மதிய வேளையில் சாதத்திற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ரசவாங்கி செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் ரசவாங்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். கத்தரிக்காய் பொட்டாசியம் , விட்டமின் சி, இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துதல் என உடலுக்குப் பல நன்மைகள் தரக்கூடியது. முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை கொண்டது கத்தரிக்காய்கள்.
வாத நோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதனால் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. எனவே வாரம் ஒரு முறை கத்தரிக்காய் உட்கொள்வது மிகவும் நல்லது. இன்னும் பல வகையான நன்மைகளை தரும் கத்திரிக்காயை வைத்து சூப்பரான கத்திரிக்காய் ரசவாங்கி வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம். வெள்ளை சோறுக்கு இந்த தஞ்சாவூர் ஸ்டைல் கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் சுவையாக இருக்கும்.
கத்தரிக்காய் ரசவாங்கி | Brinjal Rasavangi Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 3 பெரிய கத்தரிக்காய்
- 1/4 கப் துவரம் பருப்பு
- புளி எலுமிச்சை அளவு
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
வறுக்க :
- 2 டீஸ்பூன் தனியா
- 1 டீஸ்பூன் கடலை பருப்பு
- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1/4 டீஸ்பூன் மிளகு
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் வெந்தயம்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 6 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 கொத்து கறிவேப்பில்லை
தாளிக்க :
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 5 வர மிளகாய்
- 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்
- 1 கொத்து கறிவேப்பில்லை
செய்முறை
- முதலில் கத்தரிக்காயை நன்கு அலசி விட்டு சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் புளியை தண்ணீரில் ஊறவைத்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் குக்கரில் துவரம் பருப்பை நன்கு அலசி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்து எடுக்கவும்.
- பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும், கத்தரிக்காயை சேர்த்து வதக்கி, பின் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
- பின் புளி வாசனை போனதும் அரைத்து வைத்துள்ள விழுது, பெருங்காயத்தூள், வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- பின் ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து கத்தரிக்காயுடன் சேர்த்து கலந்து விடவும்.
- அவ்வளவுதான் சுவையான, வித்தியாசமான தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி தயார். இது, இட்லி, தோசை மற்றும் சூடான சாதத்தில் நெய் விட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான கர்நாடகா கத்தரிக்காய் சாதம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி கூட!