் நாம் என்றாவது ஒருநாள் செய்யும் கருவாட்டுக்குழம்பின் சுவை இதில் எதற்கும் இருக்காது.
கருவாட்டுக் குழம்பு என்று சொன்னவுடனே பலருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். மீன் குழம்பை விட அதிகம் விருப்பபட்டு சாப்பிடக் கூடியது கருவாட்டு குழம்பு தான். அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து மறுநாள் உண்டால் அதன் ருசியே தனி. குறிப்பாக கிராமப்புறங்களில் சமைக்கப்படும் கருவாட்டு குழம்பு தான் ருசியாக இருக்கும்.சுவையான கிராமத்து கனவா கருவாட்டு குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம்.
கிராமத்து கனவா கருவாட்டு குழம்பு | kanava dry fish curry recipe in tamil
Equipment
- 1 மண்சட்டி
- 1 பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 100 கி கனவா கருவாடு
- 15 சின்ன வெங்காயம்
- 2 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 10 பல் பூண்டு
- புளி எலுமிச்சை அளவு
- 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
- 2 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் வெந்தயம்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் கருவாட்டை சுடுதண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.
- புளியை தண்ணீரில் ஊற வைத்து அதன் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு மண்பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதில் நாம் கழுவி வைத்துள்ள கருவாடு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- பின்னர் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள், சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்கவிடவும்.
- சிறிது நேரம் கழித்து புளிகரைசலை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்கவிடவும்.
- அவ்வளவுதான் சுவையான கிராமத்து கனவா கருவாட்டு குழம்பு தயார்.