நவராத்திரி என்பது இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான ஒரு பண்டிகை. நவராத்திரி என்பது அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களாக வழிபடும் பண்டிகையாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகயை ஒவ்வொரு வடிவில் வழிபடுகிறோம். ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு. ஆசாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி ஆகும். இந்த நவராத்திரியில் தான் தேவி மகிஷசுரனை வென்று வெற்றி மாலை சூடுகிறார். இந்த பண்டிகையின் முதல் மூன்று நாட்கள் தாயை துர்கா தேவியாகவும் அடுத்த மூன்று நாட்கள் தாயை லட்சுமி தேவியாகவும் கடைசி மூன்று நாட்கள் தாயை சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகிறோம். இந்த நவராத்திரி பண்டிகை முழுக்க முழுக்க பெண்களுக்கான உரிய பண்டிகை என்பதால் பெண்கள் தங்களுடைய இல்லத்தில் திருவிழா போல நடத்துவார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நவராத்திரியில் தியானம் மட்டுமே செய்து முப்பெரும் தேவியரின் அருளை எப்படி பெறலாம் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.

நவராத்திரி தியான வழிபாடு
பொதுவாக நவராத்திரி நன்னாளில் கொலு வைத்து கொண்டாடுவது தான் வழக்கம். கொலு வைக்க முடியாதவர்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீட்டில் கலசம் வைத்து காலை மாலை இரண்டு வேளைகளிலும் தூப தீப ஆராதனை காட்டி அர்ச்சனை செய்து நெய்வேத்தியம் படைத்து வீட்டிற்கு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு மங்கல பொருட்கள் கொடுத்து வழிபடுவார்கள். இப்படி அன்னையை வழிபடுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் உள்ள துன்பங்களிலிருந்து விடுபட்டு, அனைத்து நலன்களையும் பெறலாம் என கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை கடைபிடிக்க முடியாதவர்கள் நவராத்திரி நாளில் தியானம் செய்வதன் மூலம் முழு பலனையும் பெறலாம்.
இந்த தியான வழிபாடு செய்வதற்கு காலையிலேயே எழுந்து தலைக்கு குளித்துவிட்டு, நம்முடைய பூஜையறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பின் மாலை வேளையும் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் அம்மனின் படத்திற்கு முன் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த தியானத்தில் ஈடுபட வேண்டும். தியானத்தின் போது நம்முடைய கண்களை நன்கு மூடி மூச்சை மெதுவாக உள் இழுத்து வெளி விட வேண்டும். பின் “ஓம் ஸ்ரீம் துர்கையே நமஹ” என்னும் மந்திரத்தை மனதில் கூறிக் கொண்டே அம்மனை நம்முடைய மனதால் தரிசனம் செய்ய வேண்டும். இந்த தியான வழிபாட்டை நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மாலை நேரத்தில் ஒன்பது நிமிடங்கள் செய்வது தான் மிகவும் சிறப்பு. தியானத்தை நிறைவு செய்ய அம்மனுக்கு கற்பூர ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். கொலு வைத்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இந்த தியான வழிபாட்டை முழு மனதோடு செய்பவர்களுக்கு அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : கொலு வைக்காதவர்கள் வழிபடும் முறை




