உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, ‘தமிழ்க் கடவுள்’ என்று தமிழ்ச் சமூகம் உரிமையோடு போற்றிக் கொண்டாடி வழிபடுகிறது. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கி, பக்தர்களின் குறைகளைப் போக்க, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள்புரிபவர் முருகன். பங்குனி மாதத்தின் உத்திரம் போல, தை மாதத்து பூசம் போல, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை போல, வைகாசி மாதத்தில் விசாகம் முருகக் கடவுளுக்கு உகந்த அற்புதமான நாள்.
தமிழ் கடவுள் முருகன் அவதரித்த தினமாக வைகாசி விசாகம் திருவிழா உலகெங்கிலும் வாழும் தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்களில் பால்குடம் எடுத்தும் காவடிகள் சுமந்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும். வைகாசி விசாகம் விரதம் இருந்து வழிபடும் முறை, அதனால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதரித்த நாளாகும். வைகாசி திங்களில் வரும் விசாக நட்சத்திர நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், விலங்குகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும்.
சிறப்புகள்
முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள். விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.
வைகாசி விசாகம் எப்போது?
இந்த ஆண்டு வைகாசி விசாகம் மே 22ம் தேதி புதன்கிழமை வருகிறது. மே 22ம் காலை 08.18 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி காலை 09.43 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. வைகாசி விசாகம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு முருகன் ஆலயங்களில் பல லட்சம் பக்தர்கள் வழிபடுவார்கள். அதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22ம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் அன்றைய தினம் நாமும் வீட்டிலேயே விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம்.
வைகாசி வழிபாடு முறை
வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் எழுந்து குளித்து முடித்து அந்த நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். அல்லது பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். மாலை வேளையில் முருகன் படத்திற்கு அவருக்கு விருப்பமான அரளி பூ வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். முருகப் பெருமானுக்கு விருப்பமான கந்தரப்பம் எனப்படும் இனிப்பு அப்பத்தை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். பின் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். அல்லது திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். இந்த நாளில் முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த நாளில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை.
வைகாசி வழிபாடு பலன்கள்
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும். அதுமட்டுமல்லாமல் வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.
இதனையும் படியுங்கள் : திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!