கடுக்காய்… அஞ்சறைப்பெட்டிகளில் சில வீடுகளில் இருக்கும். குழந்தைகள் உள்ள வீடுகளில் கடுக்காய் நிச்சயம் இருக்கும். பிறந்த குழந்தை முதல் ஓரளவு வளர்ந்த குழந்தைகள் வரை அனைவருக்கும் கடுக்காயை உரைத்து மருந்தாகக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல, வயதில் மூத்தவர்களும்கூட கடுக்காயை சாப்பிட்டு வந்தால் நல்லது. இன்னும் சொல்லப்போனால், காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் என்ற தேரையர் பாடலில் கடுக்காய் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதன்படி கடுக்காயை சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கி நலமுடன் இருக்கலாம்.
கடுக்காய் பழமொழி
கடுக்காயில் ஏழு வகை கடுக்காய்கள் உள்ளன. வரி கடுக்காய், செங்கடுக்காய், பால் கடுக்காய், கருங்கடுக்காய் மற்றும் பல வகை உள்ளன. காபூல் கடுக்காய் என்று ஒரு வகையும் உள்ளது. கடுக்காயில் அறுசுவைகளில் உப்பைத் தவிர மற்ற ஐந்து சுவைகளும் உள்ளன. அதனால்தான் வாதம், பித்தம், கபம் போன்றவற்றை கடுக்காய் போக்கும். கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்றும், ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம் என்றும் சொல்வார்கள். அந்த அளவுக்கு கடுக்காயின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்கிறார் திருமூலர். மேலும் தாய் தன் பிள்ளையை வளர்ப்பதுபோல மனிதனை வளர்க்கும் தன்மை கொண்டது கடுக்காய் என்றும் சொல்லப்பட்டுள்ளது. காரணம் என்னவென்றால், கடுக்காய் சாப்பிட்டால் அது வயிற்றிலுள்ள கழிவுகளை வெளியே தள்ளுவதால் நல்ல உடல்நலம் கிடைக்கும்.
கடுக்காய் விதை
பொதுவாக கடுக்காயில் அதன் தோலை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இஞ்சியில் அதன் தோலினை புற விஷம் என்பார்கள், அதைப்போல கடுக்காயில் அதன் விதையை அகவிஷம் என்பார்கள். விஷம் என்றதும் அது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடும் என்று நினைக்க வேண்டாம். அதன் வீரியத்தைக் குறைக்கும் அவ்வளவுதான்; மற்றபடி பிரச்சினை எதையும் ஏற்படுத்தாது. பாலில் வேக வைக்கும்போது நச்சுத்தன்மை நீங்கிவிடும். ஆகவே, கடுக்காய் விதையைக் கண்டு பயப்பட தேவையில்லை.
அமிர்தம்
கடுக்காய்க்கு அமிர்தம் என்று ஒரு பெயர் உண்டு. கடுக்காயை துவையல் செய்து சாப்பிட்டால் மலம் இறுகும். அதே கடுக்காயை கசாயம் போட்டுக் குடித்தால் மலம் வெளியேறும். கடுக்காயை லேகியம் செய்து சாப்பிட்டால் நரை திரை மாறி உடல் வலுப்பெறும். கடுக்காயை பல் பொடியாக தயாரித்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் நீங்கும். ஈறு வீக்கம் சரியாகும். ஏற்கனவே சொன்னதுபோன்று மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் கடுக்காய்ப்பொடியை இரவு தூங்குவதற்குமுன் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டால் மலம் தாராளமாக வெளியேறும். ரத்த மூலம் உள்ளவர்கள் கடுக்காயை நீர் விட்டு கொதிக்கவைத்து ஆற வைத்து மலப்பாதையை கழுவினால் பலன் கிடைக்கும். இப்படி பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது கடுக்காய்.