நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்! 50 வயதிலும் இளமையாக இருக்கலாம்!

- Advertisement -

நெல்லிக்காய் அல்லது நெல்லிக்கனி… இதை ஆயுளை வளர்க்கும் கனி என்பார்கள். அதனால்தான் சிறப்புவாய்ந்த அந்த நெல்லிக்கனியை அதியமான் என்னும் அரசன், தான் உண்பதைவிட மக்களுக்கு நல்லது செய்யும் அவ்வையாருக்கு கொடுத்து மகிழ்ந்தான் என்பது வரலாறு. நெல்லிக்காய் எனப்படும் அந்தக் கனியை ஒரு கடி கடித்ததும் புளிப்புச்சுவையும் அதைத்தொடர்ந்து இனிப்பு, துவர்ப்பு, கசப்பு என சுவை மாறுபடும். இப்படி சுவை மாறுபடும் நெல்லிக்காயை பச்சையாக அப்படியே சாப்பிடலாம். சாறு எடுத்தும் குடிக்கலாம், காயவைத்துச் சாப்பிடலாம், தேனில் ஊற வைத்தும் சாப்பிடலாம். நறுக்கி வைத்தாலும், வேக வைத்தாலும், காய வைத்தாலும் அதன் பயனை உள்ளது உள்ளபடி தரக்கூடியது நெல்லிக்காய்.

-விளம்பரம்-


நீர்ச்சத்து நிறைந்த நெல்லிக்காய்


நெல்லிக்காயில் அதன் காயைப்போல பட்டை, வேர், இலை, பூ என அனைத்துக்கும் மருத்துவ குணம் உள்ளது. நாட்டு நெல்லி மட்டுமல்ல அரிநெல்லிக்கும் மருத்துவ குணம் உள்ளது. சிறுவயதில் அரிநெல்லிக்காயை உப்பு தொட்டு சுவைத்துச் சாப்பிட்ட அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். பெருநெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டு தண்ணீர் குடித்ததும் இனிப்புச்சுவையை நாக்கில் உணரமுடியும். 80 சதவீதம் நீர்ச்சத்தையும் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் மற்றும் பல்வேறு சத்துகளைக் கொண்டுள்ளது. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

- Advertisement -


ஆரஞ்சு, ஆப்பிளைவிட அதிக சத்து


ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லப்படும் நெல்லிக்காயில் ஆரஞ்சுப்பழத்தைவிட 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட மூன்று மடங்கு புரதச்சத்து இருக்கிறது. உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த நெல்லிக்காயை சித்தர்கள் வியந்து கூறியுள்ளனர். அதனால்தான் சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவத்திலும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்துகிறார்கள். மேலும் நெல்லிக்காய் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.


நெல்லிக்காய் ஜூஸ்


நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டாலும் சரி, ஜூஸாக்கிக் குடித்தாலும் சரி அதன் எண்ணற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கும். வெறும் நெல்லிக்காயாக இல்லாமல் அதனுடன் கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து அரைத்து எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடிக்கலாம். ஆனால், சிலர் நெல்லிக்காயைச் சாப்பிட்டதும் சளி பிடிக்கும் என்று சாப்பிடத் தயங்குவார்கள். அப்படி யோசிப்பவர்கள் நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு ஊற வைத்துக் குடிக்கலாம். தினமும் காலையில் புதிதாக இப்படி தயாரித்து மூன்று, நான்கு மணி நேரத்துக்குள் அந்த நீரை குடிப்பது நல்லது.


இதயத்துக்கு வலிமை தரும்


நமது உடலில் ஓய்வு இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் இதயம் நலமுடன் இருக்க வேண்டுமென்றால் நெல்லிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது. நெல்லிக்காயில் உள்ள குரோமியம் என்னும் சத்து இதயம் தொடர்பான பாதிப்புகள் வராமல் தடுக்கக்கூடியது. இதய தசைகளை வலுவாக்கி ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதய வால்வுகள், ரத்தக்குழாய்களில் ஏற்படக்கூடிய அடைப்புகளை சீராக வைத்திருக்க உதவுகிறது. அந்தவகையில் மாரடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்துக்கு வலிமையைக் கொடுக்கிறது.

-விளம்பரம்-


எடை குறைக்கும்


நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்றுகிறது. உடலில் இருக்கும் புரதச்சத்தினை அதிகரித்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் நெல்லிக்காயைச் சாப்பிட்டு வருவது நல்லது. தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும் என்பதால் உடல் எடை அதலபாதாளத்துக்கு சென்றுவிடும் என்று பயப்படத் தேவையில்லை.


