பொதுவாகவே, அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்காக கடவுளை வழிபடுகிறார்கள். அதுவும் குறிப்பாக இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் ஒவ்வொரு நாளும் பூஜைகள் செய்வது என்பதே மிகவும் நல்ல செயலாகும். பூஜைகள் என்பது இறைவனுக்கு செய்யப்படும் ஒரு தொண்டாகும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தால் போதும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. இறைவனை அடைவதற்கும், அவரின் அருளை பெறுவதற்கும் மிகச் சிறந்த வழியாக நம்முடைய சமயம் சொல்வது பூஜைகள் மற்றும் வழிபாடுகள் ஆகும். என்ன தான் நாம் பக்தியுடன் பூஜைகள் செய்தாலும் நம்மையும் அறியாமல் சில பூஜை பொருட்களை கீழே வைத்து விட்டு தவறுகளை செய்து விடுவது உண்டு. ஆகையால் எந்தெந்த பொருட்களை தரையில் வைத்து பூஜை செய்யக் கூடாது என்றும், ஏன் வைக்கக் கூடாது என்றும் இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
பூஜையின் போது செய்ய கூடாதவை
பூஜை அறையில், பூஜை செய்யும்போது நம்மை அறியாமலேயே சின்ன சின்ன தவறுகளை செய்து விடுகின்றோம். அந்த தவறுகளின் மூலம் குடும்பத்திற்கு ஏதாவது பெரிய கஷ்டங்கள் வருமா.கடவுள் நம்மை தண்டித்து விடுவாரா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. செய்யக்கூடிய தவறுகள் அறியாமல் செய்யப்படுவதன் மூலம் கடவுள் நம்மை தண்டிக்க மாட்டார். நம்முடைய வேதங்களின் படி பூஜைகளை சரியாக செய்யும் போது மட்டுமே முனிவர்களின் சங்கல்ப சக்தி கிடைக்கிறது. எனவே பூஜை முறைப்படி நடத்தப்பட வேண்டும். ஆகையால் பூஜையின் போது சொல்லப்படும் மந்திரங்கள் மட்டுமல்ல பூஜையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொன்றும் தெய்வீக தன்மை கொண்டதாகும். அவைகள் தான் நாம் செய்யும் பூஜையை முழுமை பெறச் செய்யும்.
தரையில் வைத்து பூஜை செய்ய கூடாத பொருட்கள்
சிவலிங்கம்
சிவ பெருமானின் பலவிதமான வடிவங்களில் ஒன்று லிங்க சொரூபம். இது அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று வடிவங்களையும் குறிப்பதாகும். இந்தியாவில் பழங்காலம் முதலே லிங்க வழிபாடு இருந்து வருகிறது. சிவனின் வடிவங்களில் ஒன்றான சிவலிங்கத்தை சிலர் வீடுகளிலும் வைத்து வழிபட்டு வருகிறார்கள். பொதுவாக வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே வைத்திருந்தால், அதை தரையில் வைக்கக் கூடாது. சிவலிங்கத்தை பெட்டி போன்ற மூடிய இடத்தில் வைக்கக் கூடாது. திறந்த, காற்றோட்டம் இருக்கும் படியான இடத்தில் சிவலிங்கத்தை வைப்பதே மங்களகரமானதாகும். இல்லையெனில் சிவலிங்கத்தின் மீது எப்போதும் தண்ணீர் விழும் படியான அமைப்பில் வைப்பது மிகவும் சிறப்பானதாகும்.
பூணூல்
பூணூல், இந்த மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தெய்வீகத்தை உணர்வதற்காக பிரம்மப் பிரதிஷ்டை தீட்சை வழங்கப்படுவதற்கான அடையாளமாக அணிவிக்கப்படுவதே பூணூல் ஆகும். இத்தகைய புனித நூலை எப்போதும் தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாது.
சங்கு
சங்கு பொதுவாகவே லெட்சுமியின் அம்சத்தை தாங்கியிருப்பது. சங்கு என்பது விஷேசமான ஒன்றாகும். அதனை முறையாக பூஜை செய்து வழிப்பட்டு வந்தால் வீட்டில் கஷ்டங்கள் மறைந்து மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இந்த சங்கை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பு. ஆனால் எந்த காரணத்திற்காகவும் தரையில் மட்டும் வைக்கக்கூடாது. சங்கை வீட்டில் வைத்து உரிய பூஜை மேற்கொள்ள முடியாதவர்கள் அதனை உரிய இடத்தில் கொடுத்து விடுவது மிகவும் நல்லது.
விளக்கு
தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது. கோவில்களில் மட்டுமின்றி, வீடுகளிலும் விளக்கு ஏற்றி கடவுளை தொழுது வணங்கும் பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது. நம்முடைய வீட்டில் விளக்கேற்றினால் அன்னை மகாலட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும். அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலும் அந்தி மாலையில் பிரதோஷ நேரத்திலும் நம்முடைய வீட்டில் விளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது. அப்படி விளக்கு ஏற்றும் போது அதனை தரையில் வைத்து ஏற்றக்கூடாது. செம்பருத்தி இலை, வெற்றிலை போன்றவற்றை வைத்து அதன் மீது வைத்து ஏற்றுவது சிறப்பு.
தங்கம்
தங்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நம் எல்லோருக்குமே தெரியும். இந்தியர்களை பொருத்த வரையில் தங்கம் என்பது மிகப் பெரிய முதலீடாகும். தங்கத்தை மகாலட்சுமியின் அம்சமாகவும், பாரம்பரியம் மற்றும் கெளரவத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. எனவே பூஜை அறையில் தங்க பொருட்கள் இருந்தால், அவற்றை தரையில் வைக்க கூடாது.
இதனையும் படியுங்கள் : பூஜை அறையில் இருக்க கூடாத சில பொருட்கள்!