நெஞ்சுச்சளி முதல் மாரடைப்பு வரை சரிசெய்யும் இயற்கை மருந்து பூண்டுப்பால்!

- Advertisement -

`உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பது இயற்கை மருத்துவத்தின் சிறப்பு. சித்த மருத்துவத்தில் உணவுப் பழக்கம் மூலம் பல்வேறு நோய்கள் சரிசெய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலில் வேக வைத்த வெள்ளைப்பூண்டுடன் சிறிது மிளகுத்தூளும், சிறிது மஞ்சள்தூளும் சேர்த்துக் கடைந்து குடித்து வருவதன்மூலம் பல்வேறு பிரச்சினைகள் சரியாகின்றன. முக்கியமாக பூண்டு வேக வைத்த பாலைக் குடித்தால் நெஞ்சுச்சளியில் தொடங்கி வாய்வுக்கோளாறு, மாரடைப்பு என்று பல்வேறு பிரச்சினைகள் சரியாகின்றன. பூண்டுப்பால் எனப்படும் அந்த உணவு மருந்தை மிக எளிமையாக தயார் செய்யலாம்.

பூண்டு பால் செய்வது எப்படி

பூண்டுப்பால் செய்வதற்கு முதலில் பூண்டு தேவை. மேலும் பால், மிளகுத்தூள், மஞ்சள் தூளும் தேவை. 50 மில்லி பாலுடன் அதே அளவு நீர் சேர்க்க வேண்டும். அடுத்து தோலுரித்த பூண்டுப்பற்கள் 10 எண்ணிக்கை எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி பாலுடன் சேர்க்க வேண்டும். பூண்டு வேகுமளவு பால் நன்றாகக் கொதித்ததும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட வேண்டும். பிறகு அடுப்பிலிருந்து கீழே இறக்கி பருப்பு கடையும் மத்தினைக்கொண்டு நன்றாகக் கடைய வேண்டும். கடைசியாக பனங்கல்கண்டு சேர்த்துக் குடிக்க வேண்டும். பனங்கற்கண்டு இல்லாதபட்சத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த பூண்டுப்பாலை இரவு தூங்கப்போகும் முன் குடித்தால் மிகவும் நல்லது.

- Advertisement -

பூண்டுப்பால் குடிப்பதன் நன்மைகள்

பூண்டுப்பாலின் மகிமை என்னவென்றால் நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை அறுத்து மலத்துடன் வெளியேற்றும். அதுமட்டுமல்ல கர்புர் என்று நெஞ்சில் சளி இழுத்துக்கொண்டு இருந்தால் இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் பூண்டுப்பால் குடித்தால் நிச்சயமாக நிம்மதியாக தூங்கலாம். பொதுவாக பூண்டு சாப்பிடுவதால் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாது. அதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராது.

இதையும் படியுங்கள் : பூண்டின் நன்மைகள் பற்றி தெரியுமா?

நமது பாரம்பரிய மருத்துவத்தின் சிறப்பு என்னவென்றால் கூடுதலாக ஒரு நோயை சரிபண்ணுமே ஒழிய புதிதாக ஒரு பிரச்சினையை உண்டாக்காது. ஆனால் சிலர் வெள்ளைப்பூண்டினை அப்படியே பச்சையாக சாப்பிட்டுவிட்டு வயிற்றுப்பிரச்சினையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, உணவாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் அதை அளவோடு சாப்பிட வேண்டும். சரியான வழிமுறைகளை தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும். இங்கே நாம் சொன்னதுபோல் வெள்ளைப்பூண்டினை பாலில் வேக வைத்துச் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் உண்டாகாது.

பூண்டை வேறு எப்படி சாப்பிடலாம்

பூண்டுப்பால் தயாரிக்க நேரமில்லாதவர்கள் முழு பூண்டை தீயில் சுட்டு சாப்பிடலாம். வெள்ளைப்பூண்டை குழம்பு வைத்துச் சாப்பிடுவது, பூண்டுத் துவையல், பூண்டு ரசம் என்று வெவ்வேறு வடிவங்களில் தயார்செய்தும் சாப்பிடலாம். இதேபோல் சாப்பிட்டு வந்தால் வாய்வுக்கோளாறுகள், வாதக்கோளாறுகள் சரியாகும். வாய்வுத்தொல்லையால் கஷ்டப்படுகிறவர்கள் பலபேர் என்னென்னவோ மருந்து சாப்பிட்டும் பலனில்லை என்று சொல்கிறார்கள். இத்தகைய எளிமையான முறைகளில் செய்து சாப்பிடுவதன்மூலம் நிச்சயம் பலன் பெறலாம். அதுமட்டுமன்றி மாரடைப்பு போன்ற இதயக்கோளாறுகள் வராமலும் தடுக்கும் சக்தி வெள்ளைப்பூண்டுக்கு உண்டு. வெள்ளைப்பூண்டு சாப்பிடுவதால் இன்னும் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும். எளிமையான முறையில் தயாரிக்கக்கூடிய இந்த பூண்டுப்பாலினை செய்து சாப்பிட்டு பலன் பெறுங்கள். நெஞ்சுச்சளியில் தொடங்கி மாரடைப்பு வரையிலான பாதிப்புகளிலிருந்து விடுதலை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here