மார்க்கெட்டுகளில் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு உணவுப் பொருள் அகத்திக் கீரை. இதில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக அகத்திக் கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக் கொண்டது. இன்னொன்று சிவப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகின்றன. அகத்திக்கீரையைப் போல அகத்திப்பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அகத்திப்பூவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் அதிக பலத்தை தருகிறது. அகத்திக்பூக்கள் சற்றுப் பெரியதாக இருக்கும். இவற்றை யாரும் சரியாக உணவாக உட்கொள்வதில்லை.
இவற்றை கீரையுடனும் சமைத்து சாப்பிடலாம். தனியாக கூட்டு வைத்தும் சாப்பிடலாம். வெயிலில் அதிகமாக உழைப்பவர்களுக்கும், கண் எரிச்சல், தலைச்சுற்றல், சிறுநீரில் மஞ்சள் நிறமாக போவது போன்ற பாதிப்புகளுக்கு அகத்திப்பூக்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். பித்தம், சளித்தொல்லை, தும்மல் ஆகியவற்றை நீக்கும் சக்தி அகத்திப்பூக்களுக்கு உண்டு. உடல்சூடு, மூலநோய், வாதம், கீழ்வாதம், மார்புச்சளி ஆகிய நோய்களை அகத்திப்பூக்கள் குணமாக்கும். இத்தகைய பயன்கள் நிறைந்துள்ள அகத்தி பூ வைத்து ஒரு பொரியல் செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாமல் போகும் அளவிற்கு அற்புதமான சுவையுடன் இருக்கும். வாரம் ஒரு முறை இந்த அகத்தி பூ பொரியலை செய்து கொடுங்கள். அடுத்த நாளைக்கு என்ன பொரியல் செய்வது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் இது போன்று பொரியல் செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும்.
அகத்தி பூ பொரியல் | Agathipoo Poriyal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 300 கி சிகப்பு அகத்தி பூ
- 1 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/4 டீஸ்பூன் தனியா தூள்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1 கொத்து கறிவேப்பில்லை
- உப்பு தேவையான அளவு
தாளிக்க :
- எண்ணெய் தேவையான அளவு
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
செய்முறை
- முதலில் அகத்தி பூக்களை பறித்து தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அகத்தி பூவை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதன்பிறகு இறுதியாக தேங்காய் துருவல், மல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் அகத்திப்பூ மசாலா பொரியல் தயார். இந்த பொரியல் மிகவும் சத்துக்கள் நிறைந்தது.
Nutrition
இதனையும் படியுங்கள் : அவசியம் வாரம் ஒரு முறை ருசியான அகத்திக்கீரை கூட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!