மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு புகழ்பெற்று விளங்குகிறது. பருப்பு உருண்டை மோர்க்குழம்பு பாரம்பரிய சுவைமிக்க குழம்பு வகை. நாம் மோர்க் குழம்பு அடிக்கடி சாப்பிட்டிருப்போம். அந்த மோர்க் குழம்பில் பருப்பு உருண்டை சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். இதனை செய்வது மிகவும் எளிதுதான். குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருள் என்றால் அது மோர்க் குழம்பு.
சாம்பார், ரசம், புளிக்குழம்பு என ஒரேபோன்ற குழம்பு வைத்து சலித்துப்போனவர்களுக்கான சூப்பர் ஆப்ஷன், மோர்க்குழம்பு. அதிலும் சுவை அதிகரிக்க இங்கு பகிரப்பட்டுள்ள ஸ்பெஷல் பருப்பு உருண்டை சேர்த்து மோர் குழம்பு செய்து பாருங்கள். நிச்சயம் மறுமுறை செய்வீர்கள். உருண்டை காரக்குழப்பு சாப்பீட்டு இருப்பீங்க ஆனால் பருப்பு உருண்டை மோர் குழம்பு அதை விட அருமையாக இருக்கும். இந்த மாறுபாடு குறிப்பாக திருமணங்கள் அல்லது விசேஷ நிகழ்வுகளின் போது பொதுவாக செய்யப்படும் குழம்புகளில் ஒன்றாகும்.
இது கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இந்த பருப்பு உருண்டை மோர்க்குழம்பை மிகவும் சுலபமாக செய்யலாம் அதே சமயத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அதன் சுவை இருக்கும். பருப்பு உருண்டை மோர்க்குழம்பை இரண்டு விதமாக செய்யலாம். உருண்டைகளை பிடித்து மோர்க்குழம்பு செய்து அதில் போட்டு மூடி வைத்து வேக வைக்கலாம், அல்லது பருப்பு உருண்டைகளை வேக வைத்து அதன் பின்னர் மோருடன் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பருப்பு உருண்டை மோர்க்குழம்பு | paruppu urundai morkulambu recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் புளித்த தயிர்
- 1 கப் தேங்காய் துருவல்
- 1/4 கப் கடலை பருப்பு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டேபிள் ஸ்பூன் மல்லி
- 1 துண்டு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 4 வர மிளகாய்
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
தாளிக்க :
- 1/2 டீஸ்பூன் கடுகு
- தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
செய்முறை
- முதலில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இவை இரண்டையும் இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஊறிய பருப்புகளை ஒரு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- நாம் அரைத்த இந்த விழுதை சிறிய உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, சீரகம், கடுகு இவைகளை மோர் குழம்பிற்கு தனியாக ஊற வைத்து கொள்ளவும்.
- ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து மோர் குழம்பிற்கு ஊற வைத்தவைகளை சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மோர் குழம்பிற்கு அரைத்த விழுதை சேர்த்து தயிரை நன்றாக கடைந்து இதில் சேர்த்து 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
- இப்பொழுது வேகவைத்த பருப்பு உருண்டைகளை அதில் மெதுவாக சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- இந்த குழம்பு நன்கு பொங்கி வரும் பொழுது ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து குழம்பில் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான பருப்பு உருண்டை மோர்க்குழம்பு தயார்.