இந்திய வீடுகளில் சட்னி இல்லாமல் எந்த டிபனும் நிறைவடையாது. தோசை, இட்லி, இடியாப்பம், அடை தோசை, ரொட்டி, பொங்கல், வடை என எந்த ரெசிபியாக இருந்தாலும், சட்னி எப்போதும் சுவையை அதிகரிக்கிறது. இட்லி தோசை என்றாலே அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒருவகையான உணவு. இவை காலை மற்றும் இரவு உணவுகளில் அதிகம் இடம் பெற்றிருக்கும்.
இத்தகைய இட்லி தோசைக்கு சட்னி தயார் செய்வதுதான் மிக பெரிய வேலையாகும். இல்லத்தரசிகள் பலர் இட்லி தோசை என்றால் அதற்கு என்ன சட்னி தயார் செய்வது என்ற குழப்பமும், கேள்வியும் எழும். இனி இந்த கேள்விக்கும், குழப்பத்திற்கும் முற்று புள்ளி வைங்க. பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இரத்த சோகை ஏற்படாமல் இருப்பதோடு, உடலும் நன்கு வலுவுடன் இருக்கும். சிலருக்கு இந்த கீரையை கடைந்து சாப்பிட பிடிக்காது.
ஆனால் அந்த கீரையை சட்னி போல் செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும். மேலும் இந்த பசலைக்கீரை சட்னியானது இட்லி தோசைக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் சூப்பராக இருக்கும். இப்போது அந்த பசலைக்கீரை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
பாலக் கீரை சட்னி | Palak Chutney Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு பாலக்கீரை
- 4 சின்ன வெங்காயம்
- 2 பல் பூண்டு
- 3 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 புளி நெல்லிக்காய் அளவு
- உப்பு தேவையான அளவு
- 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
- 1 டேபிள் ஸ்பூன் கடுகு,
- 1 டீஸ்பூன் உளுந்து
- 2 மிளகாய் வற்றல்
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை
- முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். கீரையை அலசி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும். பின் அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு,சீரகம், புளி சேர்த்து வதக்கவும்.
- அவை லேசாக வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- கீரை ஆறியதும் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
- பின் கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வற்றல் தாளித்து சேர்க்கவும்.
- இறுதியில் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், சுவையான பசலைக்கீரை சட்னி ரெடி!!!