நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். சாம்பார் சாதம் என்றாலே பசி எடுக்க ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான மத்திய உணவு சாம்பார் சாதம். புல்லுச்சாமை அல்லது சாமை என்று அழைக்கப்படும் இந்த குதிரைவாலி அரிசி ஒரு புன்செய் பயிராகும். இந்த அற்புதமான குதிரைவாலி அரிசியில் கால்சியம், மணிச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை இவற்றில் அதிகமாகவே உள்ளன. அதோடு கோதுமையைவிட குதிரைவாலியில் ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
பச்சையம் இல்லாத சிறுதானியமாக உள்ள இந்த குதிரைவாலி அரிசி உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை கரைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் கண் சார்ந்த அனைத்து பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய பீட்டா கரோட்டின் இவற்றில் அதிகமாக உள்ளன. அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு குதிரைவாலி அரிசியில் சாதம் செய்து சாப்பிட்டு வந்தால் அவை அண்டாது. இப்படி எண்ணற்ற நற்பயன்களை உள்ளடக்கியுள்ள குதிரைவாலி அரிசியில் சாம்பார் சாதம் எப்படி தயார் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த சாம்பார் சாதத்தை குதிரைவாலி அரிசியில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரகு, திணை, சாமை போன்ற மற்ற மில்லட் வகைகளிலும் இதேபோல சாம்பார் சாதம் செய்தால் ருசியாக இருக்கும். வாங்க சுலபமான உடலுக்கு ஆரோக்கியம் தரும் அந்த சாம்பார் சாதத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
குதிரைவாலி சாம்பார் சாதம் | kuthiraivali sambar sadam recipe in tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் குதிரைவாலி அரிசி
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 10 முந்திரி
- 1/2 கப் சின்ன வெங்காயம்
- 1/2 கப் தக்காளி
- 1/2 கப் கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ்
- 1/4 கப் கத்தரிக்காய்
- 1/4 கப் முருங்கைக்காய்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 கப் வேகவைத்த துவரம் பருப்பு
- 1/2 கப் புளி கரைசல்
- உப்பு தேவையான அளவு
அரைக்க
- 2 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் உளுந்து
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் தனியா
- 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
செய்முறை
- முதலில் குதிரை வாலி அரிசி நன்கு கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு சீரகம் வெந்தயம், தனியா, காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- இதை ஆற வைத்து பின்னர் ஒரு மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், முந்திரி பருப்பு, வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதன்பிறகு அதில் நறுக்கிய வைத்துள்ள காய்கறிகள், மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்துள்ள பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்னர் வேகவைத்த துவரம் பருப்பு, புளி கரைசல், மற்றும் தேவையான அளவு தண்ணிர், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி விடவும்.
- அதன்பிறகு 3 விசில் வரை விட்டு அடுப்பை அணைத்து விடவும். விருப்பப்பட்டால் சாதத்தின் மேல் நெய் ஊற்றி பரிமாறலாம்.
- அவ்வளவுதான் சுவையான குதிரை வாலி அரிசி சாம்பார் சாதம் தயார்.