பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து லட்சக்கணக்கான உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது. எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் அந்த பைரவரை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது. அதில், வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் செல்வம் பெருகும் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும். அவரை வழிபட்டால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கும். பைரவரை அவருக்குரிய அஷ்டமி திதியில் வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

பைரவரை வழிபடுவது ஏன்?
கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். பைரவர் பூசை செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் என்று பைரவர் வழிபாட்டில் சொல்லப்பட்டுள்ளன. பைரவரின் மந்திரங்களை துதித்து வந்தால் உங்கள் துன்பங்கள் யாவும் ஓடி, இன்பங்கள் எல்லாம் தேடி வரும் என நம்பப்படுகிறது.
பைரவரை வழிபடும் முறை
அஷ்டமி என்பது பைரவருக்குரிய வழிபாட்டு நாளாகும். வளர்பிறை அஷ்டமி நாளில் கால பைரவர் அல்லது சொர்ண பைரவரை வழிபடலாம். உளுந்த வடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பைரவ மூர்த்தங்களுக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷமானது. பைரவருக்கு வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வதால் வழக்கு முதலான சிக்கல்கள் நிவர்த்தியாக்கும் என்பது ஐதீகம். பொதுவாக வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரு வகையான திதிகளிலும் பைரவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது ஆகும். இருந்தாலும் இந்த இரு திதிகளில் பைரவரை எப்படி வழிபட வேண்டும் என பார்க்கலாம்.
வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகளில் எப்படி வழிபடலாம்?
தேய்பிறை அஷ்டமி சிவ வழிபாட்டிற்கு உகந்த நாள். குறிப்பாக சிவபெருமானின் ருத்ர வடிவமான கால பைரவரை வழிபட வேண்டிய நாள். பைரவருக்குப் பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும். அஷ்டமி திதியில் வீட்டிலேயே தீபம் ஏற்றி மனதில் பைரவரை நினைத்து, பைரவர் மந்திரத்தை உச்சரித்து வழிபட துன்பங்கள் நீங்கி, வாழ்வில் உயர்வு ஏற்படும். ஆனால் எந்த காரணத்திற்காகவும் தேய்பிறை அஷ்டமி அன்று நம்முடைய தேவைகளை சொல்லி பைரவரிடம் வேண்டிக் கொள்ளக் கூடாது. வளர்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அர்ச்சனை செய்து அங்கு கொடுக்கும் பூக்களை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும்.
பைரவர் வழிபாட்டு பாடல்
“விரிந்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு
தமருகம் கைதரித்ததோர் கோல கால
பயிரவனாகி வேழம் உரித்து உமை அஞ்சக்
கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே”
இந்தப் பாடலை உச்சரிப்பவர்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது.
பைரவரை வணங்கினால் கிடைக்கும் நன்மைகள்
சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரனால் நன்மையயே நடைபெறும். பைரவரை விடாமல் நினைப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும். நமது செல்வம் கொள்ளை போய்விடாமலும் வீண் விரயம் ஆகாமலும் தடுத்து, அச்செல்வங்களால் மகிழ்ச்சி அடைய துணை நிற்பவர் பைரவ மூர்த்தி. மேலும் அவர் வழக்குகளில் வெற்றி தருவார், தீய வழியில் சென்று விடாமல் தடுத்தாட்கொள்வார். பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும்.சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.
எத்தனை அஷ்டமி பைரவரை வழிபட வேண்டும்?

எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். அல்லது தொடர்ந்து ஆறு வளர்பிறை அஷ்டமிகளில் பைரவ வழிபாடு செய்ய வேண்டும். அந்த வழிபாடு நிறைவடைந்த பிறகு, நமது மனதில் இருந்த சோகங்கள், பிரச்சனைகள், நெருக்கடிகள் நீங்கி வருமானம் அதிகரிக்கத் துவங்கும். வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். இப்படி விரதமிருந்து வழிபட்டால் இழந்த பொருட்களும், சொத்துக்களும் திரும்ப கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : வாழ்க்கையில் வெற்றிகள் கிடைக்க இனி வழிபட வேண்டிய நாள் இது தான்!!




