நாம் இன்று பார்க்க இருப்பது பருப்பே இல்லாமல் சாம்பார் எப்படி செய்வது? அது எப்படி பருப்பை இல்லாமல் சாம்பார் செய்வது என்று ஆச்சரியம் அளிக்கிறதா. ஆம் இது ஒன்றும் புதுமையாக தயார் செய்யவில்லை. நமது கிராமத்து பகுதிகளில் கால காலமாக இட்லி தோசைக்கு இப்படி தான் சாம்பார் செய்து சாப்பிடுவார்கள். இதனுடைய சுவையும் மணமும் சொல்லவே தேவையில்லை அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
நீங்களும் காலை அல்லது இரவு டிபனுக்கு இந்த பருப்பை இல்லாத சாம்பாரை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு அடிக்கடி நீங்களே இந்த சாம்பாரை செய்து சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். அந்த அளவுக்கு இது உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ரெசிபியாக இருக்கும். சரி, இன்று பருப்பு இல்லாத சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
பருப்பு இல்லாத சாம்பார் | Lentil-Free Sambar Recipe in Tamil
Equipment
- 1 குக்கர்
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
குக்கரில் வேக வைக்க
- 1 பெரிய வெங்காயம் நறுக்கி கொள்ளவும்
- 2 தக்காளி நறுக்கி கொள்ளவும்
- 6 பச்சை மிளகாய் கீறி விடுங்கள்
- மஞ்சள் தூள் சிறிது
- 1 ½ கப் தண்ணீர்
குழம்புக்கு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 tbsp கடுகு
- ½ tbsp சீரகம்
- 2 வர மிளகாய்
- கருவேப்பிலை சிறிது
- 2 கப் தண்ணீர்
- 1 tbsp சாம்பார் பொடி
- உப்பு தேவையான அளவு
- 3 tbsp கடலை மாவு
- பெருங்காயத் தூள் சிறிது
- கொத்தமல்லி சிறிது நறுக்கி கொள்ளவும்
செய்முறை
- முதலில் குக்கரை அடுப்பில் வைத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, கீரிய பச்சை மிளகாய், சிறிது மஞ்சள் பொடி சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும். பின்பு மூன்று விசில் வரும் வரை குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
- மூன்று விசில் வந்ததும் குக்கரை இறக்கி பிரஷரை ரிலீஸ் செய்துவிட்டு பார்த்தால் நாம் போட்டுள்ள பொருட்கள் நன்றாக வெந்து இருக்கும். பிறகு குக்கரில் உள்ள தண்ணீரை ஒரு பவுலில் வடிகட்டி விடுங்கள்.
- பின் குக்கரில் மீதம் உள்ள பொருட்களை பருப்பு மத்தை வைத்து நன்றாக மசித்து விடவும். மசித்து விட்ட பின் வடிகட்டிய தண்ணீயை மறுபடியும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியதும் கடுகு, சீரகம், வரமிளகாய், சிறிது கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- அடுத்து குக்கரில் மசித்த பொருட்களை இதனுடன் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
- கொதித்ததும் ஒரு பவுலில் கடலை மாவு எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். பின்பு இதையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
- பின் சாம்பார் கட்டியாக வந்ததும் பெருங்காயத்தூள், நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் பருப்பே இல்லாமல் மனமணக்கும் சுவையான சாம்பார் இனிதே தயாராகி விட்டது.
Nutrition
இதையும் படியுங்கள் : மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?