உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக மசாலா செய்து அலுத்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு வறுவல் செய்யுங்கள். இந்த முள்ளங்கி வறுவல் சப்பாத்திக்கு மட்டுமின்றி, புளிக்குழம்பிற்கு சைடு டிஷ்ஷாகவும் அற்புதமாக இருக்கும். முள்ளங்கி வறுவல் என்றதும் பலர் அதன் வாசனையை நினைத்து முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த முள்ளங்கியை நன்கு வேகவைத்து செய்வதால், வாசனை அதிகம் வராது.
முள்ளங்கியில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. கால்சியம், வைட்டமின் சி, ரிபோஃப்ளேவின், நியாசின், தியாமின், வைட்டமின் B6, ஃபோலேட், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது முள்ளங்கி. நீர்ச்சத்து அதிகம் உள்ள இந்த முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பலன் அளிக்கிறது.
இவ்வாறு உடலுக்குத் தேவையான அத்துனை ஊட்டச்சத்துக்களையும் முள்ளங்கி கொண்டுள்ளதால், தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் பெரும்பாலான வீடுகளில் முள்ளங்கி சமைப்பதை தவிர்த்தே வருகின்றனர். ஆனால் வறுவல் போன்ற சுவையில் முள்ளங்கியையும் வறுத்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.
முள்ளங்கி வறுவல் | Radish Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- 1/4 கி முள்ளங்கி
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் முள்ளங்கியை நன்கு கழுவி விட்டு தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் அதனை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து ஒரு விசில் மட்டும் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
- பின் கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை குறைந்த தீயில் வைத்து வதக்கவும். பின் வேக வைத்த முள்ளங்கியை சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.
- பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான முள்ளங்கி வறுவல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இதை முள்ளங்கியில் செய்ததுனு சொன்ன யாருமே நம்ப மாட்டாங்க! முள்ளங்கி சாப்ஸ் இப்படி செய்து பாருங்க!