ஹீமோகுளோபின் அதிகரிக்கும்


மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் நலமளிக்கக்கூடியது நெல்லிக்காய். இன்றைக்கு பருவமடைந்த பெண்களில் தொடங்கி திருமணமானவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் என பெண்களில் பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சினை ஹீமோகுளோபின் குறைபாடு. மாதவிடாயின்போது ஏற்படக்கூடிய ரத்த இழப்புகள் மட்டுமன்றி சரியான நேரத்து சாப்பிடாதது, வேலைப்பளு மற்றும் பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருக்கிறது. இதனால் உடலும் மனமும் சோர்வடைந்து காணப்படுகிறார்கள். இதற்கு நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது அல்லது தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் சாப்பிடுவது நலம் தரும். இதை ஒன்றிரண்டு நாட்களில் செய்து பலனை எதிர்ப்பார்க்க முடியாது. தொடர்ந்து பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும். கர்ப்பிணிகள் தினமும் ஒன்று அல்லது இரண்டு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கும் நல்லது; வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் நல்லது.


சிறுநீரகக்கோளாறு தடுக்கும்


சிறுநீரகத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளால் கற்கள் உருவாகி சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை ஏற்படும். இன்றைக்கு பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக இது உருவெடுத்திருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கக்கூடியது நெல்லிக்காய். அடிப்படையில் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையைப் போக்கி ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும். மேலும் சிறுநீரகத்தில் படியக்கூடிய சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதைத் தடுத்து அவற்றைக் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றும் பணியை சிறப்பாகச் செய்யக்கூடியது நெல்லிக்காய்.

-விளம்பரம்-


மூட்டு வலிக்கு தீர்வு


முதுமை என்பது சுமையல்ல என்பதுபோன்ற வாசகங்கள் நம்பிக்கையூட்டினாலும் முதுமையில் பலர் மூட்டுவலியால் சிரமப்படுகின்றனர். கால்சியம் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடியது மூட்டுவலி. இதற்கு நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்துகள் சிறந்த தீர்வைத் தருகிறது. முதியோருக்கு மட்டுமல்ல இளம் வயதினரும் உறுதியான எலும்பைப்பெற்று ஆரோக்கியமாக வளர்வதற்கு வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். பெரும்பாலும் சித்த மருத்துவத்தில் வெறும் வயிற்றில் மருந்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. அதனால் தயக்கமின்றி சாப்பிடலாம்.


குடல் வாய்வு வெளியேற்றும்


கல்லீரலில் உண்டாகக்கூடிய நோய்த்தொற்றினையும் கிருமிகளையும் அழிக்கக்கூடிய சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. இதன்மூலம் மஞ்சள்காமாலை வராமல் தடுக்கிறது. சிறுகுடல், பெருங்குடலில் உணவுக்கழிவுகள் தேங்கி உறுப்புகளை பலவீனப்படுத்தும். நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கழிவுகளை அகற்றி அந்த உறுப்புகளை பலப்படுத்தும். மேலும் குடலில் வாய்வு தேங்கியிருந்தால் அதை வெளியேற்றுவது, உடல் சூட்டைக் குறைப்பது, செரிமானக்கோளாறு வராமல் பாதுகாப்பது, பெண்களை பாடாய்ப்படுத்தி வரும் பெரும்பாடு பிரச்சினையை சரிசெய்வது, ஆண்குறியில் வரும் கொப்புளத்தை குணப்படுத்துவது என நெல்லிக்காயின் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.


என்றும் இளமையாக இருக்கலாம்


வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும், கண்பார்வையை கூர்மையாக்கும், முதுமையைத் தடுத்து இளமையை தக்க வைக்கும். என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். 50 வயது ஆனாலும்கூட சிலர் இளமையாக இருப்பதன் காரணம் என்னவென்று கேட்டால் நெல்லிகாய் சாப்பிட்டேன், நெல்லிக்காய் லேகியம் சாப்பிட்டேன் என்று சொல்வதைக் கேட்க முடியும். வாத, பித்த, கபம் என மூன்றையும் சமநிலையில் வைக்கவும், சரும அழகுடன் உறுப்புகள் அழகாக இருக்கவும் உதவக்கூடியது நெல்லிக்காய் என்று சொன்னால் மிகையாகாது.


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு


இத்தனை சிறப்புகளைக்கொண்டது என்றாலும் நெல்லிக்காயை அளவோடு உண்ண வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்ற பழமொழியின் நினைவில் கொள்ள வேண்டும். மாலை மற்றும் இரவு நேரங்களிலோ நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மழை மற்றும் குளிர்ச்சியான சூழலில் புதிதாக நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here