உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஒரு இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால், ஆரஞ்சு மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். கேசரி தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒரு இனிப்பு வகை. பண்டிகையோ, பிறந்த நாட்களோ, அல்லது விசேஷ நாட்களோ நாம் முதலில் செய்யும் ஒரு இனிப்பு வகை கேசரி தான். கல்யாண விருந்துகளிலும் கட்டாயம் இடம் பிடித்திருக்கும் ஒரு இனிப்பு வகை இவை. எல்லோரும் எளிதாக சீக்கிரம் செய்யக்கூடிய ஸ்வீட் என்றால் அது கேசரி தான். வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம். அதனாலேயே உண்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் மத்தியிலும் இவை பிரபலம்.
அதுமட்டுமல்ல, வீட்டுக்கு திடீரென விருந்தினர் வந்துவிட்டால் வீட்டில் ரவை, சர்க்கரை, முந்திரி, சிறிது நெய் இருந்துவிட்டால் போதும் சீக்கிரமாக கேசரி செய்துவிடலாம். என்ன தான் இவை செய்வதற்கு எளிமையாக இருந்தாலும் சில நேரங்களில் சரியான பக்குவத்தில் இவை பலருக்கும் வருவதில்லை. சிறிது பக்குவம் மாறினாலும் இவை குழைந்து விடும் அல்லது கட்டியாகி விடும். ஆனால் இந்த எளிமையான செய்முறை விளக்கத்தை பின்பற்றி செய்தால் சுவையான மற்றும் இனிப்பான ஆரஞ்சு ரவா கேசரியை சுலபமாக செய்து விடலாம். ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் நெய் போன்றவற்றை சேர்ப்பதால் கமகம என்று மணமாக இருக்கக் கூடிய இந்த ஆரஞ்சு ரவை கேசரியை எப்படி செய்யலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
ஆரஞ்சு கேசரி | Orange Kesari Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1/2 கப் ரவை
- 3/4 கப் சர்க்கரை
- 2 ஆரஞ்சு
- நெய் தேவையான அளவு
- 10 முந்திரி
- 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 5 உலர் திராட்சை
- 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர்
செய்முறை
- முதலில் ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கி அதிலிருந்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் அதே வாணலியில் நெய் விட்டு ரவையை சேர்த்து மனம் வரும் வரை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு வாணலியில் ஆரஞ்சு சாறு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்ததும் கேசரி பவுடர் மற்றும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறி 5 நிமிடங்கள் வரை மூடி வைத்து வேக விடவும்.
- பின் சர்க்கரை, நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான ஆரஞ்சு கேசரி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வித்தியாசமான ஆரஞ்சு பழ தோல் தொக்கு சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்!!!