சபரிமலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் தங்களுடன் தென்னம்பிள்ளையை எடுத்து செல்வது ஏன் தெரியமா ?

- Advertisement -

கார்த்திகை மாதம் பிறந்தாலே மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து பய பக்தியுடன் ஐயப்பனை தரிசிக்க இருமுடி அணிந்து செல்வார்கள். இந்த கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு தங்களது விரதத்தைத் தொடங்கியுள்ளனர். ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 48 விரதம் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மண்டல பூஜைக்காகவும் மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து 48 விரதத்தை பக்தர்கள் தொடங்கி விட்டார்கள். அவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் யாத்திரையின்போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது எதற்காக? மற்றும் எருமேலி பேட்டை துள்ளலின் மகத்துவம் என்ன? என்பதை பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

சபரிமலை செல்பவர்கள் நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன்?

இறைவனை தரிச்சிக 18 படி ஏறி சென்று வணங்கி விட்டு தேங்காயை உடைத்து நெய் எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய கொடுப்பது வழக்கம். தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது ஆத்மா. அந்த நெய்யால் சுவாமியை அபிஷேகம் செய்யும் போது நம் ஆத்மா பரந்தாமனை நோக்கி செல்கிறது. அதனால் தான் நாம் நெய் தேங்காய் எடுத்துச் செல்கிறோம். இப்படி செய்வதால் நம்முடைய இந்த பிறப்பு தூய்மை அடைகிறது. நம்முடைய ஜென்ம சாபம் நீங்குகிறது. ஐயப்ப‌ பக்தர்கள் எடுத்து செல்லும் இந்த நெய் நிரம்பிய தேங்காய் காட்டு வழியில் வனவிலங்கினால் ஏற்படும் தீமைகளிலிருந்து காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.

- Advertisement -

ஐயப்பனுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம் தான். கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் நேர்மை, ஒழுக்கம் போன்ற பாதையில் சென்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். எண்ணிலடங்கா இறைவழிபாடுகள் இருந்தாலும், மண்ணில் மனிதனாகப் பிறந்து, இறைநிலையை அடைந்தவரான ஐயப்பனின் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது தான். மாலை அணிந்தவர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல் சுத்தம், மன சுத்தத்துடன் அந்த ஐயப்பனின் அருளை வேண்டி காடு, மேடு கடந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இவர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் வாழ்வில் பாதை மாறாது மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வார்கள். தங்கள் இலக்குகளில் கவனமாக இருப்பார்கள், எந்த காரணத்திற்காகவும் தங்கள் இலக்குகளை மாற்ற மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் ஆடம்பர வாழ்வு நிலையற்றது என்பதை உணர்ந்து வாழும் காலத்திலேயே நல்லவராக வாழ்ந்து, பிறவி பெருங்கடலை கடப்பார்கள்.

எருமேலி பேட்டை துள்ளலின் மகத்துவம் என்ன?

எருமேலி கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர், இது அரக்கி மகஷியை ஐயப்பன் வதம் செய்த தலம். எருமேலியில் நடைபெறும் பேட்ட துள்ளல் எனும் நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. இது மணிகண்டன் மகஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது நர்த்தனம் செய்ததின் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஓர் சடங்கு. சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து இந்துக்களும் இந்த இடத்திற்கு வருகை தருவார்கள். ஆரம்ப காலங்களிலிருந்து இருந்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மத நல்லிணக்கத்தை போற்றுவதில் எருமெலி புகழ் பெற்றது. ஐயப்ப பக்தர்கள் அனைவரும் தங்களது முகம் உள்பட உடல் முழுவதும் வண்ண வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு, இலை-தழைகளை கையில் ஏந்தியவாறு ஐய்யனின் சரண கோஷத்தை முழங்கிபடி, ஆடி பாடுவார்கள். ஐயப்பன் முன்னிலையில் பக்தர்கள் அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளும் விதமாக இந்த நிகழ்வு நடக்கிறது.

சபரிமலை யாத்திரைக்கு செல்லும்போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்?

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் ஐயப்ப பக்தர்கள் முதல் வருடம் தொடங்கி 18 வது வருடம் செல்லும் போது இருமுடியுடன் தென்னங்கன்றை எடுத்துச் செல்லும் வழக்கம் உள்ளது. இது காலங்காலமாக நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆன்மீக பழக்கம். இந்த முக்கியத்துவம் வேறு பொருளுக்கு கிடையாது. அதாவது மற்ற‌‌ செடிகளை காட்டிலும் தென்னங்கன்று வளர்ந்து பெரிய மரமான பிறகு அதில் கிடைக்கும் பொருட்களின் பயன் மிகவும் சிறப்பானது. தென்னையை நாம் மனித இனத்திற்கு இணையாகவே கருதுகின்றோம். அதனால் அதை தென்னம்பிள்ளை என்றே அழைக்கிறோம். மறுபிறவி எடுப்பதை குறிப்பதற்கே தென்னம்பிள்ளையை எடுத்துச்சென்று அங்கே நடுகிறோம். இதற்காக தான் சபரிமலை செல்லும் போது தென்னம்பிள்ளையை எடுத்து செல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் தென்னங்கன்றை பார்த்தவுடன் இவர் 18வது ஆண்டுகளாக வரும் குருசாமி என்று எண்ணி சுவாமிமார்கள் நம்மிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள். அவர்களுக்கு நாம் ஆசிர்வாதம் செய்து வெறும் கையோடு அனுப்பாமல் நம்மால் முடிந்த உதவியையும் செய்யலாம்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : சோகம் தீர்க்கும் சோமவார விரதம் இருப்பது எப்படி? சோமவார விரதம் இருப்பதன் பலன் மற்றும் அதன் வரலாறு!