சமையல் என்பது ஒரு பெரிய கலை, எல்லோருக்கும் குழம்பு வைப்பதற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புதிதாக சமையல் செய்பவர்கள் கற்று கொள்ளும் முதல் குழம்பு ரசம் தான். ஒரு சிலர் எல்லா குழம்பையும் நன்றாக வைப்பார்கள், ரசம் வைப்பதில் மட்டும் சொதப்பி விடுவார்கள். ரசம் பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் அதை சுவையாக வைப்பது மிகவும் கடினம்.
ரசத்தை பக்குவமாக வைத்து இறக்கினால் தான் சுவையாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் எப்படி பக்குவமாக, ருசியாக இஞ்சி ரசம் வைக்கலாம் என்று தெரிந்துகொள்ளலாம். புதிய இஞ்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த ரசம் வலுவான நறுமணத்தையும் சுவையையும் தருகிறது. இந்த ரசம் தயாரிக்க எளிதானது மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இது துவரம் பருப்பு மற்றும் ரசம் பொடியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த சூடான மற்றும் சுவையான ரசம் குளிர்ச்சியான குளிர்காலம் மற்றும் மழை நாட்களுக்கு சரியான தேர்வாகும். இஞ்சி அற்புதமான உணவுப் பொருள் மட்டுமல்ல, அருமருந்தும் கூட! அஜீரணப் பிரச்னையை சரி செய்வதில் இஞ்சி முக்கியப் பங்கு வகிக்கும். இஞ்சி சாறாக பருகுவது ஒருபுறமிருக்க, இஞ்சியை ரசம் வைத்து சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இஞ்சி ரசத்தை எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
இஞ்சி ரசம் | Ginger Rasam Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி துருவல்
- 1 தக்காளி
- 1 எலுமிச்சை அளவு புளி
- உப்பு தேவையான அளவு
பொடிக்க
- 1/4 டீஸ்பூன் மிளகு
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் துவரம் பருப்பு
தாளிக்க
- 1 டீஸ்பூன் நெய்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 2 பல் பூண்டு
- 1 வற்றல் மிளகாய்
- கறிவேப்பிலை சிறிது
- மல்லி இலை சிறிது
செய்முறை
- முதலில் ஒரு வாணலில் சீரகம், மிளகு, துவரம்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற விடவும். பின்அவை சூடாறியவுடன் ஒரு மிக்ஸியில் சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.
- புளியை ஊற வைத்து நன்கு கரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு கரைக்கவும்.
- வாணலியில் நெய் சேர்த்து சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, வற்றல் மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- பின் கரைத்து வைத்துள்ள புளி தக்காளி கரைசல் சேர்த்து, மஞ்சள் தூள், பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், துவரம்பருப்பு பொடி சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர், மல்லி இலை சேர்த்து கொதிக்க விடவும்.
- எல்லாம் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கினால் மிகவும் சுவையான இஞ்சி ரசம் தயார்.