ஓர் ஆண்டில் பன்னிரு அமாவாசை திதிகள் வரும். அவற்றுள் மிக முக்கியமானது மகாளய அமாவாசை. ஏனென்றால் நம் முன்னோர்கள் பித்ரு லோகம் எனப்படும் தென்புலத்தில் இருப்பார்கள். அங்கிருந்து நாம் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் மூலம் அளிக்கும் எள் மற்றும் நீரினை ஏற்று திருப்தி கொள்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு சூரிய கிரகணம், மகாளய அமாவாசை இவை இரண்டுமே இணைந்து வருவதால் எப்படி தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களா வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும், எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுப்பது என்ற குழப்பம் எழுந்துள்ளது. கிரகணத்தன்று தர்ப்பணம் கொடுக்கலாமா? எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

மகாளய அமாவாசை 2025
மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் முக்கியமான அமாவாசை நாள் ஆகும். மகாளய அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களையும் மகாளய பட்சம் என்கிறோம். இந்த ஆண்டு மகாளய அமாவாசை 2025, செப்டம்பர் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது; அமாவாசை திதி அதிகாலை 01:03 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 22ம் தேதி அதிகாலை 01:42 வரை உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. அப்படி செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்றாவது தர்ப்பணம் செய்து முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
கிரகணத்தன்று தர்ப்பணம் கொடுக்கலாமா?
பொதுவாக கிரகண காலத்தில் தர்ப்பணம் செய்யும் வழக்கமும் நம்மிடையே உண்டு. இந்த ஆண்டு அமாவாசை 21.09.25 அன்று நிகழ்கிறது. அன்று இரவே சூரிய கிரகணமும் தோன்றுகிறது. அதாவது கிரகணம் செப்டம்பர் 21ம் தேதி இரவு 10.59 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 22ம் தேதி அதிகாலை 03.23 மணி வரை உள்ளது. அமாவாசை திதி அன்று சூரிய கிரகணம் வந்தாலும் அது ஒன்றாக ஒரே நேரத்தில் வரவில்லை. அதனால் அபரான்ன காலத்துக்குள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் ஆகியன கொடுப்பது தான் நல்லது.இந்த நேரத்தில் தர்பணம் செய்வது பித்ருக்களின் அருளைப் பெறுவதற்கு உகந்த நேரமாகவும் கருதப்படுகிறது. கிரகணத்தின் போது தர்ப்பணம் செய்வதன் மூலம் நம்முடைய பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம்?
இந்து சமயத்தில் மகாளய அமாவாசை மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த மகாளய பட்சத்தின் 15 நாட்களும் தர்ப்பணம், தானம் செய்து வழிபட வேண்டும். அனைத்து நாட்களும் தர்பணம் செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை நாளில் விரதம் இருந்து, செப்டம்பர் 21ம் தேதி காலை சூரிய உதயத்திற்கு பிறகு காலை 6 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம். இரவு நேரத்தில் கிரகணம் இருப்பதால் 09.30 மணிக்கு முன்னதாக விரதத்தை நிறைவு செய்து விட வேண்டும். இந்த நாளில் தர்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.
மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்
உத்திராயண காலத்தில் வரும் தை அமாவாசை, தட்சிணாயன காலத்தில் வரும் ஆடி அமாவாசை தவிர புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிக உயர்வானதாக சொல்லப்படுகிறது. காரணம் இந்த ஒரு அமாவாசையில் மட்டும் தான் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருவார்கள். மகாளய தர்ப்பணத்தை நீர் நிலைகள் செய்து, நம்மால் முடிந்தவற்றை பிறருக்கு தானம் செய்வது மிகவும் அவசியமாகும். எவ்வளவு தான் தான தர்மம் செய்தாலும், பித்ரு கடன் வழிபாடு செய்யாவிட்டால் பலன் கிடைக்காது. அதனால் நாம் மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டும் இதனால் முன்னோர் தம் நல்லாசிகளினால் தம் சந்ததியில் – சிறந்த வாழ்க்கைத் துணையும், குடும்பத்திற்கு ஏற்ற மருமகனும் மருமகளும் அமைவர். வீடு, விளைநிலம், பசுக்கள், முதலான ஐஸ்வர்யங்கள் நிறையும். சிறந்த பதவிகளை அடைவதுடன் மேன்மை, புகழ் சேரும். ஆரோக்கியம் தீர்க்காயுள் என நன்மைகளும் நலங்களும் பெருகும்.
இதனையும் படியுங்கள் : பணவசியத்தை ஏற்படுத்தும் அமாவாசை பரிகாரம்




