என்ன தான் நாம் அன்றாட தேவைகளுக்கு சம்பாதித்தாலும் நம்மளால் நம் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. அதற்காக நாம் கடன் வாங்குகிறோம், அந்த கடனை அடைப்பதற்கு நாம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் தோற்று விடுகிறோம். அதற்காக மேலும் கடனை வாங்கி செலவழிக்க செய்கிறோம். அதற்கு நாம் ஒரு புறம் காரணமாக இருந்தாலும் நாம் இருக்கும் வீடும் அதற்கு ஒரு காரணமாகும். வாஸ்து சாஸ்திரப்படி ஒருவர் கடன் வாங்குவதற்கு அவர் இருக்கும் வீடும் ஒரு காரணமாகும். நாம் தங்கியிருக்கும் வீட்டில் ஏதாவது குறை இருப்பின் நம்மளை மேலும் கடனுக்குள் தள்ளிவிடும்.
இப்படி கடன் சுமை குறையாமல் அவதிப்படுபவர்கள், உடனே தாங்கள் குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதா என்பதை அறிந்து, அதை சரிசெய்ய முயல வேண்டும். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும். இப்போது கடன் சுமையைக் குறைக்கும் சில வாஸ்து பரிகாரங்களைக் காண்போம்.
கடன் அதிகரிப்பதற்கான காரணங்கள் :
கடனைத் தவிர்க்க, வீட்டின் வடக்கு மற்றும் தெற்கு சுவர்கள் மிகவும் நேராக இருக்க வேண்டும். ஒருவேளை நேராக இல்லாமல் இருந்தால், அதுவே அதிக கடனை வாங்கத் தூண்டும். வீட்டின் வடக்கு சுவர் எப்போதும் சற்று தாழ்வாக இருக்க வேண்டும். வீட்டில் எந்த ஒரு மூலையும் சுருங்கி இருக்கக்கூடாது. குடியிருக்கும் வீட்டின் சுவர் தவறாக இருந்தால், அது அந்த வீட்டில் பண பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஒருவேளை அதிக கடனை வாங்கி, அதை அடைக்க முடியாமல் கவலைப்படுபவர்கள், வீட்டின் வடகிழக்கு கோணத்தை 90 டிகிரிக்கு குறைவாகக் குறைக்கவும்.
வீட்டின் தென்மேற்கு மற்றும் தெற்கு திசையில் கிணறு, குழாய் அல்லது நிலத்தடி தொட்டி இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது அந்த வீட்டின் வறுமையை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீடானது வடக்கு பார்த்து சாய்வு அதிகமாக இருந்தால், அந்த வீட்டில் உள்ளோரிடம் சொத்து அதிகமாக சேரும்.
அதிக கடன் சுமையால் அவதிப்படுகிறீர்களா?
அப்படியானால் வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் எந்த ஒரு கனமான பொருட்களையும் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது கடன் சுமையை அதிகரிப்பதோடு பண இழப்பு மற்றும் வியாபாரத்தில் நஷ்டத்தை உண்டாக்கும். எப்போதும் வீட்டின் மையப் பகுதியில் நிலத்தடி தொட்டியை அமைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அதுவும் அந்த வீட்டில் கடனை அதிகரிக்கும். வீட்டின் நடுப்பகுதி சற்று உயரமாக இருக்க வேண்டும். தாழ்வாக வைத்தால், அது வீட்டில் உள்ளோருக்கு இடையேறான உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும். வீட்டின் வடக்கு திசையில் உள்ள சுவர் உயரமாக இருந்தால், அதுவே கடனை அதிகரிக்கும்.
இந்நிலையில் தென்மேற்கு மூலையில் ஒரு பித்தளை அல்லது செம்பு குடத்தில் நீரை நிரப்பி வையுங்கள். கடன் தொல்லையில் இருந்து விடுபட வேண்டுமானால், வடக்கு அல்லது கிழக்கு திசையில் ஒரு கண்ணாடியை வைப்பது நன்மை தரும். அதுவும் எடை குறைவான மற்றும் பெரிய அளவிலான கண்ணாடியை பொருத்த வேண்டும்.வாஸ்துப்படி வாங்கிய கடனை விரைவில் அடைக்க வேண்டுமானால், கடன் பணத்தை செவ்வாய் கிழமைகளில் செலுத்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கடனை விரைவில் அடைத்து விடலாம்.