தங்கத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். ஆனால் கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்து வைத்தும் வாங்கிய தங்கம் வீட்டில் தங்காமல் அடகு வைக்க வேண்டிய அல்லது விற்க வேண்டிய சூழ்நிலை பலருக்கும் ஏற்படுகிறது. கையில் பணம் இருந்தாலும் தங்கம் வாங்க முடியவில்லை, அடமானத்தில் இருக்கும் தங்கத்தை மீட்டு வந்தாலும் அது வீட்டில் தங்காமல் மீண்டும் அடகு வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒரு குண்டு மணி தங்கம் கூட வாங்கி சேர்க்க முடியவில்லை என்ற மனக்குறை ஏராளமானவர்களுக்கு உண்டு. ஒரு சிலரிடம் மட்டுமே தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். பெண்களின் திருமணத்திற்கு கூட தங்கத்தை சேர்த்து வைக்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்கள் சில எளிய பரிகாரங்கள் செய்தாலே வீட்டில் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும். என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான், வீட்டில் தங்க நகைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என தங்க நகைகளை வாங்கி சேமித்து வைக்கிறார்கள்.
மரப்பெட்டி
கடையிலிருந்து வாங்கி வந்த தங்க நகையை வீட்டில் எடுத்து வைக்கும் போது, பெரும்பாலும் நகை கடையில் இருந்து கொடுத்த நகை பெட்டியில் தான் பத்திரப்படுத்தி வைப்போம். அப்படி செய்யாமல் தங்க நகைகளை மரப்பெட்டியில் தான் வைக்க வேண்டும். தங்க நகைகளை மரப்பெட்டியில் வைத்தால் தங்க நகைகள் பல மடங்காக பெருகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மரப்பெட்டியில் தங்க நகைகளை வைக்கும் போது, அப்படியே வைக்கக்கூடாது. சிவப்பு நிறத் துணியை அந்த பெட்டியில் விரித்து அதன் மேல் தங்க நகைகளை வைக்கவேண்டும். நாம் கவனித்து பார்த்திருந்தால் தெரியும் நகை கடைகளில் கூட சிவப்பு நிறத்தில் தான் நகை பெட்டியை தருவார்கள் அது ஏனென்றால் சிவப்பு நிறத்திற்கு தங்கத்தை பெருக்கும் சக்தி உண்டு. தங்கநகை, வெள்ளிநகை என்று தனித்தனியாக பிரித்து நாம் வைத்துக் கொள்ளவேண்டும்.
நகை அடகு போகாமல் இருக்க
நாம் வைத்திருக்கக்கூடிய நகைகள் வீட்டில் தங்குவதற்கு, அதாவது அடகு போகாமல் இருப்பதற்காக நாம் நகை வைக்கக்கூடிய பெட்டியில் சிறிது சிவப்பு நிற துணியில் பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காய் இரண்டையும் முடிந்து நகைப்பெட்டியில் வைத்து விட வேண்டும். துளசி கிடைத்தால் அதனையும் கொண்டு வந்து நகை பெட்டியில் வைக்க வேண்டும். குறிப்பாக அந்த துளசியை தங்க நகையின் மேல் படும்படி வைத்தால் வீட்டில் தங்கம் மேலும் மேலும் பெருகும்.
தங்க நகையை இரவல் தரக் கூடாது
தங்க நகையை இரவலாக யாருக்குமே கொடுக்காதீர்கள். இரவல் கொடுத்த நகை மீண்டும் திரும்பி வராமலும் போகலாம். தங்கத்திற்கு பொதுவாக தோஷத்தை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகமாக உள்ளது. நீங்கள் ஒருவருக்கு இரவலாக நகையை கொடுக்கும் பொழுது அவர்கள் வீட்டில் இருக்கும் தோஷம் உங்களுக்கு வந்து விடும். அதுமட்டுமல்ல இரவலாக கொடுத்த நகை மீண்டும் திரும்பவும் உங்கள் கை வந்து, அது உங்கள் கையில் தங்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் முடிந்த அளவிற்கு அடுத்தவர்களுக்கு தங்க நகையை இரவலாக கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
தங்கம் பெருக
சிலர் தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை எடுத்து அணிந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே பீரோவில் வைத்துப் பூட்டி வைத்துக் கொள்வார்கள். இப்படி வாங்கிய நகைகளை போடாமல், தங்க நகைகள் பீரோவில் பூட்டி இருப்பதும் அவ்வளவு நல்ல விஷயம் கிடையாது. எனவே ஏதாவது ஒரு நல்ல நாளில் அதனை அணிந்து பூஜை செய்தால் தங்க நகைகள் பல மடங்காக பெருகும் என நம்பப்படுகிறது.
ஸ்வர்ண தோஷம் நீங்குவதற்கான பரிகாரம்
உங்கள் வீட்டில் யாருக்காவது ஸ்வர்ண தோஷம் இருந்தாலும் வீட்டில் தங்க நகை சேராமல் போகலாம். அதிலிருந்து விடுபடுவதற்காக செவ்வாய்க்கிழமைகளில் வரும் அவிட்ட நட்சத்திரத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒருவேளை இரண்டும் சேர்ந்து வரவில்லை என்றால் நீங்கள் ஏதாவது செவ்வாய்க்கிழமையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து யாரிடமும் பேசாமல் ஒரு பித்தளை சோம்பில் சம அளவு அரிசி, துவரம் பருப்பு மற்றும் கொண்டைக்கடலை இதனுடன் ஒரு ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கலசத்திற்கு மேல் ஒரு தேங்காயை வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலசத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலுக்கு எடுத்துச் சென்று பூசாரியிடம் சொர்ண தோஷத்திற்காக இந்த பரிகாரத்தை செய்கிறோம் எனக் கூறி, முருகன் பாதத்தில் இந்த கலசத்தை வைக்கச் சொல்லுங்கள். முருகப்பெருமானை மனதார வேண்டி உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் முன் வைத்துவிட்டு வீட்டிற்கு வந்து விடுங்கள்.
இந்த பரிகாரம் செய்யும் பொழுது இந்த கலசத்தை தயார் செய்தவர்கள் பரிகாரத்தை முடிக்கும் வரை பேசவே கூடாது. வீட்டிற்கு வந்தவுடன் விளக்கு ஏற்றி நெய்வேதியமாக சுண்டல் வைத்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் உங்கள் வீட்டில் யாருக்காவது சுவர்ண தோஷம் இருந்தால் விலகி விடும்.