சங்கடம் தீர்க்கும் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி

- Advertisement -

விக்னங்களை தீர்க்கக் கூடியவர் விநாயகப் பெருமான். முழு முதற் கடவுளாக போற்றப்படும் விநாயகர் தடைகள், துன்பங்கள், தோஷங்கள் போன்ற அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்த்து, மகிழ்ச்சியையும், ஞானத்தையும், வெற்றியையும் அருளக் கூடியவர். விநாயகரை வழிபட்ட பிறகு துவங்கும் காரியங்கள் தடையில்லாமல் நடைபெறும் என்பது நம்பிக்கை. இவருக்குரிய அனைத்து சதுர்த்திகளும் வழிபாட்டிற்கு உகந்தது ஆகும். அதிலும் ஆனி மாதத்தில் வருவது சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பானது. ஒருவர் எப்படிப்பட்ட கெட்ட கர்மவினையால் தாங்க முடியாத வேதனைகளை அனுபவித்து வந்தாலும், அவர் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபட்டால், கர்மவினைகளும், அவர்களின் துன்பங்கள் படிப்படியாக குறைந்து, வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படுவதை காண முடியும். அவரை சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தியில் எவ்வாறு வழிபாடு மேற்கொள்ளலாம் என இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

சங்கடஹர சதுர்த்தி

ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு முறை சதுர்த்தி திதி வரும். இதில் தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை “மகா சங்கடஹர சதுர்த்தி” என்று அழைக்கின்றனர்.

- Advertisement -

வழிபாடு செய்யும் முறை

சங்கடஹர சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள விநாயகர் ஆலயத்துக்குச் சென்று பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்தல் நல்லது. பின்னர் தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும். விநாயகருக்கு விளக்கேற்றி, அவருக்கு பிடித்த மலர்களை வைத்து பூஜை செய்யலாம். அன்று முழுவதும் அதாவது மாலை வரை விரதம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். விருப்பப்பட்டால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம்.

ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி

ஒவ்வொரு ஏகாதசிக்கும் எப்படி தனிப்பெயர், சிறப்புகள் உள்ளதோ அதே போல் ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கடஹர சதுர்த்திக்கும் தனியான பெயரும், தனியான சிறப்புக்களும் உண்டு. அந்த வகையில் ஆனி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு கிருஷ்ணபிங்கள சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி இந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. அன்று காலை 03.26 மணி துவங்கி, ஜூன் 26ம் தேதி அதிகாலை 01.25 வரை சதுர்த்தி திதி உள்ளது. ஜூன் 25ம் தேதி நாள் முழுவதுமே சதுர்த்தி திதி இருப்பதால் இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இருந்தாலும் காலையில் செய்வது சிறப்பு.

சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும். விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். விநாயகர். சங்கடஹர சதுர்த்தி நாளில் மாலையில் சந்திர உதய நேரத்தில் விநாயகப் பெருமானை வழிபட்டு, பின்பு சந்திர தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் நீங்கும். கிருஷ்ணபிங்கள சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருப்பவர்களுக்கு ஆரோக்கியம், செல்வம், வெற்றி என அனைத்து விதமான நலன்களையும் விநாயகப் பெருமான் அருள்வார்.

-விளம்பரம்-

சங்கடஹர சதுர்த்தியில் செய்ய வேண்டிய பரிகாரம்

Vinayagar chathurthi

முழு முதற் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வழிபடாத நபர்களே இருக்க முடியாது. எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட்டு விநாயகப் பெருமானே வழங்கிவிட்டு தான் அந்த காரியத்தை செய்ய ஆரம்பிப்போம். அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தியில் காலையில் எழுந்ததும் நீராடி விட்டு விநாயகரை மனதார வழிபட்டு விட்டு, உங்களுடைய வேண்டுதல் எதுவோ அதை விநாயகரிடம் மன விட்டு சொல்லுங்கள். பின் சிறிதளவு சந்தனத்தை தண்ணீர் அல்லது பன்னீரில் கலந்து விநாயகரின் பாதத்தில் வைத்து. அதன் மீது குங்குமம் வைத்து “ஓம் விக்னங்களை போக்கும் விநாயகா போற்றி” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி வழிபட வேண்டும். உங்களால் முடிந்தால் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இவ்வாறு சங்கடங்களை தீர்க்கக் கூடிய சங்கடஹர சதுர்த்தி நாள் அன்று நாம் வழிபடும் போது வாழ்க்கையில் இருக்கக்கூடிய சங்கடங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

இதனையும்‌ படியுங்கள் : விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபட நினைப்பவர்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறை..!