Home ஆன்மிகம் ஆன்மிக கதைகள் அனைத்து பிரச்சனைகளும் தீர பெண்கள் வணங்க வேண்டிய 7 கோவில்கள்

அனைத்து பிரச்சனைகளும் தீர பெண்கள் வணங்க வேண்டிய 7 கோவில்கள்

தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில் நகரங்கள் உள்ளன. அதில் காஞ்சிபுரம், தஞ்சாவூர், மதுரை மற்றும் கும்பகோணம் ஆகியவை பெயர் பெற்றவை. ஏனென்றால், இந்த நகரங்களில் அதிக கோயில்கள் உள்ளன. எனவே தான் இதை கோவில் நகரம் என்று அழைக்கிறார்கள். இங்கு வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் ஸ்தலங்கள் உள்ளன.

-விளம்பரம்-

நேரில் சென்று இந்த கோயில்களில் வழிபாடு செய்தால், பிரச்சனைகள் நீங்கி வாழ்க்கை வளம் பெறும் என கூறப்படுகிறது. அந்தவகையில் நோய், கல்வி, குடும்ப பிரச்சனை என எத்தனையோ விதமான பிரச்சனைகளை தீர பெண்கள் எந்த கோவிலை வழிபட வேண்டும் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் தெரிந்துகொள்வோம்.

பெண்கள் வழிபட வேண்டிய கோவில்கள்

பெண்களின் பருவங்களை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என ஏழு நிலைகளாக பிரிக்கிறார்கள். இந்த ஏழு நிலைகளிலும் பெண்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இப்படி ஏற்படும் பிரச்சனைகள் தீருவதற்கு பெண்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சப்தமங்கைத் தலங்களான திருச்சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய கோவில்களை தரிசிக்க வேண்டும். இக்கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ளன.

இந்த சப்தஸ்தானத் தலங்கள் சப்த மங்கையரோடு தொடர்புடையன என்பதால் சப்தஸ்தான விழா எனப்படும் ஏழூர்த் திருவிழா இப்பகுதியில் கூடுதல் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஏழுர்த்தலங்களும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்பதும் அதற்கான கல்வெட்டுச் சான்றுகளுடன் உள்ளன என்பதும் சிறப்பான செய்தி. முதலும் முடிவும் ஞானசம்பந்தர் பதிகம் பெற்றவை. அனைத்துமே காவிரியின் தென்கரைத் தலங்கள். ஏழூர்த் திருவிழா இங்கே இரு நாள்கள் முழுமையாக நடைபெறுகின்றன. பங்குனித் திருவிழாவின்போது அனவித்ய நாதசர்மாவுடன் ஏழூர் வலம் வந்தால் சப்தமங்கையின் அருள் பெற்று சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

சக்கரமங்கை

சப்த மங்கை தலங்களில் முதல் தலமாக இருப்பது ‘சக்கரமங்கை’. இதனை ‘சக்கரப்பள்ளி’ என்றும் அழைப்பார்கள். இத்தல அம்பிகையின் பெயர், தேவநாயகி. பார்வதிதேவிக்கு, தன்னுடைய நெற்றிக்கண் தரிசனத்தை சிவபெருமான் காட்டிய தலம் இது. ஆலயத்தின் தல விருட்சம் வில்வம். இங்கு கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. அம்பாள் சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் தருவதும், யம பயம் நீக்க வல்லதுமான குங்குலியக் குண்டம் அமைந்துள்ளது. மகாவிஷ்ணு தன் சக்கராயுதத்தை பெற்ற திருத்தலமும் இது தான்.

-விளம்பரம்-

அரியமங்கை

சப்த மங்கை தலங்களின் வரிசையில் இது இரண்டாவது ஆகும். இங்குள்ள இறைவன் ‘அரிமுக்தீஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘ஞானாம்பிகை’ என்றும் பெயர் பெற்றுள்ளனர். ‘அரி’ என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணு வணங்கிய தலம் என்பதால் இறைவனுக்கு இந்தப் பெயர் வந்தது. இந்த ஆலயத்தில் பார்வதிதேவிக்கு, தன் ஜடாமுடியில் உள்ள கங்கையின் தரிசனத்தை சிவபெருமான் காட்டியருளினார். சப்த மங்கையரில் ஒருவளான மாகேச்வரி வழிபட்ட இத்தலத்தை  பார்வதி தேவி வழிபட்டவுடன், அம்பிகைக்குத் தனது சிரத்தின் உச்சியில் கங்கை பொங்க அற்புத தரிசனம் காட்டினார் பெருமான். அதுவே தற்போது சத்திய கங்கை தீர்த்தமாகத் திகழ்கிறது.

