Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நம்ப முடியாத ஆச்சரியத் தகவல்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நம்ப முடியாத ஆச்சரியத் தகவல்கள்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகமே வியந்து பார்க்கும் ஒன்றாக நிற்கிறது. மதுரை என்றதுமே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். மதுரை ஊரெங்கும் கோயில்கள் இருந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலின் சிறப்பே தனிதான். ஈசன் தன் திருவிளையாடல்கள் பல நிகழ்த்தியதும் இந்தக் கோயிலைச் சுற்றித்தான். ஓர் ஆண்டில் 274 நாள்கள் திருவிழாக்காணும் தலம் இது. நவகிரகங்களில் புதன் தலம். இங்கு வந்து அன்னையை வழிபாடு செய்தால் திருமணவரம் கைகூடுவதோடு கல்வி கேள்விகளிலும் சிறந்துவிளங்கலாம் என்பது நம்பிக்கை. `மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படும் தலம் இது. இந்த பீடத்துக்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்றும் பெயர். தமிழ்நாட்டின் முத்திரையாக விளங்கும் இந்த கோயில் பல வரலாற்று சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது. மதுரைக்காரர்கள் மட்டுமில்லை ஒட்டுமொத்த தமிழர்களும் இதை நினைத்து பெருமை கொள்கின்றனர். எனவே இந்த பதிவில் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தகவல்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

-விளம்பரம்-

மீனாட்சி அம்மன் கோவில் சிறப்புகள்

மதுரை மீனாட்சி ஆலயம் பல சிறப்புகளை கொண்டுள்ளது.15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில், எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சிலை மரகத கல்லால் வடிவமைக்கப்பட்டவை. இந்த சிலையில் அம்மனுக்கு மூன்று மார்பகங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் சில சாஸ்திர விதிமுறைகளின்படி, மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் சில குறிப்பிட்ட அபிஷேகங்களை காண்பதற்கு யாரும் அனுமதி வழங்கப்படுவது கிடையாது. பக்தர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்து தரிசித்தாலும் அம்மன் ஜொலிப்பது போன்று காட்சியளிப்பார். கோயில் காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மீனாட்சியம்மனுக்கு ஒருவருடத்தில் கிட்டத்தட்ட 274 நாள்கள் திருவிழா நடைபெறும். அதில் முக்கியமானது தமிழ் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கும் மதுரை சித்திரை திருவிழா. சித்திரைத் திருவிழாவில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், திருத்தேர் பவணி புகழ்பெற்றவை.

மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சன்னதி

மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி சன்னதியில் நுழையும் போது வலது புறத்தில் இருக்கும் நடராஜர் மற்ற கோயில்களில் இருப்பதைப் போன்று இல்லாமல் இடது காலுக்கு பதில், வலது கால் தூக்கி நடனமாடுகிறார். அதுமட்டுமல்லாமல் அன்னையின் வலது கால் சற்று முன்னோக்கி இருப்பது போன்று அமைந்துள்ளது. காரணம் பக்தர்களின் அழைப்பிற்கு உடனே ஓடி வந்து அருள்புரியக்கூடியவள்.

-விளம்பரம்-

நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின்படி, ஈசன் தன் சூலாயுதத்தால் பூமியில் ஊன்றி உருவாக்கியது தான் இந்த பொற்றாமரைக் குளம். மேலும் இந்திரன் தான் பூஜிப்பதற்காகப் பொன்னால் ஆன தாமரையைப் பெற்ற தலம். இந்த குளத்திற்கு சிவகங்கை என்றும் பெயர் உண்டு.

கோயிலின் சுவாமி சன்னதிக்கு இடது புறத்தில் உள்ளது ஆயிரங்கால் மண்டபம். கோயிலின் மற்ற மண்டபங்களை விட மிக பிரமாண்டமாக அளவின் பெரிதாக காணப்படுகின்றது. இதில் 22 இசை எழுப்பக்கூடிய சிறிய தூண்கள் உள்ளன.

மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும். மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடுமாம்.

-விளம்பரம்-

சுவாமி சன்னதி கருவறையில் சுந்தரேசுவரர் சிவலிங்க திருமேனியாக காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். இந்த சிவலிங்கம் மேருமலை, வெள்ளிமலை, திருகேதாரம், வாரனாசி போன்ற பகுதிகளில் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றுக்கும் முன்னதாக தோன்றியதாகும். எனவே இதற்கு மூல லிங்கம் என்ற பெயரும் உண்டு.

மற்ற கோவில்களை போல இங்கு இறைவனுக்கு முடி காணிக்கை செய்வது வழக்கத்தில் இல்லை. காரணம் இந்த கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டாலே நாம் செய்த பாவங்கள் நீங்கி அம்மை, அப்பனின் அருள் கிடைக்கும். இந்த ஆலயம் சைவம், வைணம் சமய ஒற்றுமையை விளக்குவதாக இருக்கிறது.

இத்தலத்தின் பெயரை கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும். இதனால் சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில் கற்ப கிரகத்தில் இருக்கும் மீனாட்சி அன்னையைப் பார்க்கும் போது உயிர்ப்புடன் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்ப்பது போன்று இருக்கும்.

இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. சுந்தரேஷ்வருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று பல வரலாற்று கதைகள் கூறுகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவிலின் மேற்கு பகுதியில் கிளிக்கூண்டு மண்டம் அல்லது ஊஞ்சல் மண்டபம் என்ற மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் உள்ள கிளிகள் மீனாட்சி அம்மனின் பெயரை சொல்லி அழைப்பதும், அழகிய கானம் இசைப்படும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

கல், சுதை சிற்பங்கள், மாடங்கள், தூண்கள் கொண்ட அழகிய கட்டிடக்கலை அம்சங்கள் தெப்பக்குளத்தைச் சுற்றி அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் மீன்கள் ஏதுவும் வசிப்பது கிடையாது. இங்கு மீன் போன்ற கண்களால், அன்னை மீனாட்சி தன்னுடைய பக்தர்களை காத்து அருள் செய்து வருவதால் இங்கு மீன்கள் வளர்வது கிடையாது என சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு புராண சிறப்பு மிக்க சிவாலயங்களில் எம்பெருமான் திருவிளையாடல்களை நிகழ்த்துவது வழக்கம். ஆனால் இந்த ஆலயத்தில் தான் சிவபெருமான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். இப்படிப்பட்ட சிறப்பு வேறு எந்த கோயிலிலும் இல்லை.

மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தலம். சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். தெப்ப உற்சவத்தின் போது, தெப்பத்தில் அம்மன், சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

மீனாட்சி அம்மன் தாயுள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை வணங்கினாலும், அவர்களுக்கு அதை அருளுவதோடு, சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கக் கூடியவர். மதுரை மற்றும் சுற்றியுள்ள மக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும், மதுரை மீனாட்சியை தரிசித்துவிட்டு அல்லது, சுப காரியம் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த ஆலயத்தில் வழிபடுவதால் முக்தி மட்டுமல்ல, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதனையும் படியுங்கள் : நடிகர்கள் முதல் அரசியல் பிரமூகர்கள் வரை ரகசியமாய் இந்த கோவில் சென்று வழி பட காரணம் என்ன?