தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். அதுமட்டுமின்றி தோசை உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்களையோ அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பொருட்களையோ கொண்டவை அல்ல. மேலும் இவை எளிமையான மற்றும் எளிதாக செய்து முடிக்க கூடிய ஒரு உணவு வகை.
தோசையில் பல வகை உண்டு அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மிகுந்த சுவையான மற்றும் வித்தியாசமான சிறுதானிய முருங்கை கீரை அடை தோசை. நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் காலை உணவினை சத்தானதாக சாப்பிட்டால், நாம் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக மற்றும் உற்சாகமாக இருக்கலாம். அப்படி சத்தான உணவுகளை சமைக்க வேண்டுமென்றால் சிறுதானியங்கள் சேர்த்து காலை உணவை செய்வது தான் சிறந்த தேர்வாக இருக்கும். குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள்.
கேழ்வரகு, கம்பு, தோசை, வரகரிசி, தினை, சோளம், கேப்பை என சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் அடை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். சிறு தானியங்கள் அளவில் சிறிதாக இருந்தாலும், அரோக்கியத்தில் பெரிய அளவில் நன்மை பயக்கும். அப்படிப்பட்ட சிறுதானியத்தை சேர்த்து சத்தான முருங்கை கீரை அடையை எப்படி சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சிறுதானிய முருங்கை கீரை அடை | Millets Murungi Adai Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 தோசை கல்
- 1 கிரைண்டர்
தேவையான பொருட்கள்
- 1/4 கப் வரகு
- 1/4 கப் கம்பு
- 1/4 கப் தினை
- 1/4 கப் குதிரைவாலி
- 1/4 கப் சாமை
- உப்பு தேவையான அளவு
- நல்லெண்ணெய் தேவையான அளவு
- 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 2 கப் முருங்கை கீரை
- 4 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, புதினா
- 20 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 கப் இட்லி அரிசி
- 1/4 கப் உளுத்தம் பருப்பு
- 1/2 கப் துவரம் பருப்பு
- 1/4 கப் கடலை பருப்பு
- 1/4 கப் ஜவ்வரிசி
செய்முறை
- முதலில் குதிரைவாலி, தினை, வரகு, கம்பு, சாமை ஆகியவற்றை தண்ணீரில் அலசி விட்டு ஊற வைத்து கொள்ளவும்.
- பின் துவரம் பருப்பு, கடலை பருப்பு, இட்லி அரிசி, உளுந்து, ஜவ்வரிசி, வர மிளகாய் ஆகியவற்றை தனியாக ஊற வைத்து கொள்ளவும்.
- பின் கிரைண்டரில் முதலில் மிளகாய் மற்றும் பருப்பை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் சிறுதானியங்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின் மாவை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் உப்பு, பெருங்காயம், பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, புதினா, முருங்கை கீரை, தேங்காய் துருவல் சேர்த்து 1 மணி நேரம் வரை மூடி வைத்து விடவும்.
- பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை அடை வார்த்து நல்லெண்ணெய் ஊற்றி இருபுறமும் சுட்டு எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிறுதானிய முருங்கை கீரை அடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ஆரோக்கியமான சிறுதானிய தோசை மொறு மொறுவென்று இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை கூடுதலாகவே வாங்கி சாப்பிடுவார்கள்!!!