சூலமங்கை

கவுமாரி எனப்படும் சூலமங்கை வழிபட்ட தலம் இது. சப்த மங்கை தலங்களில் மூன்றாவது ஆலயம். தற்போது இந்த ஊர் ‘சூலமங்கலம்’ என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பெயர், கிருத்திவாகேஸ்வரர். அம்பாளின் பெயர், அலங்காரவல்லி. அம்பாள் இங்கு, மங்கை வடிவில் காட்சியளிக்கிறாள். அன்னை பராசக்தி இங்கு வந்து இறைவனை நோக்கித் தவம் செய்தபோது, தனது கரத்தில் சூலம் ஏந்தியவராக சுவாமி அவளுக்குக் காட்சி அளித்தார். தை அமாவாசையன்று வரும் சூலவிரதம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்து, மகாவிஷ்ணுவானவர் , காலநேமி என்ற அசுரனை வென்றார். பிரம்மன் தனது கடுமையான வயிற்றுவலி நீங்கப்பெற்றான். பெண்கள் இங்கு வந்து சூல விரதம் மேற்கொள்வதால், எதிரிகளின் தொல்லைகளும், நோய்களும், வறுமையும், தோஷங்களும் நீங்கப்பெறலாம்.

நந்திமங்கை

சப்த மங்கை தலங்களில் 4-வதான இந்த ஆலயம் நல்லிச்சேரி என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. நந்திதேவரால் சிவபெருமான் பூஜிக்கப்பட்ட தலமாகவும் இது இருக்கிறது. திருவையாறில் பஞ்சாட்சர உபதேசம் பெற்ற நந்தி, இத்தலத்தில் சித்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. இறைவன் ஜம்புநாத சுவாமி, இறைவி அகிலோண்டேஸ்வரி. பார்வதி தேவி, இங்கு சிவபெருமானின் திருக்கழல் தரிசனத்தைப் பெற்றாள். அகிலாண்டேஸ்வரி என்ற பெயருடன் அம்பிகையும் இங்கு வந்து தவம் செய்து ஈஸ்வரனது பாத தரிசனம் பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

-விளம்பரம்-

பசுமங்கை

பசுபதிகோவில் என்று அழைக்கப்படும் இந்த திருத்தலம், சப்த மங்கை தலங்களில் 5-வது ஆகும். சப்த மாதர்களில் வராகி வழிபட்ட ஆலயம் இது. காமதேனு என்னும் பசு இறைவனை நினைத்து வழிபட்டதால், இந்த ஊருக்கு ‘பசுபதிகோவில்’ என்ற பெயர் நிலைத்தது. இறைவனின் திருநாமம் பசுபதீஸ்வரர் என்றானது. அம்பாளின் பெயர், பால்வள நாயகி என்பதாகும். இந்த ஆலயம் மாடக்கோவில் அமைப்பைக் கொண்டது. பார்வதிதேவிக்கு, தன்னுடைய உடுக்கை தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இது. சப்த மாதர்களில் வாராகி வழிபட்டு ,ஈசனின் உடுக்கையிலிருந்து எழும் ஆதி நாதத்தைக் கேட்டு உய்ந்தாள். அதிலிருந்தே பிரபஞ்சங்கள் யாவும் உற்பத்தி ஆவதையும் அறிந்தாள். அதே தரிசனத்தை இங்கு வந்து வழிபட்ட அம்பிகையும் கண்டு பேரானந்தப்பட்டாள்.

தாழமங்கை

சப்த மங்கை தலங்களில் இது 6-வது திருத்தலமாகும். இறைவன் சந்திரமவுலீஸ்வரர் என்றும், இறைவி ராஜராஜேஸ்வரி என்றும் பெயர் பெற்றுள்ளனர். அகத்திய முனிவர் தாம் இயற்றிய அபூர்வமான நாமாவளிகளை இங்கு வைத்து பாடியதாக சொல்லப்படுகிறது. பார்வதிதேவிக்கு பிறை சந்திர தரிசனத்தை ஈசன் அளித்த தலம் இது. கண் சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாக வலது கண்ணில் நோய் என்றால் ஞாயிறென்றும், இடது கண்ணில் நோய் என்றால் திங்களன்றும் மௌன விரதமிருந்து இத்தலத்தில் சந்தனம் அரைத்து சுவாமிக்கு சந்தனக் காப்பாக இட்டு, அம்பாளுக்கு தாழம்பூக்களைக் கூந்தல் பட்டையாக அலங்கரித்துச் சார்த்தி வழிபட்டு வர கண் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம்.

திருப்புள்ளமங்கை

சப்த மங்கை தலங்களில் 7-வது தலம். சப்த மாதர்களில் சாமுண்டி வழிபட்ட ஆலயம். இத் தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர், பசுபதீஸ்வரர் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். பார்வதிதேவி, சிவபெருமானின் நாக தரிசனத்தை பெற்ற தலம் இது. அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இஃது என்பது தலபுராணச் செய்தி. அஷ்ட நாகங்களோடு வந்து சாமுண்டி தேவி சிவபூஜை செய்தபடியால் இங்கு வந்து வழிபடுவோர் நாக தோஷங்கள் நீங்கப்பெறுவதாகக் கூறப்படுகிறது.

இதனையும் படியுங்கள் : இந்த முருகர் கோவிலுக்குள் மட்டும் பெண்கள் செல்ல அனுமதி கிடையாது ஏன் தெரியுமா ?