தினமும் மதியத்திற்கு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? இதுவரை முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல் தான் செய்துள்ளீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முருங்கைக்கீரையைக் கொண்டு சாம்பார் செய்யுங்கள்.
நம்முடைய ஊர்களில் வீதி எங்கும் காணப்படும் மர வகைகளில் முருங்கையும் ஒன்று. இது ஏராளமான மருத்துவப் பலன்களை நமக்கு வழங்கி வருகிறது. இதன் ஒவ்வொரு பாகமும் ஏராளமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக முருங்கை இலை சர்க்கரை நோயாளிகள் முதல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வரை, பலருக்கும் அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியது. இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள முருங்கையில் எப்படி சுவையான சாம்பார் செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
முருங்கைக் கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல சாம்பார் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த முருங்கைக்கீரை சாம்பார் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் முருங்கைக்கீரை சாம்பார் சத்தானதும் கூட. ஏனெனில் முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் அனைத்துமே இந்த சாம்பாரில் முழுமையாக இறங்கியிருக்கும்.
மாங்காய் முருங்கை கீரை சாம்பார் | Mango Drumstick leaves Sambar
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 100 கிராம் துவரம் பருப்பு
- 1 கப் முருங்கை கீரை
- 1 மாங்காய்
- 1 தக்காளி
- 2 ஸ்பூன் மிளகாய்த் தூள்
- 1 ஸ்பூன் மல்லித் தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் சீரகத் தூள்
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- உப்பு தேவையான அளவு
- 1/4 மூடி தேங்காய்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் முருங்கைக் கீரையை சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். தேங்காயை மிக்ஸியில் சேர்த்து துருவிக் கொள்ளவும்.
- பின் குக்கரில் பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும். ஒருகடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்றாக வதங்கியதும் முருங்கை கீரை சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- பிறகு மாங்காய் சேர்த்து நன்றாக கலந்து வேகவைத்து கொள்ளவும். மாங்காய்வெந்த பிறகு தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- சாம்பார் நன்கு கொதித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான்சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை மாங்காய் சாம்பார் தயார்.