பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஆலு பாலக் கீரை பக்கோடா. பொதுவாக வெங்காயம், முட்டை கோஸ் போன்ற காய்கறிகளை கொண்டு பக்கோடா செய்வது வழக்கம். இதை ஆரோக்கியமானதாக மாற்ற பக்கோடாவுக்கான மாவில் கொஞ்சம் கீரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். கீரையை பொரியல் செய்து கொடுத்தாலோ கடைந்து கொடுத்தாலோ குழந்தைகள் நிச்சயமாக விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி மொறு மொறுன்னு ஸ்னாக்ஸ் ஆக பக்கோடா செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அவர்கள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
கீரைகளில் பல சத்துக்கள் நிறைந்தாலும் குழந்தைகள் இதனைச் சாப்பிட விரும்பமாட்டார்கள். எனவே அவர்களுக்கு ஏற்றவாறு ருசியான மற்றும் மொறு மொறு கீரை பக்கோடோ செய்து தரலாம். ஆரோக்கியம் நிறைந்த பொருட்களை இப்படித்தான் சுவையான ஸ்னாக்ஸ் ஆக மாற்றி கொடுக்க வேண்டும். உருளை கிழங்கு என்றால் யாருக்குப் பிடிக்காமல் போகும்? அதோடு கீரை சேர்த்து ஒரு மொறு மொறு ஸ்நாக். கீரையும் அவ்வளவாக பிடிக்காதவர்களும் இருப்பார்கள் இல்லையா. பாலக்கீரை நம் உடலுக்கு வலுவூட்டி, குளிர்ச்சியைத் தருவதுடன், மலச்சிக்கலையும் போக்கும் வல்லமை இதற்கு உண்டு. குளிர்கால மாலை நேரத்தில் ஏதாவது சூடாக ஸ்நாக் சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். ஆலு பாலக்கீரை பக்கோடா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
ஆலு பாலக் பக்கோடா | Aloo Palak Pakoda Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 குக்கர்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1 கட்டு பாலக் கீரை
- 1 கப் கடலை மாவு
- 3 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 2 பெரிய உருளைக்கிழங்கு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- 2 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு
- 1/2 டீஸ்பூன் சமையல் சோடா உப்பு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேகவைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பவுளில் உருளைக்கிழங்கு, கீரை, மஞ்சள் தூள், சீரகம், சோம்பு, சமையல் சோடா, உப்பு, வெங்காயம், கொத்தமல்லி, கடலை மாவு, பூண்டு, மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து வடை பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆலு பாலக் கீரை பக்கோடா தயார். அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது சட்னி வைத்தும் சாப்பிடலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மொறு மொறு ருசியான முட்டைகோஸ் பக்கோடா இப்படி செஞ்சு பாருங்க! மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட பக்காவான ரெசிபி!